திருவாளர் பரிதாபம்
கொறுக்… கொறுக்… என்று சத்தம்தான் வழக்கமாக இரவில் கேட்கும். அது செவ்வி வீட்டில் வழக்கமான சத்தம். ஆனால் இன்று கதவு தட்டும் புதிய சத்தம் கேட்டது. செவ்வியும் அவள் அப்பாவும் அந்த வீட்டில் வசிக்கின்றார்கள். இன்னொருவரும் வாழ்கின்றார். செவ்வியும் அவள் அப்பா கிடையனும் அந்த ‘இன்னொருவரை இதுவரை மொத்தமாக 200 விநாடிகள் பார்த்திருப்பார்கள். அவர் அவ்வீட்டினைத் தலைகீழாக்கும் எலியார். மிஸ்டர் மிசரபிள் எனச் செவ்வி பேர் வைத்திருந்தாள். அவர் அப்பா அடிக்கடி அது எப்படி ஆண் எலியென்று சொல்கின்றாய் என வம்பிழுப்பார்.
எல்லா வித்தைகளையும் செய்துவிட்டார்கள். சிமெண்ட் போட்டு, இருக்கும் ஓட்டைகளை அடைத்தனர். எலிப்பொறி வாங்கி அதில் தக்காளி, கிடையன் செய்த வடை, வறுத்த மீன், கருவாடு என எதை வைத்தாலும் பொறியில் சிக்காமல் லாவகமாக வைத்த பொருளை மட்டும் சாப்பிட்டுவிடும். ஒருமுறை சிக்கிவிட்டது, அதனைக் கொல்லாமல் இரண்டாம் மாடியில் இருந்து தூக்கிப் போட்டனர். மறுநாள் காலையில், தான் திரும்பி வந்துவிட்டதை ஒரு ஆப்பிளைக் கடித்துவைத்து உணர்த்தியது. ‘கொறுக் கொறுக்’ சத்தம் தற்சமயம் ‘டொம் டொம்’ சத்தமாகக் கேட்டது. வெளியே இரும்புக் கதவு, பின்னர் வாசல் கதவு, அதன் பின்னர் அறைக்கதவு எல்லாம் பூட்டப்பட்டு இருந்தன. செவ்வியும் அவள் அப்பாவும் திடுக்கென எழுந்தனர். கதவு தட்டப்படும் சத்தமேதான். அதுவும் படுக்கையறைக் கதவு. திருடன்கிருடன் வந்துவிட்டானோ என அப்பா அஞ்சினார். செவ்வி விளக்கினை எறியவிட்டு கதவினைத் திறந்தாள். அப்பாவின் உயரத்தில் முக்கால்வாசி இருப்பாள். வரவேற்பறையில் அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
நடுவில் இருந்த சோபாவில் மிஸ்டர் மிசரபிள் அமர்ந்து இருந்தார். கிடையன் உயரத்திற்கு இருந்தது எலியார். மிகப்பெரிய தொப்பை. சிகப்பு நிற ஆடை போட்டிருந்தது. கண்கள் விரிய செவ்வியும் அவள் அப்பாவும் பார்த்தனர். மிசரபிள் தன் காலுக்கு அடியில் ஒரு பெரிய மூட்டையை வைத்து. மிதித்துக்கொண்டு இருந்தது. மூட்டைக்குள் ஏதோ ஒரு உயிரினம் துடிப்பதும் தெரிந்தது.
“அது என்ன பாம்பா?” என்று அலறினாள் செவ்வி.
“திருடன்” என்றது மிசரபிள். எலி பேசியது பெரிய விஷயமாகத் தெரியவில்லை இருவருக்கும். ஏனெனில் அந்த உருவத்தையே ஏற்றுக்கொண்டு இருந்தனர்.
“நான் பாட்டுக்கு வீட்ல ஏதாச்சும் பழம், காய், வெங்காயம், மீன், தக்காளி சாப்பிடலாம்னு வந்தா உங்க வீட்டுக்குள்ள ஒரு திருடன் இருக்கான். எப்படி வந்திருப்பான்னு யோசிச்சிட்டே இருக்கும்போது டக்குன்னு என்னைக் கவனிச்சிட்டான். விடுவேனா நானு, உங்க வீட்ல எவ்ளோ சாப்பிட்டிருக்கேன். உப்பு பாட்டில் எல்லாம் உடைச்சிருக்கேன். ஒரு கோணி எடுத்து தோனி கேட்ச் பிடிக்கிற மாதிரி திருடனை அமுக்கிட்டேன். வாயத்திறந்து ஒரு வார்த்தை பேசல” என்று நடந்ததைக் கூறியது மிசரபிள்.
சோபாவின் எதிரே இருந்த இருக்கையில் அப்பாவும் மகளும் அமர்ந்தனர். ஒரு பேச்சு வார்த்தைக்குத் தயாராவதைப் போல இருவரும் தயாரானார்கள்.
