அடிமைத் தலைகளை தகர்த்த் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver 1864-1943.)
– சாரதா மணி ஆசான்
ஆப்பிரிக்காக் கண்டத்திலிருந்து அமெரிக்க அய்க்கிய நாடுகளின் தென்பகுதியில் உள்ள விவசாயப் பண்ணைகளுக்கு விலைகொடுத்து வாங்கப்பட்ட கருப்பின அடிமை வம்சத்தில் பிறந்தவர்தான் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர். இவ்வடிமைகள் பண்ணை நிலத்து உரிமையாளர்களிடம் விலங்குகள் போல் நடத்தப்படுவர். சில சமயங்களில் வேறு முதலாளிகளுக்கு விற்கப்படுவர். இவ்வடிமைகள் பெரும்பாலும் வறுமையில் வாடினர்; கல்வி அறிவு இன்மையால் மடமையில் மடிந்தனர். அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டதால் இழிநிலை எய்தினர். இத்தகைய நிலையில் வாழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகளின் நிலை உயர தம் அறிவு ஆராய்ச்சிகளையும் – கடின உழைப்பையும் முறையாகச் செயல்படுத்தியவர்தான் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர். இவர்தம் ஆராய்ச்சிகள் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டவை. மிக எளிதில் பொதுமக்களுக்கு எல்லா வகையிலும் பயனளிப்பவை. வாழ்வாதாரங்களுக்கு வலிவூட்டுபவை.
பிறப்பும் வளர்ப்பும்:
1864ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் நாள் மிசௌரி என்னும் இடத்தில் சூசன் மற்றும் மோசஸ் கார்வர் ஆகியோருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் அடிமைகளாகப் பணிபுரிந்த ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சார்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்தபோதே இவரது தந்தையார் மறைந்துவிட்டார். இவரது தாயார் மேரி. தாயின் அன்பும் அரவணைப்பும்கூட இவருக்கு ஒரு சிறிதுகாலம்தான் கிடைத்தது.
ஏனெனில், இவர் சிறுவனாக இருந்தபோதே இவரது தாயார் இவர், இவரது சகோதரிகளில் ஒருவர் ஆகிய மூவரும் ஒருநாள் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டனர். இவரைக் கடத்தியவர்கள் இவரை ஒரு பந்தயக் குதிரைக்கு ஈடாக விற்றுவிட்டனர்; எனினும், இவரை வாங்கியவர் மீண்டும் இவரை பழைய பண்ணை வீட்டாரிடமே விட்டுவிட்டார். இவர் சிறுவனாக இருந்தபோது உடல் நலிவுற்றிருந்தமையால் செடிகளைப் பராமரித்தல் – வீட்டுவேலைகள் செய்தல் – ஓவியங்கள் வரைதல் ஆகிய பல்வேறு பணிகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். சிறுவயதில் பயனுள்ள பணிகள் செய்தமையால் பிற்காலத்தில் அறிவியல் துறையில் ஆர்வமுடன் செயல்படவும் அத்துறையில் தடம் பதிக்கவும் இவை வாய்ப்பாக அமைந்தன.
படிப்பிற்கான பயணம்:
பண்ணை வீட்டில் கடமை உணர்வுடன் பணிபுரிந்த இவருக்கு இவரது முதலாளி சூசன் கார்வர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தார். ஏழ்மையில் வாடிய இவர் கற்றலின் அவசியத்தை உணர்ந்து, ஆர்வத்துடன் பயில ஆரம்பித்தார். அப்பொழுது இவருக்குப் பென்சில் வாங்கவும் வசதியற்ற சூழல், ஆதலால் கிடைத்த 1/4 அங்குல நீளமுடைய பென்சிலால் எழுதிப் பழகலானார். கல்வி கற்பதற்கு வறுமை ஒருபோதும் தடையாகக் கூடாது என்பதற்கு இவரே சான்று.
