அறிவியல் உலகின் அற்புத மனிதர் சர்.அய்சக் நியூட்டன் {1642 – 1727}
– சாரதாமணி ஆசான்
அறிவியல் கல்விக்கும், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தியவரும் – அறிவியலையே தனது வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தவரும் ஆராய்ச்சிகளின் தந்தையாக விளங்கிய அற்புத மனிதர்தான் சர். அய்சக் நியூட்டன்.
பிறப்பும் இளமையும்:
1642ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் ஏசுநாதர் பிறந்த அதே நாளில் இங்கிலாந்து நாட்டில் இலங்காசையர் எனுமிடத்தில் ஒரு விதவைத் தாய்க்குப் பிறந்தார். இவர் பிறந்த நாளில் இவரைக் கண்டு மகிழ இவரது தந்தையார் இல்லை; எனினும் பிற்காலத்தில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The best and invaluable gem of Mankind) என்று மக்களால் பாராட்டத்தக்க பண்பாளராகவும் – படைப்பாளராகவும் விளங்கினார்.
இளம் வயதிலேயே தன்னார்வம் மிக்கவர். சுயசிந்தனையும் சுய முயற்சியும் உடையவர். தமது கையாலேயே ஒரு காற்றாலையின் மாதிரியை அமைத்தார். கல்லினால் கதிரவ நிழற்கடிகை ஒன்றையும், நீர்க் கடிகாரங்களையும் வடிவமைத்தார். அத்துடன் சித்திரங்கள் வரைதல் – புத்தகங்கள் படித்தல் – மரத்தாலான மாதிரி உருவங்களை வடிவமைத்தல் – பூக்களையும் பல்வகைப் பூண்டுகளையும் திரட்டுதல் – பகற்கனவு காணல் ஆகியவை இவரது இளமைக்காலப் பொழுதுபோக்குகள்.
இவரது தாயார் இவரைத் தமது பண்ணை வீட்டின் மேற்பார்வையாளராக நியமிக்க விரும்பினார். ஆனால், அவ்வேலையில் இவருக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்பதை அறிந்து கற்றலில் ஆர்வம் கொண்ட இளம் அய்சக் நியூட்டனை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவராகச் சேர்த்தார்.
கல்லூரி வாழ்வு:
18 ஆண்டுகள் நிறைவுற்ற இளவல் நியூட்டன் 1661இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில விரும்பினார். எனினும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை இவருடைய நுண்ணறிவுக்குச் சற்றும் ஏற்றதாக இல்லை. வெற்றுத் தாள்களில் உள்ளவற்றை அப்படியே படிப்பதில் சிந்தை வளம் கொண்ட இவர் உள்ளத்திற்கு உவந்ததாக இல்லை. புதியனவற்றைக் கற்க வேண்டும் என்ற ஆர்வலரான இவர் பிளேட்டோ எனது நண்பர். அவரது மாணவர் அரிஸ்டாட்டிலும் எனது நண்பர் எனினும் என்னுடைய அருமை நண்பர் உண்மை மட்டுமே என்று தமது உள்ளக் கிடக்கையை உள்ளவாறே குறிப்பிட்டுள்ளார்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருளில் உள்ள மெய்ம்மையை மட்டும் ஆய்ந்தறியும் இவர் ஒரு பகுத்தறிவுவாதி என்பதில் அய்யமில்லை. இந்த வழியைத்தானே 20ஆம் நூற்றாண்டில் தந்தை பெரியார் தனக்கே உரிய தனித்தன்மையுடன் பின்பற்றி வெற்றிக் கனியைத் தட்டிச் சென்றுள்ளார்.
ஒரு முறை பல்கலைக்கழகத்தில் படித்துவந்த நியூட்டன், ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்கு கொண்டார். கணக்கியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜோதிட நூலை ஆர்வமிகுதியால் வாங்கிக் கற்க விரும்பினார். கணக்கில் ஆழ்ந்த புலமை இல்லாத இவரால் அந்நூலை முழுவதுமாகக் கற்க இயலவில்லை எனினும் கணிதம் கற்கப் பேரவாக் கொண்டார். முக்கோணவியல் (Trigonometry), வடிவியல் (Geomery), வகைநுண் கணிதம் (differential Calculus), தொகைநுண் கணிதம் (Integral Calculus) போன்ற பல்வேறு துறைகளில் தமது படைப்புகளைப் பயனுள்ள வகையில் படைத்து கணிதத்தில் கால்பதித்தார்.
