ஆளில்லாமல் நகரும் சதுரங்கக் காய்கள்!
GOCHESS எனும் புதிய தொழில்நுட்பம்
ஒரு காலத்தில் அரசர்களின் விளையாட்டு என்று அழைக்கப்பட்ட சதுரங்கம் தற்போது உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களால் வீடுகளில், பூங்காக்களில், பள்ளிகளில், கணினிகளில், இணையத்தில் செல்பேசியில் என எல்லா இடங்களிலும் அனைத்து தரப்பட்ட வயதினராலும் விளையாடப்படுவதை நாம் அறிவோம். வேகமாகச் செயலாற்றும் திறனும், அறிவுக்கூர்மையும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானதாகும்.
இது ஒரு விளையாட்டாக மட்டுமின்றி கலையாகவும், அறிவியலாகவும், நுட்பமாகவும் சில நேரங்களில் மூளை சார்ந்த போர்க்கலையாகவும் கூடப் பார்க்கப்படுகிறது.
மற்ற விளையாட்டுகளைப் போல இந்த விளையாட்டில் யார் வெல்வார்கள் என்பதை கடைசி வரை யூகிக்கவே முடியாது. எளிய விதிகள் ஆனால் சிக்கலான தன்மை கொண்ட இதனை விளையாட மேலும் பற்பல புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர் வல்லுநர்கள். அப்படி என்ன புதுமை என யோசிக்கிறீர்களா?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்துடன் கூடிய GoChess எனப்படும் உலகின் முதல் உண்மையான ரோபோட்டிக் செஸ் போர்டினை அறிமுகப்படுத்தியுள்ளது GoParticula நிறுவனம். அந்நிறுவனம், ஏற்கனவே GoCube மற்றும் GoDice’னை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. GoChess பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாமா?
முதலில் அது என்ன GoChess?
நீங்கள் செஸ் போர்டின் எதிரில் அமர்ந் திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் எதிரில் யாருமே இல்லை. ஆனால், உங்கள் செஸ் போர்டில் எதிர்பக்கச் செஸ் காய்கள் தானாகவே நகர ஆரம்பிக்கின்றன. இப்போது நீங்கள் விளையாட வேண்டும் என்றால் வியப்பாக தானே இருக்கும். அதைத் தான் GoChess செய்கிறது.
நீங்கள் chess விளையாட விரும்புகிறீர்கள். ஆனால், உங்களுடன் விளையாட அருகில் யாருமே இல்லை. கவலையே வேண்டாம். கடல் தாண்டி இருக்கும் யாரோ ஒரு போட்டியாளருடன் நீங்கள் விளையாடலாம்.
விளையாடுவதற்குத் தூரம் ஒரு தடையாக இருக்காது. நம் விருப்பத்திற்கு ஏற்ற எந்த ஒரு போட்டியாளருடனும் எங்கிருந்து வேண்டுமென்றாலும் நேரடியாகவோ, இணைய வழியாகவோ அல்லது AI செயற்கை நுண்ணறிவுடனோ விளையாடலாம். இந்த தொழில்நுட்பம் தான் GoChess.
நீங்கள் விளையாடும் சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்து கொண்டு அந்த நேரத்தில் சிறந்த, மோசமான அல்லது சாத்தியமான எல்லா நகர்வுகளையும் நமக்குப் பரிந்துரைக்கும். அதிலிருந்து தேவையான நகர்வினை நாம் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நம் போட்டியாளரை விஞ்சும் அளவுக்கு ஆலோசனைகளை மட்டும் தான் வழங்கும். நாம்தான் சிறப்பாக விளையாடி வெல்ல வேண்டும்.
ஒரு போட்டி முடிந்ததும் செஸ் காய்கள் தானாகவே அவற்றின் தொடக்க இடங்களை நோக்கி நகர்ந்துவிடும். அவையே வரிசைப்படுத்திக் கொள்கின்றன. GoChess பலகையில் அமைக்கப் பட்டுள்ள நுட்பமான ரோபோக்கள் ஒரே நேரத்தில் பல காய்களை நகர்த்துகின்றன. இதற்கான செயல்முறையைத் தானாக, வேகமாக, மென்மையாக, அமைதியாக செய்து முடிக்கின்றன. எந்த நிலையிலும் விளையாட்டை மீட்டெடுக்க (Undo/Redo) இதில் வாய்ப்புகள் உள்ளன.
உலகம் முழுவதிலும் இருக்கும் செஸ் போட்டியாளர்கள் யாருடனும் விளையாடலாம். பெரிய செஸ் ஜாம்பவான்களோடு போட்டி போடுவது தொடக்க நிலையில் கடினமாக இருக்கலாம். ஆனால், ஒரு புத்திசாலித்தனமான வழிகாட்டி நம் அருகிலேயே அமர்ந்து, ஆலோசனைகளைக் கிசுகிசுத்து ஒவ்வொரு நகர்வுக்கும் நம்மை வழி நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வேலையைத் தான் GoChess AI இயங்கும் பலகை செய்கிறது.
இணைய வழியோ அல்லது நேரடியாகவோ விளையாடின் நகர்வுகளைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு மீண்டும் பார்வையிட்டு நம் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், நிகழ் நேரப்போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பவும் ஏராளமான வசதிகள் இதில் இருக்கின்றன.
நேர்த்தியான வடிவம் மற்றும் இதன் நுட்பமான செயல்பாட்டினால் GoChessஅய் இன்றைய காலகட்டத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாகக் கருதலாம். கடந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு செஸ் விளையாட்டில் அதிகம் பேர் கவனம் செலுத்தி வரும் நிலையில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மேலும் பலபேரை ஊக்குவிக்கும் என்பதில் அய்யமில்லை.