இவர் தனது 11ஆம் வயதில், இதுநாள் வரை தன்னைப் பாதுகாத்த சூசன் ((Susan) மற்றும் மோசஸ் கார்வர் (Moses Carver) தம்பதியரிடமிருந்து முறையான கல்வியைக் (Formal Education) கற்றல் நிமித்தமாக விடைபெற்று மிசௌரிப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு கருப்பினத்தவர்க் கென்றே நடத்தப்பட்ட ஒரே ஆசிரியர் மற்றும் ஒரே அறை கொண்ட பள்ளியில் படிப்பைத் துவங்கினார். படிப்புச் செலவுக்காக இவர் முடிதிருத்தகம், சலவைத் தொழிலகம், உணவகம், விவசாயப் பண்ணை ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றினார். தன் சக மாணவர்களுடன் இணைந்து கான்சாஸ் (Kansas) சென்று தொடர்ந்து 10 ஆண்டுகள் பயின்றார். 1890ஆம் ஆண்டு இவர் அயோவா (Iowa) சென்றார். அங்கு சிம்சன் கல்லூரியில் (Simson College) பயிலும் முதல் கருப்பின மாணவர் என்ற பெருமையுடன் கலை மற்றும் பியானோவைக் கற்றுத் தேர்ந்தார். இவரிடம் இருந்த விவசாய ஆர்வமும், இயற்கையின் மீது உள்ள ஈடுபாடும் உந்த 1891ஆம் ஆண்டு அதே அயோவா (Iowa) மாநிலத்தில் அமைந்துள்ள விவசாயக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முறையே 1894ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தையும் 1896ஆம் ஆண்டு முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். இளங்கலைப் பட்டம் பெற்றவுடன் அக்கல்லூரியின் விரிவுரையாளராகவும் பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றார்.
1896ஆம் ஆண்டு அலபாமா மாநிலத்தில் அமைந்துள்ள டஸ்க்கீஜீ பல்கலைக்கழகத்தின் (Tuskegee University) நிறுவனரும், இயக்குநரும் ஆன புக்கர் டி வாஷிங்டன் (Booker T Washington), கார்வரின் நுண்ணறிவின் சிறப்பை உணர்ந்து அந்தப் பல்கலைக்கழகத்தின் உயர்பதவியான இயக்குநர் பதவியை அவருக்கு அளித்தார். இப்பல்கலைக்கழகத்தில்தான் தன் வாழ்நாள் இறுதிவரை அதாவது 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார்.
கார்வரின் கண்டுபிடிப்புகள்:
விவசாயிகள் நலம் காக்க – விவசாய நிலங்கள் பொன்கொழிக்க இவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் 500க்கும் மேற்பட்டவை. முதன்முதலில் தரிசு நிலங்களைப் பயன்படுத்த பயிர்சுழற்சி முறையை அமெரிக்க அய்க்கிய நாட்டின் தென்பகுதியில் அறிமுகப்படுத்தின. பணப்பயிர்களான பருத்தியைப் பயிரிட்ட நிலங்கள் வளம் குன்றின. அந்நிலங்களில் ஊட்டச் சத்தும், நைட்ரஜன் சத்தும் உள்ள நிலக்கடலைப் பயிரைப் பயிரிடுவதன் மூலம் நிலவளம் பெருகும் என்பதை ஏழை விவசாயிகளுக்கு உணர்த்தினார்.
அந்த நிலக்கடலையைக் கொண்டு சமையல் எண்ணெய், சோப்புகள் – வாசனைத் திரவியங்கள், மை முதலான 300க்கும் மேற்பட்ட துணைப் பொருட்களை உற்பத்தி செய்து மக்களின் பொருளாதாரத் தேவைகளைச் சமன் செய்தார்.
