ஆகாயத்தில் பறக்கப் போறோம்
இயற்கை எழில் கொஞ்சும் வடஅமெரிக்காவில் ஓகியோ மாநிலத்தில் உள்ள டேட்டன் என்னும் ஊரில் 3ஆவது 4ஆவது பிள்ளைகளாகப் பிறந்தனர். உடன் பிறந்தவர்கள் 5 பேர். அவர்களது தந்தை குழந்தைகளுக்கு விளையாட பொம்மை ஒன்றினை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.
அப்போது, 3, 4ஆவதாகப் பிறந்த மகன்கள் இருவரும் நாங்கள் ஆகாயத்தில் பறந்து செல்லும் வாகனம் கண்டுபிடிக்கப் போறோம் என்றனர். சகோதரர்கள் இருவரும் தங்கள் ஓய்வு நேரத்தில் தாங்களாகவே காற்றாடி செய்து பறக்கவிட்டு மகிழ்வர்.
ஒருநாள் பெரிய காற்றாடி ஒன்று செய்து பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர். காற்று வேகமாக வீசியதால் காற்றாடியைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் சிறிது தூரம் தூக்கிச் செல்லப்பட்டான்.
உடனே சகோதரர்கள் இருவரும், காற்றாடியைப் பயன்படுத்தி விண்ணில் பறக்க முடியும் என்று பேசிக்கொண்டனர். பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று சிந்தித்து ஆராய்ந்தனர். இச்சிறுவர்கள் பின்னாளில் பலவித தோல்விகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சியில் ஈடுபட்டு ஆகாயத்தில் பறந்த ரைட் சகோதரர்களான ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்பவராவர்.