காலத்தால் அழியாத சீர்திருத்தச் செம்மல் குமாரன் ஆசான் (1873 – 1924)
– சாரதா மணி ஆசான்
20ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாறு மறுமலர்ச்சி, சீர்திருத்தம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து துவங்குகிறது. அரசியல் – பொருளியல் உரிமை வாழ்விற்கு முதற்படி சமூக நீதி (Social Justice). அந்நீதி மறுக்கப்படுவதற்குக் காரணமானவை அறியாமை, மூடநம்பிக்கை, பழைமைச் சூது, கொடிய பழக்கவழக்கங்கள், பொருளற்ற சமூக ஏற்பாடுகள் பயனற்ற பழைமையில் பற்று. இவை எல்லாம் அழியவும் – ஒடுக்கப்பட்ட மக்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டு அறிவொளி பெறவும் தாழ்வே விதியென வாழ்ந்தவர்கள் – தலைநிமிர்ந்து வாழ்ந்து வளம்பெறவும் புதிய பாதை அமைத்தவர்தான் கேரளக் கவிஞர் குமாரன் ஆசான். தேங்கிய குட்டையாக விளங்கிய கேரள சமுதாயத்தைத் தெளிந்த நீரோடையாக மாற்ற விழைந்தவர் இவர்.
பிறப்பு:
குமாரன் ஆசான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கேரள நாட்டுத் திருவனந்தபுரத்திற்கு அருகில் கடற்கரைப் பகுதியான காயல்கரை எனும் சிற்றூரில் அஞ்சு தெங்கு எனும் ஏரிப்புறக் கிராமத்தில் ஒரு சிறு வணிகர் குடும்பத்தில் பிறந்தார்.
ஆசானின் ஆசான்:
தாழ்த்தப்பட்ட இனத்தில் – ஈழவர் குலத்தில் தோன்றிய தூயவர் அண்ணல் நாராயண குரு. அவர் தன்னலம் துறந்தவா, உலக நலம் துறவாதவர். இத்தகைய மகானிடம் மனமுவந்து பணிசெய்த மாணவன்தான் குமாரன் ஆசான். குருவிற்கு வயது 36, ஆசானுக்கு வயது 18. செக்கு மாட்டு வாழ்க்கையைச் சகியாது அறிவில் நாட்டம் கொண்ட ஆசானை அண்ணல் நாராயண குரு சந்தித்தார். இளைஞரின் ஆற்றலில் அவருக்கு நம்பிக்கை பிறந்தது. சிறுமையுற்று வீழ்ந்து கிடந்த ஈழவர் குலத்தில் பிறந்த ஆசான் குலத் தாழ்விலிருந்து உயர்ந்து பெருமையுடன் வாழ ஆசைப்பட்டார். தென் திருவிதாங்கூரில் நொய்யலாற்றங்கரையில் – அமைதியான இயற்கைச் சூழலில் அமைந்திருந்த – குரு தங்கியிருந்த அருவிப்புர ஆசிரமத்திற்குச் சென்று ஆசான் உறையலானார். குருவோடு ஊர்கள் பல சென்றார். அனுபவ அறிவு வாய்க்கப் பெற்றார். பொருளியல் சுரண்டலை மேற்கொண்டிருந்த ஆங்கில ஆதிக்கத்தை நேரடியாக எதிர்க்க ஒரு சாரார் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் ஆழ்ந்து சிந்தித்து இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் – பொருளாதார உரிமைக்கு உறுதுணையாக விளங்கும் சமூகநீதி வேண்டி சிறீ நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி.யோகம்) என்ற அமைப்பைத் தம் தூய தொண்டின் பயனாக சிறீ நாராயண குரு துவங்கினார். குமாரன் ஆசான் எஸ்.என்.டி.பி யோகத்தின் செயலராகப் பொறுப்பேற்றார்.
