தெரிந்துகொள்வோம்
குழந்தைகள் பலவிதமான பொம்மைகள் வைத்து விளையாடினாலும் குறிப்பிட்ட சில பொம்மைகளை மட்டுமே அதிகம் விரும்புவர். அந்த வகையினுள் தனக்கென தனியிடம் பிடித்திருப்பதே பார்பி பொம்மை. அனைத்துத் தரப்பினரும் வாங்கும் வகையில் 20 ரூபாயிலிருந்தே கிடைப்பது இதன் சிறப்பு. இத்தகு பெருமை வாய்ந்த பார்பி பொம்மைகள் எப்போது தோன்றின? எப்படித் தோன்றின?
அமெரிக்க நிறுவனமான மேட்டல் இங்க் என்னும் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட பொம்மையே பார்பி. பில்ட் லில்லி என்னும் ஜெர்மன் பொம்மையை அடிப்படையாகக் கொண்டு பார்பி பொம்மையை உருவாக்கியதாக இதனை வடிவமைத்த ரூத் ஹேன்ட்லர் கூறியுள்ளார். ரூத் ஹேன்ட்லரின் மகள் காகித பொம்மைகளை வைத்து விளையாடிய போது அவற்றிற்கு பெரியவர்களின் பாத்திரங்களைக் கொடுத்து மகிழ்ச்சி அடைந்ததைப் பார்த்துள்ளார். அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாண்ட பொம்மைகள் மிகச் சிறியதாக இருந்தன. இதனைப் பார்த்த ஹேன்ட்லர், வளர்ந்து பருவமடைந்த ஒரு உடலை பொம்மையாகச் செய்யும் தமது எண்ணத்தை அவரது கணவர் எலியட்டிடம் கூறியுள்ளார். ஹேன்ட்லரின் கணவர் எலியட், மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். எலியட் மற்றும் அவருடன் இருந்த மற்ற இயக்குநர்களில் யாருமே ஹேன்ட்லர் கூற்றில் ஆர்வம் காட்டவில்லை.
1956 ஆம் ஆண்டு ஹேன்ட்லர் தனது குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் அய்ரோப்பியச் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது, பில்ட் லில்லி என்றழைக்கப்பட்ட ஜெர்மன் பொம்மையைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வளர்ந்த மனித உருவம் கொண்ட அந்தப் பொம்மை போன்ற தோற்றமே ஹேன்ட்லரின் மனதினுள் இருந்தது. பார்த்ததும் மகிழ்ச்சியில் 3 பொம்மைகளை வாங்கினார். ஒரு பொம்மையைக் குழந்தைகள் கையில் கொடுத்தார். 2 பொம்மைகளை தனது கணவர் நடத்தும் மேட்டல் நிறுவனத்திற்குக் கொண்டு சென்றார்.
சித்திரப் புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி லில்லி பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது டை பில்ட் ஜியுடுங் என்பவரால் வரையப்பட்டது. 1955 ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெர்மனியில் லில்லி பொம்மை விற்பனைக்கு வந்தது. முதலில் பெரியவர்களுக்கான பொம்மையாக விற்கப்பட்டாலும் குழந்தைகளிடமே அதிக வரவேற்பைப் பெற்றது. அந்தப் பொம்மைக்கேன்றே தனியாகக் கிடைத்த ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தனர் குழந்தைகள்.
அமெரிக்கா திரும்பிய ஹேன்ட்லர், ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியுடன் மீண்டும் வடிவமைத்து பார்பி என்ற புதிய பெயரினைச் சூட்டினார். இந்தப் பெயர் ஹேன்ட்லரின் மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்தது. 1959ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக நாளே பார்பி பொம்மையின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
பில்ட் லில்லி பொம்மைக்கான காப்புரிமைகளை மேட்டல் நிறுவனம் 1964 ஆம் ஆண்டு பெற்றது. முதன்முதலாக உருவாக்கப்பட்ட பார்பி பொம்மை கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை வண்ணத்தில் நீச்சல் உடை மற்றும் அதன் தனிப்பட்ட அடையாளமான உச்சந்தலையில் போனி டெயில் ஆகியவற்றுடன் தோற்றமளித்தது. பதின்வயது நவநாகரிக மாடல் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டது. பொம்மையின் உடைகளை மேட்டல் நிறுவன நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் அமைத்தார்.
பார்பி பொம்மைகள் முதலில் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டன. அறிமுகப்படுத் தப்பட்ட முதல் ஆண்டிலேயே 3,50,000 பொம்மைகள் விற்பனையாகியுள்ளன. தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து விற்பனை உத்திகளை வகுத்துக் கொண்டதில் பார்பி பொம்மை முதலிடத்தைப் பெறுகிறது. 1999 ஆம் ஆண்டு வெளிவந்த டாய்ஸ்டோரி 2 என்ற திரைப்படத்தில் பார்பி பொம்மை சிறிய வேடத்தில் இடம் பெற்றுள்ளது.
– மேகா