பூமியின் வயது என்ன?
மனிதர்களுடைய வயதைக் கணக்கிடுவது போல் பூமியின் வயதையும் கணக்கிடலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
பூமியின் வயது என்ன என்று கணக்கிட, கடலின் வயது என்ன என்று ஆராய்கின்றனர். கடலில் உள்ள உப்பின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஓராண்டில் சேரும் உப்பின் அளவு எவ்வளவு எனக் கண்டறிந்தனர். கடல் நீரில் உள்ள மொத்த உப்பின் அளவை, ஓராண்டில் சேரும் உப்பின் அளவைக் கொண்டு வகுத்தால் கடலின் வயது சுமார் 300 கோடி ஆண்டுகள் என்று கண்டறிகின்றனர். கடல் தோன்றுவதற்கு முன்பே பூமி தோன்றியதால் பூமியின் வயது 300 கோடி ஆண்டுகளுக்கும் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர்
கடலின் வயதைக் கொண்டு பூமியின் வயதைக் கண்டறிவது போல் பாறையின் வயதைக் கண்டறிந்து அதன் வாயிலாகப் பூமியின் வயதைக் கண்டறியும் முறையும் உள்ளது.
பாறைகளில் படிந்துள்ள யுரேனியம் கதிரியக்கத் தன்மை உடையது. அதாவது, கதிரியக்கத் தன்மை காரணமாக யுரேனியம் படிப்படியாகச் சிதைந்து கடைசியில் காரீய உலோகமாக மாறிவிடுகிறது. இவ்விதம் யுரேனியம் சிதைய எவ்வளவு காலம் ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு பாறையில் எஞ்சி இருக்கும் யுரேனியத்தின் அளவைக் கொண்டு கணக்கிட்டால் பாறைகள் குறைந்தபட்சம் 350 கோடி ஆண்டு வயது கொண்டவை எனத் தெரிகிறது.
பூமியும் இதர கோள்களும் ஒரே வேளையில் தோன்றியன எனக் கருதுவர். விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்துள்ள விண்கற்கள் உருக்குலைந்து உடைந்த கிரகத்தின் துண்டு துணுக்குகள் என்று கருதுவர்.
எனவே, பூமியில் வந்து விழுந்துள்ள விண்கற்களை வைத்து ஆராய்ந்தால் அவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்று தெரிய வந்துள்ளதால் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகளுக்கு அதிகமாகலாம். எனவே, பூமியின் வயது குறைந்தபட்சம் 450 கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
சூரியனின் வயது சுமார் 500 கோடி ஆண்டுகள் என்பர். சூரியனிலிருந்துதான் பூமி தோன்றியது என்று நம்புகின்றனர். எனவே, பூமியின் வயது சுமார் 500 கோடி ஆண்டுகளாகவும் இருக்கலாம்.
எனினும், இவையெல்லாம் வெறும் குத்துமதிப்பான கணக்குகள்தான். சில நூறு கோடி ஆண்டுகள் கூடக் குறைய இருக்கலாம்.
- ந.க.மங்களமுருகேசன்