சிந்திப்போம்
ஒரு நிமிடம் தானே?
சில குழந்தைகள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவர். இன்னும் சிலரோ , இதோ வர்றேன், 10 நிமிடத்தில வர்றேன், 5 நிமிடத்திலே வர்றேன், ஒரு நிமிடத்திலே வர்றேன் என்ற பதிலினைச் சொல்லிவிட்டு மெதுவாக வருவர்.
அருண் இங்கே வா என்று தமிழரசன் மகனைக் கூப்பிட்டார். ஒரு நிமிடத்திலே வர்றேன் அப்பா என்று சொல்லிவிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததில் இருந்து விடுபட்டு எழுந்து இரண்டு நிமிடத் தாமதத்தில் தந்தையின் அருகில் வந்தான்.
அருணின் இச்செயலினைக் கண்ட தந்தை மன வருத்தமுற்றார். அருண், நீ செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. யார் கூப்பிட்டாலும் உடனே வருவதில்லை. பள்ளிக்குச் செல்வதிலும் அதே தாமதம், எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும், படிக்கச் சொன்னாலும், எழுதச் சொன்னாலும் எப்போதுமே ஒரு நிமிடத்திலே வர்றேன், ஒரு நிமிடம் கழிச்சுச் செய்றேன் என்பதே உனது பதிலாக உள்ளது.
அந்த ஒரு நிமிடத்தின் அருமை _ காலத்தின் அருமை உனக்குத் தெரியவில்லை. ஒரு வினாடியே என்றாலும் சென்ற அந்த விநாடி திரும்ப வரப்போவதில்லை. எனவே, காலத்தின் அருமையை உணர்ந்து கடமையாற்றக் கற்றுக் கொள் என்று அன்புடன் அறிவுரை கூறினார்.
தந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான்.
அதற்குள் அருணின் அம்மா குறுக்கிட்டு, தம்பி நேரத்தின் அருமையை நீ எப்போதுதான் உணரப் போகிறாயோ தெரியவில்லை. உன் அறிவாற்றல், புத்திக்கூர்மையைப் பார்த்து நாங்கள் வியந்திருக்கிறோம். ஆனால், உன்னிடமுள்ள இந்த ஒரு நிமிட சோம்பேறித்தனத்தை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறோம். எனவே, அப்பா சொல்வது உனது நன்மைக்கே என்பதைப் புரிந்து நடந்துகொள் என்றார். அருணின் மனமோ எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை.
பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் வாங்கினான். எனினும், அவனிடமிருந்த அந்த ஒரு நிமிடத் தாமதம் மட்டும் மாறவில்லை. பட்ட மேற்படிப்பினைப் படித்துக் கொண்டே, பட்டப் படிப்புத் தகுதிக்கான அரசாங்கத் தேர்வுக்கு விண்ணப்பித்தான். அந்தத் தேர்வில் வெற்றிபெறத் தேவையான அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொண்டான்.
தேர்வு எழுதும் நாளும் வந்தது. மணி அடித்ததும் தேர்வு அறையினுள் அனைவரும் சென்று தங்கள் தங்கள் எண் எழுதப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். வினாத்தாளும் கொடுக்கப்பட்டது.
வழக்கம்போல் அருணின் வாசகமான, ஒரு நிமிடத் தாமதத்தில் தேர்வு எழுதப்போகும் கல்லூரி வாசலில் நுழைந்தான். விரைந்து சென்று தன் எண் எந்த அறையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டான். அறைக்குள் சென்று இருக்கையைத் தேடி அமர்ந்தான். அருண் ஒரு நிமிடத் தாமதமாக வந்தது, அய்ந்து நிமிடத் தாமதத்திற்கு வழிவகுத்தது.
சக மாணவ மாணவியர் தேர்வினை எழுத ஆரம்பித்துவிட்டனர். இதனைப் பார்த்த அருணின் மனம் சற்று படபடத்தாலும் நம்பிக்கையுடன் வினாத்தாளை வாசிக்க ஆரம்பித்தான்.
கேள்விக்கான பதில்களைத் தேர்வுசெய்து வினாத்தாளில் குறித்துக் கொண்டே வந்தபோது, தேர்வு முடிந்ததற்கான மணி ஓசை ஒலித்தது. அனைவரிடமும் வினாத்தாள்கள் வாங்கப்பட்டன. இன்னும் 10 கேள்விகளைப் படிக்க முடியாமல் -_ பதில் குறிக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் அருண் கொடுத்தான்.
அப்போதுதான் அவனது அப்பா, அம்மா கூறிய அறிவுரைகளும், தனது ஒரு நிமிட அலட்சியத்தினால் ஏற்பட்ட பாதிப்பும் _ வலியும் புரிந்தது.