“பொங்கல்” இனி…!
– சிகரம்
பொங்கல் திருநாள் வேளாண்மை உற்பத்திக் காரணிகளுக்கு நன்றி சொல்ல, தமிழர்களால் கொண்டாடப்படும் ஓர் உன்னதத் திருநாள். இதில் மூடநம்பிக்கைகளுக்கும், திரிபுகளுக்கும் இடம் தந்துள்ள நிலையகற்றி, அறிவிற்குகந்த வகையில், புதிய சிந்தனைகளைப் புகுத்தி இனி கொண்டாட வேண்டும்.
வேளாண் உற்பத்திக்குக் காரணமாய் அமைபவை நான்கு. 1. மழை, 2. சூரிய ஒளி, 3. மாடுகள், 4. உழைப்பாளர். இந்த நான்கிற்கும் நான்கு நாள்கள் நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் திருநாளாகும்.
1. மழைக்கு நன்றி சொல்ல மழைத் திருநாள் (போகிப் பண்டிகை)
2. சூரியனுக்கு நன்றி சொல்ல (பொங்கல் திருநாள்) சூரியத் திருநாள்
3. மாடுகளுக்கு நன்றி சொல்ல மாட்டுத் திருநாள். (மாட்டுப் பொங்கல்)
4. உழைப்பாளருக்கு நன்றி சொல்ல உழைப்பாளர் திருநாள். (காணும் பொங்கல்)
1. போகி என்பது புரட்டு: பயிர் வளர மழை கட்டாயம். மழைக்கு நன்றி சொல்லும் திருநாளை, போகி என்றும், மகர சங்கராந்தி என்றும் ஆரியர்கள் மாற்றிச் சீரழித்துவிட்டனர். மழைக்கு அதிபதி இந்திரன், இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, அப்பண்டிகை போகிப் பண்டிகை என்றாக்கினர். பின்னாளில் போகி என்றால் பழையவற்றைப் போக்குதல் என்று சொல்லி, நம்மிடமிருந்த அறிவுக்களஞ்சியங்களான ஓலைச்சுவடிகள், நூல்களையெல்லாம் கொளுத்தச் செய்து, நமது பெருமைகளை அழித்தனர். இன்றைக்கு பழைய பாய், துணி, டயர் இவைகளைக் கொளுத்துவது என்றாகி, காற்றை மாசாக்கி, கேடுகளுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் இழிநிலை ஏற்பட்டுள்ளது. இப்படிச் செய்வது தமிழ் மரபும் அன்று, அறிவுடைமையும் அன்று. மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் நீர் வைத்து அதற்கு நன்றி சொல்வதே தமிழ் மரபு.
2. பொங்கல்: பயிர் பிழைக்கவும் தழைக்கவும் சூரிய ஒளி கட்டாயத் தேவை. எனவே, அதன் உதவியால் விளைந்த நெல்லரிசியைப் பொங்கி, சூரியனுக்கு நன்றி செலுத்தி மகிழ்வது பொங்கல் நாள் அல்லது சூரியத் திருநாள்.
3. மாட்டுப் பொங்கல்:
உழவுத் தொழிலுக்கு மாடுகளின் பங்கு மகத்தானது. உழவு செய்யவும், உரம் கிடைக்கவும், வண்டி இழுக்கவும் மாடுகள் தேவைப்படுவதால், அதற்குப் பொங்கல் அளித்து மகிழ்வூட்ட மாட்டுத் திருநாள் கொண்டாடினர்.
4. உழைப்பாளர் திருநாள் (காணும் பொங்கல்):
உழவுத் தொழிலில் பல்வகையிலும் பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு, புத்தாடை, புத்தரிசி, புதுப்பானை, கரும்பு, மஞ்சள் அளித்து மகிழ்வித்து, அவர்களுக்கு நன்றி சொல்வது உழைப்போர் திருநாள் ஆகும். அவர்கள் தங்கள் முதலாளிகளைச் சென்று கண்டு, இவைகளைப் பெறுவதால் அது காணும் பொங்கல் எனப்பட்டது.