ஆசானின் தன்னலமற்ற சேவை:
பொருள் வளமும், கல்வி அறிவும், சமுதாய உயர்வும் அற்ற மக்களை ஒன்று திரட்டி உய்விக்கும் கடினமான வேலைக்கு அவருடைய அறிவையும் ஆற்றலையும் முழுமையாக ஒப்படைத்தார். ஒப்பற்ற கவித்திறன் கொண்டும் _ சட்ட உறுப்பினர் என்ற நிலையைப் பயன்படுத்தியும் பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றியும் மாநாடுகளில் விளக்கவுரை நல்கியும், கணக்குகளை எழுதி வைத்துப் பொதுப்பணத்தைப் பாதுகாத்து பயனுள்ள காரியங்களுக்குச் செலவு செய்தும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பல்லாற்றானும் உதவினார். பல கூட்டுறவு சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன; வீண் சண்டைகள் தவிர்க்கப்பட்டன. சாராயம், கள் முதலிய குடிகளால் வரும் தீமைகள் சுட்டிக்காட்டப் பட்டன. கல்வியின் சிறப்பைப் பெற்றவனைத் தான் கடவுளும் காப்பாற்ற முடியும் என்ற உண்மை உணர்த்தப்பட்டது; பெண்கல்வி ஊக்குவிக்கப்பட்டது. கல்வியின் மணத்தை அனைவரும் நுகர வாய்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் காட்டிய கொள்கை ஈழவ சமூகத்திற்குப் புத்தொளி காட்டி புதுப்பாதையில் இட்டுச் சென்றது. இதனைப் பின்பற்றி மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைத்தனர். சுருங்கக் சொன்னால் இந்தியாவிலேயே படித்தவர் தொகை மிக்க ஒரு மாநிலமாகக் கேரளத்தை மாற்றிய பெருமை இவர்கள் இருவரையுமே சாரும்.
ஜாதியின் பெயரால் தோன்றிய தடைக்கற்களைப் படிக்கற்களாய் மாற்றி வெற்றிகண்ட திறன்:
ஆசான் வாழ்ந்த காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டுவந்த இந்து அரசர் வருணாசிரம சனாதான – மனுதருமத் திட்டத்தின்கீழ் அமைந்த ஜாதியோடு இணைந்த சமுதாய அமைப்பைக் கட்டிக் காத்து வந்தார். அரச பரம்பரையை ஆட்டி வைத்தவர்கள் பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த வேதியர்கள். இவர்களின் குறிக்கோள் கீழ்ஜாதியினரை அறியாமை இருளில் வைத்து அடக்கி ஆளுதல், பிரித்துப் போரிடுதல், ஒரு குலத்துக்கொரு நீதி பேசுதல் ஆகியவை. குடிசைப் பள்ளி, உயர் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் கற்றுத் தெளிந்த ஆசான் தேர்ந்த கல்விமானாகத் திகழ்ந்தார். நான்கு வருணங்களுக்குள் அடங்காத அவர்னர் குலத்தில் தோன்றியவராதலால், தாழ்த்தப்பட்ட மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் அவர் நன்கு அறிவார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களான ஆதித்திராவிடர்களைத் தமிழகச் சமுதாயம் நடத்தியது போலவே, கேரள நாடு ஈழவர்களை நடத்தியது. தீண்டாமை, அண்டாமை, வேண்டாமை (விரும்பாமை) ஆகியன மலையாள நாட்டில் ஈழவர்களை வாட்டி வதைத்தன. குமாரன் ஆசானின் குடும்பமும், சமுதாய இழிவில் அகப்பட்டுக் கொண்டு அல்லலுற்றது. இதனால் ஆசான் உளம் வருந்தினார்.
மனித இனத்தவரிடை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ் மறையின் உண்மையை உணர்ந்த இவர் ஜாதிகளற்ற சமுதாயம் காண விழைந்தார்.