இவ்வாறு இவர் கணிதத்தில் சிறந்து விளங்க இவருக்குப் பெருந்துணை புரிந்தவர் அவரது கணிதப் பேராசிரியரான அய்சக் பார்ரோ என்பவர் ஆவார். நியூட்டனிடம் இருந்த தனித்திறமைகளை நன்குணர்ந்த பார்ரோ அவருடன் நட்புரிமையுடன் பழகி கணித இயலில் இவருக்கிருந்த திறமைகளை மேன்மேலும் வளர்ப்பதற்கான ஆர்வமூட்டினார். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமல்லவா? 1665ஆம் ஆண்டு இவர் பி.ஏ.பட்டம் பெற்றார். அறிவியல் துறையில் இவர் தொடர்ந்து பல சாதனைகள் புரிந்தவண்ணம் இருந்தார். இவர் ஒருமுறை பிறர் நமக்காகச் செய்வார்கள் என்று காத்திருப்பதால் நாம் ஒன்றையுமே பெற முடியாது என்று கூறிய இவர் தாம் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் தானே செயல்முறை விளக்கம் தந்து மனநிறைவு பெறுவதாகவும் தமது கண்டுபிடிப்புகளுக்குப் பிறர் செயல்வடிவம் தரும்போது தம் நோக்கம் நிறைவடையாமல் போகும்போது மனச்சோர்வு ஏற்படும் என்றும் அதனால் கண்டுபிடிப்பின் முழுப்பயனும் கிட்டாமல் விரயமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வில் ஏற்பட்ட திருப்பம்:
1665ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நியூட்டன் அங்கேயே உயர் கல்வி கற்க விரும்பினார். அந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியது. உயிர்களைச் சூரையாடிச் சென்றது. நாட்டு மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் அந்நோய்க்கு இரையாகி மாண்டனர். இச்சூழலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. பல்கலைக்கழகத்திலிருந்து விடுமுறையைக் கழிக்க பண்ணை வீட்டிற்கு (இலங்காஷையருக்கு அருகில் உள்ள உல்ஸ்தோர்ப் என்னும் இடம்) வந்த நியூட்டன் தமது தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்தார். அப்போது ஓர் ஆப்பிள் பழம் இவர் மீது விழுந்தது. பழம் ஏன் மேலே போகவில்லை. அது கீழே விழுவதற்கு என்ன காரணம் என்று நியூட்டன் யோசித்தார். பழம் தனக்கு இடதுபுறமோ, வலதுபுறமோ செல்லாமல் அது கீழே விழுவதற்கு புவியின் மீதுள்ள ஏதோ ஓர் ஈர்ப்பு விசை என்பதை உணர்ந்தார். இதன் பலனாகத்தான் புவியீர்ப்பு விசையை முதன்முதலாகக் கண்டுபிடித்தார்.
அவர் விடுமுறையில் தனது தாயுடன் 18 மாதங்கள் தங்க வேண்டி இருந்தது. அந்த நாட்கள் மனித சமுதாயம் மேம்படவும் – அறிவியல் யுகத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தவும் – புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் இடவும் இவர் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது எனலாம். ஒன்றரை ஆண்டு காலம் உயர் படிப்பைத் தொடர முடியவில்லை எனினும் கிடைத்த நேரத்தைப் பயனுடைய வகையில் கழிக்க இவர் பண்ணை வீட்டில் போதிய அவகாசம் கிடைத்தது. ஓய்வு நேரத்தில் சிந்தித்து சிறந்த முடிவுகளைக் காண இஃது ஓர் வாய்ப்பாக மலர்ந்தது. அறிவியல் துறையில் இவருக்கு ஆர்வத்தைத் தூண்டியவர்கள் கெப்லர், கலிலியோ மற்றும் கோபர்நிக்கஸ் ஆகியோர். தமக்கு முன்னால் அறிவியல் துறையில் உழைத்து மறைந்தவர்களை இவர் இவ்வாறு நினைவு கூர்கிறார். பிறர் கண்டிருந்தவற்றைக் காட்டிலும் அதிகத் தொலைவில் உள்ளவற்றை நான் கண்டிருக்கிறேன் என்றால், பேரறிவுள்ள பெருமக்களின் தோள்களின் மீது ஏறி நின்று பார்த்ததே அதற்குக் காரணம் என்று அவர் கூறினார். இஃது அவரது தன்னடக்கத்தை உலகினுக்கு எடுத்துரைக்கிறது எனலாம்.
