தொடர் கதை – 9 : நீதிமன்றத் தீர்ப்பு
சிகரம்
முன் கதைச் சுருக்கம்:
எலுமிச்சைப்பழம், பூசணிக்காய், தேங்காய் போன்ற உணவுப் பொருள்கள் மூடநம்பிக்கையின் அடிப்படையில் வாகனங்களில் நசுக்கியும், சாலையில் உடைத்தும் பாதிக்கப்படுவதை எதிர்த்து எலுமிச்சைப் பழம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில் தேங்காயும், பூசணிக்காயும் தங்களை இணைத்துக்கொண்டு, தங்கள் பயன்களையும், பாழாக்கப்படுவதால் நிகழும் பாதிப்புகளையும், வழக்குரைஞர் பழனிவேல் உதவியுடன் எடுத்துரைத்தன. இறுதியில் எதிர்கருத்துக் கூற, விரும்புவோர் கூற நீதிமன்றம் வாய்ப்பளித்தது. வரதாச்சாரி தங்கள் நம்பிக்கை பாதிக்கப்படக்கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்மனுதாரராய் வாதிட்டார். அவரது வாதங்களை மறுத்து வழக்குரைஞர் பழனிவேல் தமது வாதங்களை எலுமிச்சை, பூசணி, தேங்காய் சார்பாக எடுத்து வைத்தார். நிறைவாக நீதிமன்றம் இருதரப்புக் கருத்துகளையும் சீர்தூக்கி, தீர்ப்பை வழங்கத் தயாராக இருந்தது. நியாயமான தீர்ப்பை வழங்கியது…
நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர் பழனிவேல், அவருடன் தேங்காய், பூசணிக்காய், எலுமிச்சை வந்து காத்திருக்க, வரதாச்சாரியும் வந்து சேர்ந்தார்.
நீதிமன்ற ஊழியர் அமைதி! அமைதி! அமைதி! என்று குரல் கொடுத்தார். எல்லோரும் எழுந்து நின்று வணங்க நீதிபதி தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். எல்லோரும் நீதிபதியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
எலுமிச்சை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இப்போது வாசிக்கிறேன் என்று கூறி, நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார்.
“எலுமிச்சை, பூசணி, தேங்காய் மூன்றும் தங்கள் பயன்பாட்டையும், தாங்கள் வீணடிக்கப்படுவதால் வரும் பாதிப்பையும் மிகச் சிறப்பாகத் தொகுத்துக் கூறின. அந்த மூன்றுக்கும் இந்த நீதிமன்றம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. வழக்குரைஞர் பழனிவேல் சமூகப் பொறுப்போடு தனது வாதங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். அவருக்கும் இந்த நீதிமன்றம் தனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. வரதாச்சாரியும் தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தார். வெறும் நம்பிக்கை என்ற ஒரு காரணத்திற்காக எதுவும் நியாயம் ஆகிவிடாது.
நரபலி கொடுக்கிறவர்கள் கூட தங்கள் நம்பிக்கையின்படிதான் நரபலி கொடுக்கிறார்கள். அதனால் அவர்கள் செயல் நியாயமாகிவிடாது. அவர்களுக்குத் தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது.
மனிதர்கள் பகுத்தறிவு உடையவர்கள். மற்றவை பகுத்தறிவும் சிந்தனை வளர்ச்சியும் இல்லாதவை. மனிதர்கள் சிந்திப்பதன்மூலம் சரி எது, தப்பு எது என்று அறியும் ஆற்றல் உடையவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் சரி, நியாயம் என்று எண்ணிக் கொண்டிருந்ததெல்லாம், இன்றைக்கு சரியல்ல என்று தெரிந்துவிட்டது. சரியல்ல என்று தெரிந்ததும் அதைக் கைவிடுவதுதான் சரியாகுமே தவிர, மரபு வழி நம்பிக்கை என்று காரணம் கூறுவது சரியல்ல.
தன் பிள்ளையையே அறுத்துக் கறிசமைத்து, சாமியாருக்குப் படையல் போட்ட சிறுத்தொண்டன் செயலை இந்த நீதிமன்றம் ஏற்க முடியுமா? எந்த நம்பிக்கையும் பாதிப்பு ஏற்படுத்துமானால் அது சட்டப்படி குற்றமுடையதாகும்.
அப்படிப் பார்த்தால் உணவுக்குப் பயன்படும் நல்ல பொருள்களை வீதியில் நசுக்கியும், உடைத்தும் பாழாக்குவது சட்டப்படி குற்றச்செயல்தான். அவற்றைப் பாழாக்குவதற்குப் பதிலாக ஏழைகளுக்குத் தானமாக வழங்கலாம். இதனால் பக்தர்களும் மனநிறைவடையலாம். மக்களும் பயனடைவர்.
கடவுளிடம் நான் இதைச் செய்கிறேன்; நீ எனக்கு இதைச் செய் என்று பேரம் பேசுவது தாங்கள் நம்பும் கடவுளையே இழிவுபடுத்தும் செயல் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். கடவுள் நம்மிடமிருந்து பெற்றா வாழப்போகிறது? மனிதர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போல, கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கும் முயற்சி ஏற்புடையதல்ல. அது மரபு வழியாக நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டாலும் சரியில்லாத செயல்தான்.