உயர்ஜாதிப் பிறப்பால் கிடைக்கும் சமுதாய மேம்பாடு _ அதாவது உயர்வு பணத்தாலும், பதவியாலும் பெற முடியாதவை. உலகப் பாட்டாளி மக்களே ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை உங்கள் விலங்குகளைத் தவிர என்ற புரட்சிக் குரலைக் கார்ல் மார்க்ஸ் எழுப்பினார். உழைப்பை விற்று, அன்றாடம் ஊதியம் பெற்று வாழ்பவனுக்கு இழப்பதற்கு ஒன்றுமே இல்லைதான்; ஆனால், உயர்ஜாதிப் படிநிலையைப் பயன்படுத்தி வாழ்வோனுக்குச் சொத்தில்லாவிட்டாலும் ஜாதிப் பெருமை உண்டே! இந்த நிலையில் நம் நாட்டுப் பாட்டாளி மக்கள் ஒன்றுபடுவதெங்கே? எனவேதான் மேலைநாடுகளில் சமத்துவ சமுதாயத்தை நிலைநிறுத்துவதற்கும் நம் நாட்டில் அத்தகையதோர் சமுதாயத்தை நிலைநிறுத்து வதற்கும் இடையே பெரிய முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டை முழுமையாக உணர்ந்து சமுதாய ஏற்றத் தாழ்வைப் போக்க முதலில் மனுநீதியைச் சாடவும் பின்னர் அறிவு வழியில் நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பின்னடைவிற்குக் காரணமான ஜாதி ஏற்பாட்டைத் தகர்க்கவும் ஆசான் அரும்பாடு பட்டார். ஆசான் காட்டிய நெறி அமைதி வழியைத் தழுவியது – அன்பின்பாற்பட்டது. மாறுதல் (பரிவர்த்தனம்) என்ற தலைப்பில் ஆசான் எழுதிய வரிகள் இதனைக் காட்டும்.
சமத்துவமே நம் லட்சியம்,
யாவரும் இங்கு சுதந்திரர்
என்ற முழக்கம் மானுட நேயத்தை உள்ளடக்கியது. சமுதாய மாற்றத்திற்குத் துணை நிற்பது அறிவும் அன்புமே. மார்க்சியக் கருத்துகள் இந்தியாவில் பரவுமுன், இந்தியாவில் சமூக நீதிக்கான போராட்டத்திற்கு வழிகாட்டி நின்ற பேரொளி புத்தமகான். ஆற்றலுக்கெல்லாம் மிகப்பெரும் ஆற்றலாய் விளங்குவது அருள். அருளின் மேன்மையை வைத்துக் கவிபுனையும் ஆற்றல் பெற்ற ஆசான் பவுத்தத் தத்துவங்களை (Themes) மய்யமாக வைத்து பிற்காலத்தில் கதைகள் – கவிதைகள் எழுதினார். அக்கதைகள் வாயிலாக ஜாதியென்ற விலங்கு பூட்டப்பட்ட மக்களை அதிலிருந்தும் மீட்டெடுத்தார். ஜாதியின் பெயரால் சிலருக்குப் பொன்னாலும், இன்னும் சிலருக்கு வெள்ளியாலும், மற்றும் சிலருக்குப் பித்தளையாலும் வேறு சிலருக்கு இரும்பாலும் ஆன விலங்குகள் பூட்டப்பட்டிருக்கலாம். எது எப்படியாயினும் ஜாதி அமைப்பின் கீழ் உள்ளவர்கள் அனைவரும் சிறைப்பட்டவர்கள்தானே? இங்கு உயர்ஜாதிக் குடிமகன் சாதாரண தண்டனையை அனுபவிப்பவனாக இருக்கலாம்; தாழ்ந்த ஜாதிக்காரன் கடுங்காவல் கைதியாக இருக்கலாம். ஆனால் அனைவரும் அனுபவிப்பது வேண்டாத கட்டுப்பாட்டுக்குள் (ஜாதி அமைப்புக்குள்) அடங்கிய சிறைவாழ்வுதானே?
ஆசானின் மறுமலர்ச்சிக் கவிதைகள் சமுதாய நீதியை நிலைநாட்ட விரும்பிய கவிஞர் தம் கவிதைகளைப் புரட்சிப்பாதையில் தளராமல் முன்னெடுத்துச் சென்றார். மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தார். 1919ஆம் ஆண்டு அவர் முழங்கிய சிம்மநாதம் எனும் கவிதை வரிகள்:
விழியுங்கள்! விழியுங்கள்!
என் உடன்பிறப்புகளே, விரையுங்கள்!
போர் முரசு கொட்டுங்கள்! போங்கள்
ஜாதிப் பேய் சேரும் இடம் எல்லாம் சென்று தாக்குங்கள்.
நாராயண குருவுடன் குமாரன் ஆசான்
அழுத்தப்பட்ட மக்களின் ஆவேசக் கேள்விகளை இவர் கவிதைகள் ஏந்திவந்தன.
ஓ இந்தியாவே! நீ ஓலமிடுவதேன்?
ஓ அன்னையே! அடிமை வாழ்வு உன் விதியல்லவா? ஜாதிவெறியில் சண்டையிட்டுச் சாகிறார்கள் உன்மக்கள்
உரிமை எதற்குத் தாயே உனக்கு?