இவரது படைப்புகளும் அதனால் சமுதாயம் பெற்ற பயன்களும்:
1684ஆம் ஆண்டு எட்மட் ஹாலின் என்ற அறிஞர் நியூட்டனைக் காண வந்தார். கோள்களின் இயக்க விதிகள் பலவற்றைப் பற்றி நியூட்டன் மிகவும் நுட்பமாகவும், விவரமாகவும் ஆராய்ந்து முடிவு கண்டிருந்தார் என்பதை அறிந்த எட்மன் ஹாலின் அக்கோட்பாடுகளைப் பற்றி நியூட்டனிடம் விவாதிக்க நினைத்து அவரிடம் வந்தார். ஹாலின் பிரபஞ்ச ஈர்ப்பு விதி பற்றிய விளக்கங்களை நியூட்டனிடம் அறிந்து தெளிந்து அதனை நூலாக வெளியிட ஆர்வம் கொண்டார். அவரது தூண்டுதலால்தான் நியூட்டன் பிரின்ஸிப்பியா என்ற நூலை 3 பகுதிகளாக இலத்தீன் மொழியில் எழுதி வெளியிட்டார். அக்காலத்தில் இலத்தின் மொழி அறிவியல் மொழியாக இருந்ததே இதற்குக் காரணம். இந்நூலினை விஞ்ஞானத்தின் கணித – இயல் தத்துவங்கள் என்று மொழிபெயர்த்துக் கூறலாம்.
நியூட்டன் கண்டுபிடிப்புகளில் மக்களால் பெரிதும் அறியப்பட்டவை அவரது இயக்க விதிகள். (Newton’s Laws of Motion).
. இயக்க விதியின் முதல் விதி:
அசையா நிலை விதி:
புறவிசை செயல்படாத வரை ஒரு பொருள் அமைதி நிலையில் இருந்தால் அமைதி நிலையிலும் அல்லது ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான வேகத்துடன் நகர்ந்து கொண்டிருந்தால் அதே வேகத்தில் நகர்ந்து கொண்டும் இருக்கும்.
இரண்டாம் விதி: நகர்ச்சி விதி:
ஒரு விசையானது ஒரு பொருளின் மீது செயல்படும்போது அப்பொருளின் இயக்கத்தில் ஏற்படும் முடுக்கம், அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதாகும்.
F= m x a a= முடுக்கம் m= பொருண்மை
மூன்றாம் விதி: வினை மற்றும் எதிர்வினை:
ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையாண எதிர்வினை உண்டு (Re-action) இவ்விதிகளின் படைப்பால் இவர் அறிவியல் உலகில் இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்பட்டார். தொடர் ஆராய்ச்சிகளின் விளைவாக பல்வேறு துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
பிறதுறைப் படைப்புகள்:
கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் இருந்த குறைகளை நீக்கி, குவி வில்லைகளை மாற்றி புதுவடிவம் தந்தார். விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு இவரது கண்டுபிடிப்புகள் இன்றும் பயன்படுகின்றன.
ஒளியின் நிறப்பிரிகை – மற்றும் நிறமாலை ஆகியவற்றை முதன்முதலில் கண்டறிந்தவரும் இவரே.
இவர் பெற்ற தகுதிகள்:
பொதுவாக சர் பட்டம் இராணுவத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது. அம்முறையை மாற்றி அறிவியலில் நுட்பங்களை உலகுக்கு உணர்த்திய இவருக்கு முதன்முதலாக அப்பட்டத்தைக் கொடுத்துப் பெருமை தேடிக் கொண்டது இங்கிலாந்து அரசு. அரசர்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் தகனம் செய்யப்படும் வெஸ்ட் மினிஸ்டர் அபே எனும் இடத்தில் இவரது புகழ் உடலினை அடக்கம் செய்து பெருமை சேர்த்தனர் அந்நாட்டு மக்கள்.