சிறார் கதை : வண்ணங்கள் ஏழா?
கவுதம், அருண், சபரி, அபித்யா, ஆதிரா அனைவரும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். அவர்கள் வீடும் அருகில் அருகிலேயே இருந்தது. அவர்கள் வீடு பள்ளியில் இருந்து 2 மைல் தொலைவில்தான். எனவே அவர்கள் மிதிவண்டியில் பள்ளிக்குத் தினமும் செல்வார்கள்.
வாராவாரம் சனிக்கிழமை மாலை அவர்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் அரசனா மலைக்குச் சென்று அங்கு இருக்கும் மூலிகைத் தாத்தாவிடம் கதை கேட்பார்கள். கதை மட்டுமல்ல அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் அவர்களின் கேள்விகளுக்கான பதிலையும் தீர்த்து வைப்பவர் தான் மூலிகைத் தாத்தா.
மூலிகைத் தாத்தா பற்றி ஒரு சிறு அறிமுகம். நல்ல ஆறு அடி உயரம், மாநிறம், சுருங்கிய தோல், பழுப்பு நிற கண்கள், எண்ணெய் வைத்து வாரப்பட்ட தலை, கையில் எப்பொழுதும் ஏதாவது ஒரு புத்தகம், வெள்ளை நிற வேட்டி, வெற்று உடம்பின் தோள்மேல் துண்டு.
அவர் அப்படி மலையில் என்னதான் செய்கிறார்?
அங்கு என்ன இருக்கிறது?
அந்த மலையைச் சுற்றி மூலிகைகள் இருக்கும். அதைப் பறித்து ஆராய்ச்சி செய்வார். அதனாலேயே ஊரில் அனைவரும் அவரை மூலிகைத் தாத்தா என்று தான் அழைப்பார்கள். பெரும்பாலானோர் அவரிடம் சென்று மூலிகை மருத்துவம் பார்த்ததுண்டு.
அன்று சனிக்கிழமை. பள்ளி மதியத்துடன் முடிந்தது. அவர்களின் திட்டப்படி மதிய உணவை வழியில் உள்ள தோட்டத்தில் முடித்தார்கள். அரசனாமலைக்குச் செல்ல வேண்டுமானால் அங்கிருந்து மிதிவண்டியில் செல்ல முடியாது. எப்போதுமே அங்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் கருப்பண்ணசாமி மாமாதான் இவர்களை அந்த மலைக்குக் கொண்டு சென்று விட்டு வருவார்.
அன்று அவர்களைப் பார்த்ததும் “அடடே! என்ன இன்று மதியமே வந்துவிட்டீர்கள்?” என்று கேட்டார். “மாமா இன்று பள்ளி அரை நேரம் தான்” என்றான் ஆதிரா.” சரி சரி மிதிவண்டியைப் பூட்டி சாவி எடுத்துக்கோங்க. தண்ணீர் பாட்டிலில் தண்ணி புடிச்சுக்கோங்க. நான் மேலே கொண்டு போய் விட்டுட்டு வந்துடுறேன்; எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றார் மாமா.
“என்ன வேலை மாமா?” என்றாள் ஆதிரா
“விஜயமங்களம் சென்று கடைகளுக்குக் காய்கறிகளையும் கீரைகளையும் போட்டுட்டு வரனும். நான் வரத் தாமதமானால் தாத்தாவைக் கொண்டுவந்து கீழேவிடச் சொல்லிடுங்க’’ என்றார் மாமா. அனைவரும் மிதிவண்டியைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு, பாட்டிலில் தண்ணீரை நிரப்பி எடுத்துக்கொண்டு மாமாவின் பின்னே நடந்து சென்றார்கள்.
போகும் வழியில் அபித்யா “டேய்! அருண் அங்க பாரு தொட்டாச்சினுங்கி’’ என்றாள். “எங்கே? எங்கே?’’ என்று ஆவலோடு கேட்டான் அருண். அருணுக்கு தொட்டாச்சினுங்கியைத் தொடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அந்த இலைகள் சுருங்குவதைப் பார்த்து ரசிப்பான்.
தொட்டுத் தொட்டு விளையாடுவான். அபித்யா காட்டிய இடத்தை நோக்கி ஓடினான் அருண். மற்ற நால்வரும் அவன் பின்னே ஓடினார்கள். செடியைச் சூழ்ந்து நின்றுகொண்டு அருண் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தான். “கண்ணுகளா சரி சரி வாங்கடா… எனக்கு நேரமாச்சு’’ என்று கருப்பண்ணசாமி மாமா அழைக்க அனைவரும் அவர் பின்னே சென்றார்கள்.
