அறிவுரை யாருக்கு?
ஒரு மரத்தில் குருவிகள் இரண்டு தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தன. அதே மரத்தில் குரங்கு ஒன்றும் வசித்து வந்தது. குஞ்சுகள் சிறிது பெரிதானது. தாய்க்குருவி இரைதேடச் சென்றதும் கூட்டிலிருந்து மெதுவாக வெளியில் எடடிப் பார்த்தன.
பின்பு, கூட்டைவிட்டு வெளியில் நடந்து வந்து கிளையில் அமர்ந்தன. அப்போது அங்கு குரங்கு அமர்ந்திருப்பதைக் குருவிக் குஞ்சுகளும், குருவிக் குஞ்சுகளைக் குரங்கும் பார்த்தாலும், அதனதன் வேலைகளைச் செய்து வந்தன.
அந்த ஆண்டின் மழைக்காலம் ஆரம்பமானது. மழை பெய்யத் தொடங்கியதும் குருவிகளும், குஞ்சுகளும் கூட்டினுள் சென்று நனையாமல் அமர்ந்து கொண்டன. மரக்கிளையில் நனைந்தபடி குரங்கு அமர்ந்திருந்தது.
இதனைப் பார்த்த குஞ்சுகளுள் ஒன்று, தாய்க்குருவியைப் பார்த்து, ஏன் அம்மா குரங்கு மட்டும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது? குரங்குக்கு வீடு இல்லையா? அதற்குக் குளிராதா எனக் கேட்டது.
குரங்குக்கு வீடு கட்டத் தெரியாது என்றது தாய்க்குருவி. இதனைக் கேட்ட குருவிக் குஞ்சு, அதற்குத் தெரியாவிட்டால் என்ன, நாம் சொல்லிக் கொடுப்போம் என்றது.
குரங்குக்குப் பிரித்துப் பிய்த்துப் போடத்தான் தெரியும். அதற்கு எப்போதும் அழிக்க மட்டுமே தெரியும், உருவாக்கத் தெரியாது என்றது தாய்க்குருவி. அம்மா, அப்படிச் சொல்லாதீர்கள். முயற்சி செய்வோம். குரங்கும் புரிந்து கொண்டு திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றது.
இதனைக் கேட்ட தாய்க்குருவி மூடருக்கு அறிவுரை சொல்லி நேரத்தை வீணாக்கக் கூடாது என்றது. மூடருக்குத்தானே அம்மா அறிவுரை கண்டிப்பாகத் தேவை என்றது. அதற்குமேல் உன் விருப்பம் என்று ஒதுங்கியது தாய்க்குருவி.
கூட்டிலிருந்து வெளியே வந்த குருவிக் குஞ்சு குரங்கின் அருகில் நனைந்து கொண்டே அமர்ந்தது. இதனைப் பார்த்த குரங்கு, உனக்குத்தான் கூடு இருக்கே எதற்காக நனைகிறாய், உள்ளே போ என்றது.
எனக்குக் கூடு இருக்கு, உள்ளே போறேன். ஆனால், நீ நனைவது எனக்கு வருத்தமாக உள்ளது. நீயும் கூடு கட்டி வசித்தால், எங்களைப் போல் நனையாமல் இருக்கலாமே என்றது.
இதனைக் கேட்ட குரங்கு, உனது உருவம் சிறியது. சின்னக் கூடு போதும். வீட்டின் சுவர்களில் உள்ள பொந்துகளில்கூட இருந்துவிடலாம். என் உருவமோ பெரியது, அதனால் இதெல்லாம் ஒத்து வராது. நீ நனையாமல் உள்ளே போ என்று கத்தியது.
நான் நனைவதைப் பார்த்து நீ இப்ப எப்படி வருத்தப்படுற, அதேபோல்தான் எனக்கும் நீ நனைவது வருத்தமாக உள்ளது. எனது உருவம் சிறியதுதான். அதற்கேற்பத்தானே எனது கால்களும் வாயும் உள்ளன. எனது சிறிய வாயினாலும் கால்களினாலும் எனக்குக் கூடுகட்டத் தேவையானவற்றை எடுத்து வர வேண்டும். உனக்குப் பெரிய உருவம். அதற்கேற்றாற்போல 4 கால்கள், அதில் முன்னங்கால்கள் இரண்டையும் கைகளைப்போல அழகாகப் பயன்படுத்துகிறாயே. அதை வைத்தே உனக்கு வீடுகட்டத் தேவையான பொருள்களை எடுத்து வரலாமே. மழை நின்றதும் முதலில் வீடு கட்டு. உனக்குத் தேவையான உதவியை நானும் செய்கிறேன். மழை பெய்யும்போது இப்படி நனைந்து துன்பப்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்றது.
இதனைக் கேட்ட குரங்கு, மழை விடட்டும் முதல் வேலையாக எனது இருப்பிடத்தை நானே உருவாக்கிக் கொள்கிறேன். நீ போய் உன் கூட்டினுள் பாதுகாப்பாக இரு என்றது.
– செல்வா