இடர்மீட்புத் தொடர் : தீ.. செயல் அதிரடி
தே.பொய்யாமொழி
நாம் கடந்த கட்டுரைகளில் பேரிடர்கள் பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் இடர் அதாவது விபத்து பற்றிப் பார்ப்போம். பேரிடருக்கும் விபத்திற்கும் என்ன வேற்றுமை என பார்த்தால் ஒரு நிகழ்வு நடந்த பிறகு அடுத்த சில நிமிடங்களிலோ மணிகளிலோ அத்துடன் முடிந்திருந்தால் அது விபத்து. தொடர்ந்து சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் பல்வேறு பட்டவர்களின் உதவி அதாவது தனி நபர்கள் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் அரசாங்கம் போன்றவர்களின் சேவை தேவைப்படுமாயின் அது பேரிடர்.
நம்முடைய வாழ்வில் பேரிடர்களை நேரில் சந்திப்பது மிகக் குறைவு. ஆனால் விபத்து பற்றி அடிக்கடி கேள்விபடுவோம், பார்ப்போம். நம்மைச் சுற்றியே நடந்து கொண்டிருக்கும். ஆகையினால் நாம் இந்தக் கட்டுரையில் தீ விபத்து ஏன் ஏற்படுகிறது? அதை எப்படி அணைக்க வேண்டும்? வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிப் பார்ப்போம்.
மூன்று பொருட்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேரும் பொழுது தீ ஏற்படுகிறது. ஒரு முக்கோணத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு முனை காற்று; ஒருமுனை எரிபொருள் (Fuel);மற்றொரு முனை வெப்பம் (Heat).
இவை மூன்றும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேரும் பொழுது அங்கே நெருப்பு உண்டாகிறது. எரிபொருள் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பேப்பர், துணி, மரக்கட்டைகள், பெட்ரோல், டீசல் இது போன்ற எந்தப் பொருளாக இருந்தாலும் அது எரியக்கூடிய பொருள்.
அடுத்தது காற்று – சாதாரணமாக வளிமண்டலத்தில் உள்ள காற்று .
மூன்றாவது வெப்பம் – முன்பு கூறியது போல ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மூன்றும் சேரும் பொழுது தீ ஏற்படும் என்று கூறினேன் அல்லவா? அந்தக் குறிப்பிட்ட விகிதம் என்பது எரியக்கூடிய பொருளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி மர பெஞ்சில் நாற்காலியில் வைத்தால் அவை எரியாது. தீக்குச்சி அணைத்து விடும். அதையே பேப்பர் துணி போன்றவற்றில் தீக்குச்சியை வைக்கும் பொழுது அவை எரிந்து விடும். அங்கு நிறைய பேப்பர் அல்லது துணிகள் இருந்து அவை எரியும் பொழுது அந்த பெஞ்சும் நாற்காலியும் எரிந்து விடும். மரப்பொருட்கள் எரிய அதிக அளவில் வெப்பம் மட்டுமே தேவை. இதே வெண் பாஸ்பரஸசை தண்ணீரில் இருந்து எடுத்து வெளியில் வைத்தாலே எரிந்து விடும். அதற்குக் குறைந்த அளவு வெப்பம் போதுமானது. ஆகவேதான் இவை மூன்றும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேரும் பொழுது தீ ஏற்படுகிறது என்று கூறினேன்.
சரி இதை எப்படி அணைப்பது? “தண்ணி எடுத்து ஊத்தி தான்!” அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. ஆனா எல்லாத்திலேயும் தண்ணீர் எடுத்து ஊத்தி விட முடியாது. தண்ணீர் பட்டால் எரியக்கூடிய பொருள்கள் எல்லாம் இருக்கு.