“ஆமா இந்த வாரம் என்ன கேள்வி கொண்டு போயிட்டு இருக்கீங்க தாத்தாட்ட கேக்குறதுக்கு?’’ என்று கருப்பணசாமி மாமா கேட்க,
“மாமா அடுத்த வாரம் எங்க பள்ளிக்கூடத்துல ஒரு பொருட்காட்சி வைக்கப் போறாங்க, அதுல அறிவியல் தொடர்பா ஏதாவது வைக்கச் சொல்லி இருக்காங்க. அதைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றான் சபரி.
“என்ன வைக்கலாம்? மாமா, நீங்க ஏதாவது யோசனை சொல்லுங்களேன்?’’ என்றான் கவுதம். “எனக்கு என்னடா தெரியும், வீடு தோட்டம் தோட்டம் விட்டா ஆடு, மாடு, கோழி தான் தெரியும். இன்னைக்கு வானத்தைப் பாரு. மழை வர மாதிரி இருக்குது. கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுங்க’’ என்றார் மாமா.
எல்லோரும் வானத்தைப் பார்க்க வானம் சற்றே கருத்துக் காணப்பட்டது. பேசிக் கொண்டே குடிசையை அடைந்தார்கள். “சரி சரி நான் கிளம்பறேன். இன்னிக்கு தாத்தாவை கீழே கூட்டிட்டு வந்துவிடச் சொல்லிடுங்க’’ என்று கூறிக் கிளம்பினார் கருப்பணசாமி மாமா. அந்தக் குடிசையின் முன்புறம் இரு திண்ணைகள் குடிசைக்குள் வலது மூலையில் சிறு மண் அடுப்பு மண்ணால் செய்யப்பட்ட சமையலறைப் பொருட்கள் மற்றும் மண் பானை என்று எல்லாமே இயற்கை சார்ந்து இருக்கும்.
தாத்தாவைச் சந்திக்கும் முன் நெகிழியால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் தான் பயன்படுத்தி வந்தார்கள். இப்பொழுது சில்வர் பாட்டில்களுக்கு மாறியுள்ளார்கள்.
அப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்து அமர்ந்து புத்தகம் வாசித்துத் கொண்டிருந்தார் தாத்தா. இவர்களைப் பார்த்ததும் மகிழ்வோடு “வாங்கடா கண்ணுங்களா! இந்த மொட்ட வெயிலில் வந்திருக்கிறீர்கள், சாயந்திரமா வந்திருக்கலாமே’’ என்றார் தாத்தா.
“இன்று பள்ளி அரை நேரம்தான், அதுவுமில்லாம எங்களுக்கு ஒரு பொருட்காட்சி வருது. பள்ளிக்கூடத்தில் நாங்க ஏதாவது அறிவியல் சம்பந்தமாக செஞ்சு வைக்கலாம்னு இருக்கோம் தாத்தா’’ என்றாள் ஆதிரா.
“அது மட்டும் இல்ல தாத்தா, போன வாரம் மழை வந்து நின்றதும் வானவில் பார்த்தோம். அப்போ வானத்துல மூனே மூனு நிறம் தான் தெரிஞ்சுது. சபரி சொன்னான்… சில நேரங்களில் மூன்று மட்டுமே தெரியும் மற்றவை மேகத்தில் மறைந்திருக்கும் என்று. நீங்களே சொல்லுங்க! ஏழு நிறம் தானே எப்பவுமே வானவில்லில் தெரியும் அது எப்படி மூன்று நிறம் தெரியும்?’’ என்றாள் ஆதிரா.
இல்லை நான் கூடப் பார்த்தேன் என்று சபரிக்கு ஆதரவு தெரிவிக்கக் கவுதம் துணை வந்தான்.
“சரி! சரி! உங்க சண்டையை நிறுத்துங்கள் உங்களுக்கு வானவில்லைப் பற்றி என்ன என்ன எல்லாம் தெரியும் அத சொல்லுங்க? அதன்பிறகு நான் இதற்கான விளக்கத்தைக் கொடுக்கிறேன்.’’
