இளமையில் துள்
– சிகரம்
இளமையில் கல்! என்ற பழங்கால அறிவுரை பலராலும் அறியப்பட்டதாகும். அது ஏற்புடைய நல்லுரை என்பது மட்டுமல்ல, இளைஞர்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமாகும். காரணம், இளமையில் கற்கக்கூடிய கல்வி, பசுமரத்தாணிபோல் பதியும்; எளிதில் மறக்காது; வாழ்நாள் முழுவதும் மனதில் நிற்கும்.
மேலும், இளம் வயதில் மூளை தெளிவாகவும் குழப்பம், சிக்கல், உளைச்சல் இன்றியும் இருப்பதால் கவனச் சிதறல் இன்றி கற்கவும் முடியும் என்பதால் இக்கருத்தை வலியுறுத்தினர். ஆனால், இளம் வயதில் கற்றல் மட்டுமே கடமை என்று எண்ணி பெற்றோர்கள் பிள்ளைகளை 2 வயதிலே பள்ளியில் தள்ளி பாழ்ப்படுத்துகின்றனர்.
படிப்பு எந்த அளவிற்கு முதன்மையானதோ அதே அளவிற்கு குழந்தைகள் நன்கு விளையாட வேண்டியதும் கட்டாயக் கடமையாகும். நல்ல வலுவான வளமான உடலில்தான், திடமான திறமான மூளையும் இருக்கும். நலமற்ற உடலுள்ள மூளை பயனற்றுப் போகும்.
எனவே, இளமையில் குழந்தைகள் துள்ளிக் குதித்து சுறுசுறுப்பாக விளையாட வேண்டும். இதன் மூலம் மனம் மகிழ்வதோடு மன இறுக்கம் அகல, உடல் வலிமையும் வளமையும் பெறும். மூளையும் சுறுசுறுப்பாகவும், தெளிவாகவும், கூர்மையாகவும் இயங்கும். குறிப்பாக, மாலை நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் பல்வேறு வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். ஓடுதல், தாண்டுதல், குதித்தல், நீந்துதல், சடுகுடு அடித்தல் என்று சூழலுக்கு ஏற்ப பல விளையாட்டுகளை விளையாட வேண்டும். மாறாக, கிரிக்கெட் மட்டையை எடுத்துக் கொண்டு மணிக்கணக்கில் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருக்கும் தற்கால நிலை விளையாட்டல்ல. நமது பாரம்பரிய விளையாட்டுகள் எல்லாம் உடலுக்கும் அறிவுக்கும் உகந்தவை.
விளையாடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு கேரம், செஸ், வீடியோ கேம் என்று மூழ்கிக் கிடப்பது விளையாட்டல்ல. அவை உடல் நலத்திற்குக் கேடானவை. இவை ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்ற அளவில் வேண்டுமானால் செய்யப்படலாம். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் தினம் 1 மணி நேரமாவது வியர்க்கும்படி விளையாட அனுமதிக்க வேண்டும். ஆவன செய்ய வேண்டும். தேர்வு நாளில்கூட ஒரு மணி நேரம் விளையாடலாம், தவறில்லை. தேர்வு காலங்களில் அதிக நேரம் கண் விழித்துப் படிப்பதைத் தவிர்த்து இரவு 10.30 மணி வரையிலும், காலை 5 மணி முதலும் படிப்பது நல்லது.
காலையில் அரை மணி நேரம் எளிய யோகாசனப் பயிற்சி செய்வது நல்லது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை திறந்த வெளியில் விளையாட வேண்டும். அளவான சத்தான உணவு உண்ண வேண்டும். செயற்கையான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள், பருப்புகள் உரிய அளவு சாப்பிட வேண்டும். சுவையாக இருக்கிறது என்று கேடான உணவுகளை உண்பதைத் தவிர்த்து, நல்ல உணவுகளைச் சுவையாகச் செய்து உண்பதே உகந்தது ஆகும்.
வளமான நலமான வாழ்விற்கு இளமைத் துள்ளல் இன்றியமையாதது. புத்தகப் புழுவாக அறைக்குள் அடைபடாமல், கணினியிலும், செல்பேசியிலும் காலம் கழிக்காமல், ஓடியாடி விளையாடி உற்சாகமும் உடல்நலமும் பெறவேண்டும். பிஞ்சுகளைப் போல பெரியவர்களும் இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.