(திய்யாக் குட்டியுட விசாரம்)
பவுத்தக்கதை ஒன்றைக் கொண்டு புனையப்பட்ட பாவியம் சண்டாள பிக்சுகி. இப்பாவியத்தில் இழிகுலப் பெண் தீண்டத்தகாதவள்(மாதங்கி) சம உரிமையும் – சம வாய்ப்பும் கொடுக்கப்பட்ட சூழலில் ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்தவளாக உயர்கிறாள். கற்ற துறவியருக்குச் சரிசமமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெறுகிறாள். மாதங்கியின் உயர்வினைக் காணப்பொறுக்காத பிராமணர்கள் மன்னனிடம் முறையிடுகின்றனர். உயர் ஜாதியினர் தீண்டத்தகாதவளோடு உட்காரு கிறார்கள், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், புனிதநூல் (மனுநீதி) கொள்கைள் அனைத்தையும் எள்ளளவும் மதிப்பார் இல்லை, பலியிட்டு வேள்வி செய்யும் காலம் போயிற்று. வேதங்களைக் கற்பாரில்லை; ஜாதிகள் மறைந்தன. இவ்வாறு இவர்கள் கூக்குரலிட, மன்னன் மற்ற ஜாதியினரையும் அழைத்துக் கொண்டு, புத்தரை அணுகி, அவர் கருத்துப்படி நீதி வழங்குவதென முடிவெடுக்கிறார். ஜாதிச் சண்டைகள் வெட்டி ஆரவாரங்கள் எனக் கூறிய புத்தர் தொடுத்த கேள்விக் கணைகளில் சில வருமாறு:
இரத்தத்திலும், எலும்பிலும்,ஊனிலும் ஜாதியுண்டா? பிராமணனோடு வாழும் தாழ்குலப் பெண்ணிற்குக் குழந்தை பிறக்காதா? நெற்றிப் பொட்டும், புனிதப் பூணூலும், உச்சிக்குடுமியும் பிறப்புடன் வந்தவையா? யாரும் கற்பிக்காமல் பிராமணர்கள் இயல்பாகக் கலைகளைக் கற்கிறார்களா?
நெல்லிடை முளைக்கும் காட்டுப்புல் அல்ல சாதுப் புலையன், சமவாய்ப்புள்ள இடத்தில், அவன் பொன்மணி கொழிக்கும் செடி. இதோ இந்த மாதங்கி, அன்பிற்குரிய என் மகள், அதற்கொரு தெள்ளிய எடுத்துக்காட்டு. மேலும் புத்தர் சொன்னவையாகக் கவிஞர் சொன்னவை: உண்மைக்கும் அறத்திற்கும் ஒவ்வாத போலிக் கொள்கைகளை ஒப்பாதே! நேற்றைய தவறுகளை இன்றைய பழக்கங்களாகவும் நாளைய சாத்திரங்களாகவும் மூடர்கள் கொள்வர். இதை நீ ஏற்காதே! வன்முறைதான் ஜாதி என்பது, அது தந்திரமாக வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது; அது பாவங்களைத் தூண்டுகிறது; வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை ஏதுமற்றதாக்கி விடுகிறது. இத்தகு உண்மைகளை உள்ளபடி பதிவு செய்தவர்தான் குமாரன் ஆசான்.
கவிதையின் தாக்கம்: ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அசைந்து கொடுக்காமல் இறுகிவிட்ட மூடநம்பிக்கை என்ற பாறையைச் சட்டம் என்னும் கடப்பாரை கொண்டு பிளத்தல் கடினமாக இருக்கலாம்; ஆனால், கவிதை எனும் பசுமரத்தின் வேருக்கு அது நெக்குவிடத்தான் செய்கிறது. இந்த உண்மையை மெய்ப்பிப்பவை குமாரன் ஆசானின் கருத்தாழம் மிக்க பாக்கள். அன்பால் அசைக்க இயலாத நெஞ்சங்களுக்கு அவர் எச்சரிக்கை விடவும் தயங்கவில்லை என்பதைக் காட்டும் கவிதை வரிகள்:
நீங்கள் சட்டங்களை மாற்றுங்கள் – அல்லால்
உங்களைச் சட்டங்கள் மாற்றுவது உறுதி!
– (அவலநிலை).