“சரி தாத்தா வானவில்லில் ஏழு நிறம் இருக்கும் சரியா?’’ என்று முந்திக் கொண்டு சொன்னான் கவுதம். “இது யாருக்குத்தான் தெரியாது’’ என்று கூறினாள் அபித்யா.
“மழை நின்றபின் சிறிது வெயில் வரும் அதன்பின் வானவில் வரும்.’’
“ம் சரி. வானவில் எப்படித் தோன்றுகிறது? யாருக்காகவது தெரியுமா?”
“எனக்குத் தெரியுமே மழைத் துகள்களின் உள்ளே, சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் போது வானவில் தோன்றுகிறது சரிதானே தாத்தா’’ என்றான் அருண்.
“அருமை” என்று அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார் தாத்தா. “ஆமா வானவில்லில் ஏழு நிறங்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?’
“ஓ தெரியுமே, ஐசக் நியூட்டன்தானே” என்றான் கவுதம்.
சரியாக சொன்னாயடா செல்லம்.
சரி இப்ப நான் சொல்வது புதிய செய்தி, வானத்தில் வானவில்லில் ஏழு நிறங்கள் எப்பவுமே தோன்றும் என்கிற அவசியமே இல்லை.
குறிப்பாக காலை மாலை வேளைகளில் தோன்றும் வானவில்லில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டும்தான் தோன்றும் ஊதா, கருநீலம், நீலம், பச்சை ஆகிய நிறங்கள் தோன்ற வாய்ப்பில்லை. வானவில்லில் 12 வகை இருக்கிறது என்று அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.’’
“யார் தாத்தா கண்டுபிடிச்சி இருக்காங்க? என்றான் கவுதம்.” பிரான்ஸ் நாட்டு வானவில் ஆராய்ச்சி மையம் தான் கண்டுபிடித்து இருக்கிறது. வானவில் நிறங்கள் தெளிவாகத் தெரிவது மழைத் துகள்களின் அளவைப் பொறுத்து தான். அதன் நிறங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிப்பது தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் தான் என்றார் தாத்தா.
“ஓ! அப்படியா தாத்தா” என்றாள் ஆதிரா.
“அதுமட்டுமில்லை, சூரியன் தொடுவானத்திற்கு வெகு அருகில் இருக்கும்போது தோன்றும் வானவில்லில் சிவப்பு நிறம் மட்டும்தான் தோன்றும்.
தொடுவானத்திலிருந்து சூரியன் இன்னும் சற்று மேலே 70 டிகிரி கோணத்தில் இருக்கும்போது தோன்றும் வானவில்வில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்கள் தோன்றும்.”
“பாருடா இது தெரியாமல் நாங்கள் இத்தனை நாளா வானவில் என்றாலே கண்டிப்பாக ஏழு நிறங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தோம்” என்றான் கவுதம்
“இது எப்போ தாத்தா கண்டுபிடிச்சாங்க?’’ என்றாள் அபித்யா. “இது கொஞ்ச நாள் முன்னாடி தான் கண்டுபிடிச்சாங்க; செய்தித்தாளில் தான் படிச்சேன். செய்தித்தாள் தினமும் மலைக்குக் கொண்டு வந்து தருகிறார்களா தாத்தா?” என்றான் அருண்.
“இல்லப்பா, நான் வாரம் ஒருமுறை விஜயமங்களம் சந்தைக்கு வருவேனல்லவா! அங்கு புத்தகக் கடைக்காரரரிடம் சொல்லி வைத்திருக்கேன். அவரு அந்த ஏழு நாள் செய்தித் தாள்களையும் வாங்கி வைத்திருப்பார். நான் சந்தையில் அரிசி பருப்பெல்லாம் வாங்கி முடித்துவிட்டு வந்து செய்தித் தாள்களையும் வாங்கிட்டு புதிதாக ஏதாவது புத்தகம் வாங்கி வைத்திருப்பார் அதையும் வாங்கிட்டு வந்து விடுவேன்.
அனைவரும் புத்தகம் படித்தால் மட்டும் போதாது, செய்தித்தாளும் படிக்க வேண்டும். ஆமாம் கண்ணுகளா செய்தித் தாளில் வருகின்ற செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சரி தாத்தா. போதும் போதும், கதை சொல்லுங்க தாத்தா” என்று தாத்தாவைச் சுற்றி அமர்ந்தார்கள் அனைவரும். தாத்தா ஒரு ஊர்ல என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.