“மிஸ்டர் மிசரபிள் எலியாரே. வீட்டுக்கு நல்லது செய்றேன்னு திருடனைப் பிடிச்சிருக்கீங்க. ஆனால், உங்களால் எங்களுக்கு எவ்ளோ சிக்கல் தெரியுமா? ஒரு பொருளை வெளியே வெக்க முடியல. பேப்பர் எல்லாம் கடிச்சி வெக்கறீங்க. துணியைக்கூட கடிச்சிடுறீங்க. சில சமயம் கதவு எல்லாம் திண்ணு வெச்சிருக்கீங்க. எங்க பார்த்தாலும் குப்பை வேற” – வருத்தத்துடன் பதிவு செய்தார் கிடையன்.
“ஓ, அப்படின்னா மிஸ்டர் கிடையன்! எனக்குன்னு சாப்பாடு தினமும் எடுத்து வெச்சிட்டா நான் பாட்டுக்குச் சாப்பிட்டு ஒரு சந்திலயோ பொந்திலையோ தூங்கிட்டு இருக்கப்போறேன். ஆனா, அப்படிச் செஞ்சாலும் ஒரு கிக் இருக்காது. தேடிக் கண்டுபிடிச்சு, ப்ளாஸ்டிக் டப்பாக்களைக் கடிச்சு முடிச்சு சாப்பிட்றதுதான் சுவையா இருக்கு. உங்க வீட்ல பரவாயில்லை ப்ளாஸ்டிக் டப்பாக்கள் குறைவா பயன்படுத்தறீங்க, ஒரு நாள் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்து ஆட்டம்போட்டோம். அப்ப சொன்னாங்க, “டேய் இந்த வீடு செம அட்டகாசமா இருக்கு’’ன்னு. அப்ப நீங்களும் உங்க பொண்ணும் சிங்கப்பூர் போயிருந்தீங்க”
கேட்கக் கேட்க மயக்கம் வந்தது, கிடையனுக்கும் செவ்விக்கும்.
“ஆனா அடிச்சி விரட்டிட்டேன். அவங்க அவங்க அவங்க வீட்லதான் வசிக்கணும்“ ஒரு நியாயத்தை வேறு மிஸ்டர் மிசரபிள் சொன்னது. “அப்புறம் வாழைப்பழம் வாங்கும்போது ரஸ்தாளியா வாங்குங்க, பச்சை வாழை சுத்தமா சுவையாக இல்லை”
இப்படிப் பேசிக்கொண்டு இருக்கும்போதே அங்கே “மியாவ்” என்று சத்தம் வந்தது. மிஸ்டர் மிசரபிளுக்கு குப்பென வேர்த்துவிட்டது. பூனை என்றால் பயம் இருக்கத்தானே செய்யும்? அதுவும் இல்லாமல் எலியார் மிதித்துக்கொண்டிருந்த கோணியில் இருந்து அந்தச் சத்தம்! சத்தம் அதிகரிக்க அதிகரிக்க எலியாரின் உருவம் சின்னதாகிக்கொண்டே வந்தது. ஓட ஆயத்தமானது. உருவம் குறைந்ததும் கோணி திறந்தது. உள்ளே இருந்து பூனையின் தலை வெளியே எட்டிப் பார்த்தது. அவ்வளவுதான் தாமதம், மிஸ்டர் மிசரபிள் உடு ஜூட்தான். பூனை வேகமாகத் துரத்தியது. வீட்டின் வரவேற்பறையை நான்கு சுற்று சுற்றின இரண்டும்.
செவ்வி பூனையின்முன் கை நீட்டி நிறுத்தினாள்.
“உன்னைச் சத்தம் போடாம வந்து சாப்பிட்டுட்டு இல்ல போகச் சொன்னேன், ஏன் திருடனாக வந்த?” என்று சத்தம் போட்டாள் செவ்வி.
சிரித்த பூனை, “எங்க ஏரியாவில் மாறுவேடப்போட்டி நடந்தது. திருடனாக வேஷம்போட்டு நடிச்சேன். அப்படியே இங்க வந்துட்டேன். கவலை வேண்டாம் எப்படியும் மிசரபிளைப் பிடிச்சிடுவேன். கதவைச் சாத்திட்டு நீங்களும் அப்பாவும் தூங்குங்க” என்று சொல்லி எலியாரைத் துரத்தச் சென்றது.
‘ஓ, இது மகளின் திட்டமா!’ என ஆச்சரியத்துடன் அறைக்குள் சென்றார் கிடையன். அதன் பின்னர் தினமும் ஒரு பழத்தை வீட்டின் பின்புறம் வைத்தாள் செவ்வி. யார் சாப்பிடுவது எனத் தெரியவில்லை. ஆனால், மிஸ்டர் மிசரபிளையும் காணவில்லை பூனையையும் பார்க்கமுடியவில்லை.