விளையும் பயிர்
ஏழைக் குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சிறுவன் வரும் வழியில் விவசாயிகள் சிலர் தங்கள் வேலையினை முடித்துவிட்டு, கரை ஏறி மேலே வந்து சாப்பிட அமர்ந்தனர்.
மிகவும் மோசமான நிலையில் உலர்ந்து கெட்டுப் போயிருந்த ரொட்டித் துண்டுகளைப் பசியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சிறுவனின் மனம் துன்புற்றது. விவசாயிகளின் அருகில் சென்று, இவ்வளவு மோசமான உணவினை ஏன் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான்.
சிறுவனின் இரக்க உணர்வினை – அன்பினைப் பார்த்த விவசாயிகள், தம்பி, எங்கள் தலைவிதி இது. இதைவிட நல்ல உணவு எங்களுக்கு எவ்வாறு கிடைக்கும் என்றனர்.
விவசாயிகளின் பதிலில் அதிர்ச்சியடைந்த சிறுவன், நீங்கள் வயலில் இறங்கிக் கடுமையாக வேலை செய்கிறீர்கள். தானியங்களை விளையச் செய்கிறீர்கள், மற்றவர்களும் சாப்பிடுவதற்காகப் பாடுபடும் உங்களுக்குத்தானே நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்றான்.
நீ சொல்வது உண்மை தம்பி. நாங்கள் உழைத்த பயன் அனைத்தையும் அரசாங்கம் அள்ளிக் கொண்டு போய்விடுகிறதே. என்ன செய்ய, நாங்கள் இந்த உணவைத்தான் சாப்பிட்டாக வேண்டும் என்று வேதனையுடன் கூறினர் விவசாயிகள்.
சிறுவனை அதிகம் சிந்திக்க வைத்தது விவசாயிகளின் பதில். ஆழ்ந்த சிந்தனை, எதிர்காலத்தில் விவசாயிகளின் உரிமையைப் பெற பாடுபட வேண்டும் என்ற எண்ணத்திற்கு வித்திட்டது.
இச்சிறுவன் பின்னாளில் தனது எண்ணங்களைச் செயலில் கொண்டு வந்து ஒவ்வொரு துறையிலும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு சோவியத் யூனியனில் புரட்சியை ஏற்படுத்தி மாபெரும் தலைவராகப் போற்றப்படும் ஜோசப் ஸ்டாலின்.