உணவுப் பொருள்கள் பற்றாக்குறையுடைய நிலையில், பால், தேன், பழம் போன்றவற்றை பயனின்றிப் பாழாக்குவது குற்றச்செயல்தான். குழந்தைக்குப் பயன்பட வேண்டிய பாலை, கடவுள் சிலையில் ஊற்றிச் சாக்கடையில் கலக்கவிடுவது எப்படிச் சரியான செயலாகும்?
மக்களுக்குக் கிடைக்காத நிலையில், தனக்கு வேண்டும் என்று கடவுள் கேட்பதாக நம்புவதும், நம்பி அப்பொருள்களை கடவுள் பெயரால் பாழாக்குவதும், கடவுளையே கேவலப்படுத்தும் செயலேயன்றி, அது பக்தியாகாது.
பக்தியின் பெயரால் ஏதும் அறியாக் குழந்தைகளைக் கூட வதைப்பது மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். அண்மையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தீமிதித்த ஒருவர், தீக்குண்டத்தில் தவறி விழுந்ததால் அவரும் பலத்த தீக்காயம் அடைந்து, குழந்தையும் தீக்காயம் அடைந்தது. இது பக்தியா? இப்படி தன்னையும், தன் குழந்தையையும் வருத்த வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்குமா? இப்படிப்பட்ட செயலை கடவுள் ஏற்குமா?
எந்த நம்பிக்கையும், எந்தச் செயலும் பாழின்றி, பாதிப்பின்றி இருக்கும் வரை மட்டுமே அதை அனுமதிக்க முடியும். பாதிப்பும், பாழும் ஏற்படுத்தும் எந்த நம்பிக்கையும், செயலும் சட்டப்படி குற்றச் செயல்களே!
கடவுளுக்கு வேண்டிக் கொண்டு, நேர்த்திக் கடன் என்று தலையில் தேங்காய் உடைக்கிறார்கள். இது எப்படிப்பட்ட அறியாமை! மண்டை ஓடு ஓரளவுதான் அடி அல்லது இடி தாங்கும். அதற்கு மேல் அடி விழுந்தால் மூளை பாதிக்கப்படும். அப்படியிருக்க, இப்படி தேங்காய் உடைப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?
தன் குழந்தையின் காலில் ஒரு முள் குத்தினால்கூட தாய் பதறித் துடிப்பாள். மக்களுக்குத் தாய் போன்றது என்று கூறப்படும் கடவுள் அலகு குத்துவதையும், தீயில் இறங்குவதையும், தலையில் தேங்காய் உடைத்து இரத்தம் வழிய வழிய துடிப்பதையும் விரும்புமா? ஏற்குமா? இவையெல்லாம் அவர்கள் நம்பும் கடவுளுக்கே எதிரான செயல்கள் என்பதே உண்மை!
எனவே, பக்தியின் பெயரால் பாதிப்போ, பாழோ, உயிரிழப்போ ஏற்படுத்தும் எந்தச் செயலையும் அனுமதிக்கமுடியாது. அவை தடை செய்யப்பட வேண்டும். ஆனால், இதுபோன்ற கொள்கை முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டும் என்பதால் அரசே இதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. கணவன் இறந்தால் மனைவியையும் தீயில் தள்ளும் கொடுமை புனிதமாகக் கருதப்பட்டது. ஆனால், அது மனித உரிமைக்கும், மனிதத் தன்மைக்கும் எதிரானது என்று சட்டப்படி பின்னாளில் தடுக்கப்பட்டது.
கடவுள் மனிதனை நான்கு வர்ணமாகப் படைத்தது. அதில் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த சூத்திரர்கள் படிக்கவே கூடாது, பதவிக்குச் செல்லக்கூடாது என்று சாஸ்திரம் கூறியுள்ளது என்பதை இப்போது தடுத்து, அதை ஒழித்து, எல்லோருக்கும் கல்வி என்று கொண்டுவந்து விட்டோம்.
கடவுளை நெருங்க, தொட ஒரு ஜாதியினர்க்கே உரிமை என்ற அநீதி தற்போது அரசு சட்டம் மூலம் ஒழிக்கப்பட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் செய்யப்பட்டுவிட்டது.
அதுபோல பக்தியின் பெயரால் பாழும், பாதிப்பும் ஏற்படுத்தும் எச்செயலும் செய்யக் கூடாது என்று அரசு சட்டம் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும். அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறைதான் இந்திய அரசமைப்புச் சாசனத்தாலும் ஏற்கப்பட்டுள்ளது. அறிவுக்கு ஒவ்வாதவற்றை அகற்றிட, கற்றவர்கள், சிந்திக்கும் திறனுடையவர்கள் அனைவரும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு விழிப்பூட்டவேண்டும் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக்கொண்டு, இந்த வழக்கை முடித்துவைக்கிறது.’’
நீதிமன்றத்தில் கைத்தட்டக்கூடாதுதான். ஆனால், அன்று எலுமிச்சையும், பூசணியும், தேங்காயும் தொடுத்த வழக்கில் அவர்கள் பெற்ற வெற்றிக்காக அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். இனி தாங்கள் வீணாக்கப்படமாட்டோம் என்ற மகிழ்ச்சியில் மகிழ்ந்தவை அம்மூன்றும் மட்டுமல்ல… வழக்கில் இணையாத ஏனைய உணவுப் படையல்களும்தான்!
(நிறைவு)