தகவல் களஞ்சியம்
பீரங்கி மரம்
பீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீழே நிற்கக்கூடாது. ஏனென்றால், இப்பழம் கீழே விழும்போது மனிதனின் தலையில் விழுந்துவிட்டால் ஆளையே கொன்றுவிடுமாம். எனவே,இப்பழத்தை ஆட்கொல்லிப் பழம் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், இதன் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து மருந்து தயாரித்து புண்களில் தடவினால் புண்கள் ஆறிவிடுமாம். இலைகளை மென்று சாப்பிட்டால் வாயின் ஈறுகளில் உள்ள நுண் கிருமிகள் வெளியேறி பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுமாம். இந்த மரங்களைத் தமிழ்நாட்டில் சில இடங்களில் காணலாம். இதனை நாகலிங்க மரம் என்று சொல்லுவார்கள்.
செவ்வாயில் மனிதன் தோன்றினானா?
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைக்கோடிப் பகுதியில் ஸ்டெரெலி ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.
ஆனால், புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.
எனவே, உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.