இதற்குமாறாக கடவுள், சடங்கு, படையல் போடுதல், பழையனவற்றை எரித்தல், மாடு அடக்குதல் என்று செய்வதெல்லாம் திரிபுகள், புரட்டுகள் ஆகும். இவை பொங்கல் திருநாளின் நோக்கமும் அன்று; தமிழருக்கு உரியதும் அல்ல.
பொங்கல் திருநாளும் புதிய சிந்தனைகளும்:
உதவியவற்றிற்கு நன்றி சொல்வது நல்ல பண்பாடுதான் என்றாலும், அதைப் பகுத்தறிவுடன், காலச்சூழலுக்கு ஏற்பக் கொண்டாடினால் ஆறறிவு உள்ள நமக்கு அழகாகும். அதற்கு, கீழ்க்கண்ட முறையில் பொங்கல் பண்டிகையைப் புதுமையாகக் கொண்டாட வேண்டியது கட்டாயமாகும். காலத்தின் தேவையுமாகும்.
1. மழைத்திருநாள்: மழையின் அடையாளமாய், சொம்பில் நீர் வைத்து நன்றி சொல்வதோடு நில்லாமல், இந்த நாளில் மழைநீரைச் சேகரிப்பது எப்படி? ஏரிகளைப் புதிதாய் எங்கு தோண்டலாம், அணைகள் எங்கு கட்டலாம், கால்வாய் எங்கு வெட்டலாம் என்று திட்டமிடுதல், கருத்தரங்குகள் நடத்துதல், ஆய்வறிக்கை அளித்து விவாதித்தல் என்று செய்தால் நீர்வளம் பெருக அது துணைசெய்யும். வேளாண்மையும் விரியும்.
2. சூரியத் திருநாள்: சூரிய ஒளியில் பொங்கி, பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ந்து நன்றி சொல்வதோடு கலையாமல், அந்நாளில் சூரிய சக்தியை எப்படிப் பயன்படுத்தலாம், எப்படிச் சேமிக்கலாம்; சூரிய சக்தியால் புதிய கருவிகள் எவற்றை உருவாக்கலாம்; வீதி விளக்குகள் முதல் வீட்டுப் பயன்பாடுகள் வரை சூரிய சக்தியை எப்படி உபயோகிக்கலாம் என்று ஆய்வு அரங்கம் நடத்தியும், புதிய கருவிகளை அறிமுகம் செய்தும் மக்களுக்கு விழிப்பூட்டினால் அது அர்த்தமுள்ளதாயும், அறிவிற்கு உகந்ததாயும் அமையும்.
3. மாட்டுப்பொங்கல்: மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டி நன்றி சொல்வதோடு நிறுத்தாமல், மாடுகளின் நலனுக்கு என்ன செய்யலாம், மாட்டுக் கழிவுகளை உரமாகவும், எரிவாயுவாகவும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று கூட்டங்கள் நடத்தியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் மக்களுக்கு விழிப்பூட்டுவதோடு, பால்வளப் பெருக்கம், இயற்கை உரம் போன்றவற்றிற்கான திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
4. உழைப்பாளர் திருநாள்: புத்தாடை, புதுப்பானை கொடுத்து அவர்களுக்கு நன்றி சொல்வதோடு நில்லாமல், உழைப்பாளர் நலனுக்கு என்னென்ன செய்யலாம். அவர்களின் வருவாயைப் பெருக்குவதற்கு என்ன வழி செய்யலாம், நியாயமான ஊதியத்தைச் சுரண்டாமல் எப்படிப் பெறச் செய்யலாம், அவர்களின் பிள்ளைகளின் உயர்வுக்கு என்ன திட்டம் தீட்டலாம் என்று உழைப்பாளர் உரிமைக்கும், வறுமை ஒழிப்பிற்கும், வளத்திற்கும் வழி காண்பதோடு, குரல் கொடுப்பதோடு, விழிப்பும் ஊட்ட வேண்டும். இப்படிப் பொங்கலைக் கொண்டாடினால், அது பொருளுடையதாக மாறுவதோடு, உலக விழாவாகவும் விரியும்.