அறிவியல் ஆத்திசூடி
அறிவியல் ஆத்திசூடி
அவனென்ற கருத்தின்றி அசைவில்லை என்பது அறியாமை
அணுவென்ற பொருளின்றி அசைவில்லை என்பது அறிவுடைமை
ஆத்திகம் உண்டியல் வைப்பது
நாத்திகம் அதற்குப் பூட்டுப் போடுவது
இல்லாததற்கு இருப்பு என்பதில்லை
இருப்பதற்கு இல்லை என்பதில்லை
ஈக்களுக்கு ஒரு கடவுள் தேவைப்பட்டால்
ஈயாகத்தான் அக்கடவுள் இருப்பார்
உயிரற்ற உடல் இருக்கலாம்
உடலற்ற உயிர் இருக்க முடியாது
ஊனுடம்பு இல்லாமல் உயிர் இல்லை
உயிரும் உணர்வும் உடம்புடன் அழியும்
எல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறது
எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது
ஏன் எதற்காக என்று கூர்மையான அறிவால்
எண்ணிப் பார்ப்பதே பகுத்தறிவு
அய்ம்புலன்களால் உணரப்படாத எதுவும் உலகத்தில் இல்லை
அய்ம்புலன்களின் அனுபவங்களில் வருவதுதான் பகுத்தறிவு
ஒருவரின் சிந்தனை தர்க்க முறையில் செயல்பட்டால்தான்
உண்மை எது! பொய் எது! என்பது புலனாகும்
ஓதும் வேதத்திலும் ஜாதி இருக்கும்
ஓடப்பராயிருக்கும் சந்நியாசியிடமும் ஜாதியிருக்கும்
ஔடதத்தால் நோய் தீருமென்றால் ஆண்டவன் எதற்கு?
ஆண்டவனால் நோய் தீருமென்றால் ஔடதம் எதற்கு?
– ப.முத்துசாமி, வள்ளியூர்
சம்மட்டிஅடி
சமுதாய பேதங்களை ஒழித்திட சமர்
புரிந்தார் பெரியார்!
சாதிமத கொடுமைதனை வேரறுக்க உழைத்தார் பெரியார்!
சிந்தையில் தெளிவும் செயலில் துணிவும் வந்தது பெரியாரால்!
சீர்கெட்ட சமூக அமைப்பைச் சீராக்க முடிந்தது பெரியாரால்!
நல்லாட்சி தமிழ்நாட்டில் நடத்தினார் நம் கலைஞர்!
நாளும் பல திட்டங்களைத் தந்திட்டார் நம் கலைஞர்!
நியாய உணர்வு கொண்டோர்
பாராட்டினர் நம் கலைஞரை!
நீதிப் பக்கம் நிற்போர் ஏற்று,
போற்றினர் நம் கலைஞரை!
கல்வியில் வேற்றுமையைக் களைந்திடவே சமச்சீர் கல்விச் சட்டம்!
காலத்தின் கோலத்தால் கயவர்கள் தடுத்தனர் சமச்சீர் சட்டம்!
கிடைத்திட்ட வாய்ப்புதான் உச்ச நீதிமன்றத்தில் சமச்சீர் சட்டம்!
கீழ் மதியாளர் உச்சியில் சம்மட்டி அடி, பிழைத்தது சமச்சீர் சட்டம்!
– தே.ம.அமுதன், மேலமெஞ்ஞானபுரம்