அடுத்து சர்க்கரை வள்ளிக் கிழங்கினை உற்பத்தி செய்து அதிலிருந்து 100க்கும் மேலான பொருட்களைப் படைத்து மக்களுக்கு உதவினார். மரக்கழிவுகளிலிருந்து செயற்கைப் பளிங்குக் கற்களையும் வடிவமைத்து பல செயல்முறை விளக்கக் கூட்டங்கள், ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் மூலம் தனது கண்டுபிடிப்புகள் எளியவர்களுக்கும் எளிதில் கிட்டும் வாய்ப்பை உருவாக்கினார். தான் கண்ட கண்டுபிடிப்பு களுக்குப் பதிப்புரிமை பெறவில்லை; அனைத்தும் நலிவுற்ற மக்கள் நலனுக்கென்றே விரும்பி அளிக்கப்பட்டன. அலபாமா மாநிலத்தில் டஸ்க்கீஜி (Tuskegee) விவசாயக் கல்லூரியின் விவசாயத் துறையில் ஆராய்ச்சியாளராகவும் – விரிவுரையாளராகவும் 1896ஆம் ஆண்டிலி ருந்து 1943ஆம் ஆண்டு முடிய – 50 ஆண்டு காலம் ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்களுக் காகவே உழைத்தார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? இவர் உழைப்பின் சிகரம்.
கற்பித்த குறிக்கோள்கள்: (The Legacy of Carver)
ஒருவன் அணியும் ஆடம்பரமான ஆடைகளோ, அல்லது ஒருவன் பிரயாணம் செய்யும் விலையுயர்ந்த மகிழுந்தோ, ஒருவன் தன் பெயரில் வங்கியில் வைத்திருக்கும் பணமோ அவனுக்குப் பெருமை சேர்க்காது. இவையாவும் வெறும் குறியீடுகளே! ஆனால், ஒருவன் மனித நேயத்துடன் ஆற்றும் அறப்பணிகள் மட்டுமே அவனுக்கு வெற்றியைத் தேடித்தரும். மேலும் புதுமையைப் படைக்க ஆக்கப்பூர்வமான எண்ணங்களே அடிப்படை என்பதை உணர்ந்த இவர் அத்தகு எண்ணங்கள் வளர இளைய தலைமுறைக்கு ஊக்கத்தையும், எழுச்சியையும் தொடர்ந்து நல்கினார்.
தனிச்சிறப்பு:
ஒரு முறை அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசன் இவர் சிறப்பியல்புகளையும் நுண்ணறிவுத் திறனையும் அறிந்து நியூஜெர்சியிலுள்ள தனது ஆய்வகத்தில் தன்னுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆண்டு ஊதியமாக 1,00,000 டாலர் தருவதாகக் கூறி இவரை விரும்பி அழைப்பு விடுத்தார். ஆனால் கார்வர், சார்ந்த டஸ்க்கீஜீ பல்கலைக்கழகத்திற்குக் கடமைப்பட்டுள்ளதாகவும், அக்கடமையில் இருந்து விலக இயலாத சூழ்நிலையையும் சுட்டிக்காட்டி அப்பணியினை ஏற்க மறுத்தார். அவ்வகையில் தொடர்ந்து கடமை ஆற்றிய இவர், தனது வாழ்நாள் சேமிப்புத் தொகை முழுவதையும் டஸ்க்கீஜீ பல்கலைக்கழகத்திற்கே அளித்துத் தன் நன்றியைச் செலுத்தினார்.
பெற்ற வெகுமதிகள்:
1916இல் இலண்டன் ராயல் கழகத்தாரால் கலை ஆர்வலர் என்ற பாராட்டுதலைப் பெற்றார். 1928இல் சிம்சன் கல்லூரியின் அறிவியல் துறை சார்பில் இவருக்குச் சிறப்பு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. 1935ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் விவசாயத் துறையின் மேல்நிலை ஆலோசகராக நியமனம் செய்தது. இவர் வாழும்பொழுதே இவரது வரலாற்றை ஹாலிவுட் படமாக எடுத்து 1938ஆம் ஆண்டு வெளியிட்டது. இவர் பணியாற்றிய டஸ்க்கீஜீ பல்கலைக்கழகம் இவர் படைப்புகளை, வருங்காலத் தலைமுறை பயன்பெறும் வண்ணம் கார்வர் அருங்காட்சியகம் அமைத்தது. ஆனாலும் இவர் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தது இயற்கைக்காவும், இயற்கையின் கொடையான பயிர்களுக்காகவும்தான். எனவே, இவர் எல்லோர் உள்ளங்களிலும், இயற்கை மருத்துவர் என்று இன்றும் போற்றப்படுகிறார்.