விளையும் பயிர்..
பொம்மையின் செவிலி
நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் போதிய அளவு வசதிகள் இருந்ததில்லை. சரியான கவனிப்பும் இருக்காது. இதனை நேரில் பார்த்த சிறுமி, தான் ஒரு சிறந்த செவிலியராக வரவேண்டும் என ஆர்வம் கொண்டார். கௌரவமான பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும் ஆடை உடுத்துதல், செய்யும் செயல்கள் அனைத்தும் செவிலியரைப் போலவே பின்பற்றினார்.
இவர் பொம்மைகளுடன் விளையாடும்விதமே விசித்திரமாக இருக்கும். பொம்மைகளை நோயாளிகளாக நினைத்து விளையாடுவார். நோயாளியைப் படுக்கையில் படுக்க வைப்பதுபோல் பொம்மையைப் படுக்கவைத்து நோயாளிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பது போல் பொம்மைகளைக் கவனிப்பார்.
இவர் செய்யும் இச்செயல்களைப் பார்க்கும் இவரது அக்காவுக்கு மிகுந்த கோபம் வரும். தனது கோபத்தை, நோயாளி பொம்மைகளைத் தூக்கி எறிந்து வெளிக்காட்டுவார்.
அக்காவால் தூக்கி எறியப்பட்ட பொம்மைகளை அழுது கொண்டே எடுத்து வருவார். பொம்மையைப் பார்த்து, என் அக்கா உன்னைத் தூக்கி எறிந்ததில் உனக்கு அடிபட்டுவிட்டதா என்று பரிவுடன் கேட்டு கட்டுப் போட்டுவிடுவார். இப்படி பொம்மைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்த இந்தச் சிறுமி பின்னாளில் மருத்துவ உலகில் அனைவரும் போற்றும் செவிலியராகப் பணியாற்றிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.