சரி, வேறு என்ன செய்யலாம்? எப்படி மூன்று பொருள்கள் ஒன்றாகச் சேரும்போது தீ ஏற்படுகிறதோ அதேபோல் மூன்றில் ஒரு பொருளை நீக்கிவிட்டால் தீ அணைந்து விடும். இதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. குளிர்விக்கும் முறை (Cooling method )
2. போர்வை முறை (Blanket method)
3. பட்டினி போடுதல் (Starvation method)
முதலில் குளிர்வித்தல் முறை பற்றிப் பார்ப்போம் எரியக்கூடிய பொருளின் மீதும் அதன் அருகில் இருக்கும் பொருட்களின் மீதும் நாம் தண்ணீரை ஊற்றும் பொழுது அந்தப் பொருள் எரிவதற்கு அதிக வெப்பம் தேவைப்படும். அதிக வெப்பம் கிடைக்காத பொழுது அதுவே அணைந்து விடும். உதாரணமாக முன்பு கூறியது போல ஒரு தீக்குச்சியை வைத்து துணியையோ காகிதத்தையோ எரிக்க முடியும். ஆனால் தண்ணீர் ஊற்றி நனைந்த துணியையோ காகிதத்தையோ ஒரு தீக்குச்சி வைத்துக் கொளுத்த முடியாது. இதுவே குளிர்வித்தல் முறை.
உலகம் முழுவதும் மிக அதிக தீ விபத்துகளில் தண்ணீரையே பயன்படுத்துகிறோம். இரண்டு காரணம். ஒன்று, விலை மலிவாக கிடைக்கின்றது. அதைவிட முக்கியம் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.
இரண்டாவது முறை – போர்வை முறை. ஒரு சிறிய பொருள் எரியும் பொழுது அதை சாக்கு, போர்வை போன்ற பொருட்களைக் கொண்டு மூடும் பொழுது உள்ளே காற்று செல்லாமல் அந்தத் தீ அணைந்து விடும். ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துவிட்டு ஒரு கண்ணாடி கிளாஸை வைத்து மூடினால் சிறிது நேரத்தில் மெழுகுவர்த்தி அணைந்து விடும். இதை நிறைய பேர் பார்த்திருக்கலாம். எப்படி அணையும்? அதற்குப் போதுமான காற்று கிடைக்கவில்லை. எனவே அணைந்து விடுகிறது. இதே முறைதான் ஒரு எண்ணெய்ச் சட்டி தீப் பிடிக்கும் பொழுது அதை தண்ணீர் எடுத்து ஊற்றினால் எண்ணெய்யை விட தண்ணீர் கனமான பொருள். எனவே தண்ணீர் கீழே சென்று எண்ணெய் மேலே பொங்கி வழியும் எங்கெங்கெல்லாம் எண்ணெய் தெரிகிறதோ அங்கெல்லாம் தீப்பிடிக்கும். தீ குறைவதற்கு பதில் அதிகரித்து விடும். எனவே அது போன்ற இடங்களில் போர்வை முறையைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் கிடைக்காத சில இடங்களில் மணலைக் கொட்டி அணைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதுவும் அதே முறைதான். நெருப்புக்குச் செல்லக்கூடிய காற்றை மண் தடுத்து விடுவதால் அணைந்து விடுகிறது.
மூன்றாவது முறை பட்டினி போடுதல்! ஒரு பொருள் எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு அருகில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி விட்டால் தொடர்ந்து எரிவதற்கு எரிபொருள் இல்லாத பொழுது தீ தானாகவே எரிந்து முடிந்து விடும். உதாரணமாக, ஒரு வீட்டின் மையப்பகுதியில் வரிசையாகப் புத்தகங்கள், துணிகள் இருக்கும் பொழுது அவை எரியும் பொழுது முதல் இரண்டு மூன்று புத்தகங்கள் அல்லது துணிகள் எரிந்து கொண்டிருக்கும் பொழுது மற்ற புத்தகங்களை அல்லது துணிகளை எடுத்து அப்புறப்படுத்தி விட்டால் அருகில் வேறு பொருள்கள் இல்லாவிட்டால் எரிந்த பொருட்களுடன் தீ அணைந்து முடிந்துவிடும். இதுவே பட்டினி போடுதல் முறையாகும்.
சரி குழந்தைகளே தீ என்றால் என்ன? அதனை எப்படி அணைப்பது என்ற அடிப்படையைத் தெரிந்து கொண்டோம்.
தொடர்ந்து அடுத்த கட்டுரையில் தீ வராமல் எப்படித் தடுக்கலாம்? எளிய முறையில் தீ அணைப்பான் (Fire extinguisher) கொண்டு தீயை எப்படி அணைக்கலாம்? என்னென்ன வகை தீ உள்ளது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.