கடலுக்கு அடியில் மனிதன் வாழ முடியுமா?
– பேரா.ந.க.மங்களமுருகேசன்
(இளவரசன் – பள்ளி மாணவன். பெரியவர் – ஓய்வு பெற்ற முதியவர்)
இளவரசன்: அய்யா, விண்வெளியில் மனிதன் காலனிகளை அமைத்துக் கொண்டு வாழும் காலம் வரலாம் என்று விண்வெளி நிபுணர்கள் சொல்கிறார்கள். விண்வெளியில் வாழ, சந்திரனில் குடியேற இப்போதே பதிவு செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
பெரியவர்: ஆமாம்பா! அப்படி ஒரு நாள் வரும் என்று கூறுகிறார்கள். அதில் என்ன சந்தேகம்.
இளவரசன்: அதில்லை அய்யா என் சந்தேகம். உலகில் கடல்தான் பெரும்பகுதி என்று படித்திருக்கிறேன். எனவே, இப்போது மண்ணுலகில் வாழ்வதுபோல் மனிதர்கள் கடலுக்குள் நீர்போகாத கூண்டுகளை அமைத்துக்கொண்டு வாழமுடியுமா? என்பதுதான் என் கேள்வி.
பெரியவர்: நீ கேட்ட கேள்வி சரியான கேள்வி. எவரையும் சிந்திக்க வைக்கும் கேள்வி.
இளவரசன்: விண்வெளியில் மிக உயரத்தில் சென்றால் சுவாசிக்கக் காற்று இல்லை. எடையின்மை ஏற்பட்டு மனிதனும் பொருட்களும் விண்வெளிக் கலத்துள் மிதக்கும் நிலை உண்டாகிறது. சூரியனுடைய உக்கிரமான, ஆபத்தான கதிர்களைச் சமாளிக்க வேண்டியுள்ளது. ஆழ்கடலில் இதுபோன்ற பிரச்சினைகள் உண்டா?
பெரியவர்: ஆம்! கடுமையான பணச்செலவு ஏற்படும். இதேபோன்று வேறு பிரச்சினைகளை மனிதன் சமாளித்தாக வேண்டும். விண்வெளியில் ஏற்படும் பிரச்சினைகளை விட ஆழ்கடலில் ஏற்படும் பிரச்சினைகள் கடுமையானவை.
இளவரசன்: என்ன கடுமையானவையா?
பெரியவர்: ஆமாம். ஆழ்கடலினுள் கூண்டில் மனிதன் வசிப்பதானால் அக்கூண்டை விட்டு ஒரு நிமிடம் வெளியே வந்தாலும் அப்பளம்போல் உடைந்துபோய் விடுவான்.
இளவரசன்: என்ன, அப்பளம்போல் நொறுங்கிப்போய் விடுவானா? அவ்வளவு ஆபத்தா? ஏன் அப்படி?
பெரியவர்: சரி, இப்படி உட்காரு. நான் சொல்வதைக் கேளு. கடலுக்கு அடியில் உள்ள மிகுந்த அழுத்தமே காரணம். காற்றுக்கும் எடை உண்டு என்று உன் ஆசிரியர் சொல்லிக் கொடுத்து இருப்பாரே? கடலுக்கு அடியில் உள்ள மிகுந்த அழுத்தமே இதற்குக் காரணம்.
இளவரசன்: அழுத்தமா? அது என்ன?
பெரியவர்: நாம் கடல் மட்டத்தில் அமைந்த இடத்தில் இருக்கையில் பல மைல் தூரம் வியாபித்துள்ள காற்று மண்டலம் நம் மீது செலுத்தும் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு இவ்வளவு வீதம் என்று ஓர் அளவு கொண்டுள்ளது. ஆனால், கடலில் 33 அடி ஆழம் சென்றாலும் இந்த அழுத்தம் இரு மடங்காகிறது. 66 அடி ஆழத்தில் மூன்று மடங்கு, 99 அடி ஆழத்தில் நான்கு மடங்கு என்று டன் கணக்கில் அதிகமாகும்.
இளவரசன்: அப்படியானால் இந்தக் காற்றழுத்தம் மட்டும்தான் பிரச்சினையா?
பெரியவர்: அழுத்தம் ஒரு பிரச்சினை. கடலின் மிக ஆழத்தில் மிகவும் இருட்டாக இருக்கும் நீர் மேலே வெதுவெதுப்பாக இருப்பது அடியில் செல்லச்செல்லக் கடும் குளிராக இருக்கும். அதனால்தான் மனிதன் உருவாக்கிய ஆழ்கடல் 1960இல் அதாவது ரஷ்ய ஸ்புட்னிக் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு மூன்று ஆண்டுகளுக்குப்பின் கடல் பாதாளத்தை எட்டியது.
இளவரசன்: விண்ணில் செலுத்துவது விண்கலம், கடலில் செலுத்துவது கடல்கலம் அப்படித்தானே?
பெரியவர்: எப்படி விண்கலத்திற்கு ஸ்புட்னிக் என்று பெயர் இருக்கிறதோ அதுபோல் ஆழ்கடல் கலமான Babbyscape என்பதற்கு டிரியெஸ்டி என்னும் பெயரில் 1960ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22ஆம் நாள் பசிபிக் கடலிலிருந்து குவாம் எனும் தீவிலிருந்து 300 மைல் தொலைவில் உள்ள மாரியானாஸ் அகழியில் இருந்து அடிமட்டம் வரை இறங்கியது.
இளவரசன்: அய்யா, இவ்வளவு வயதிலும் நாள், கிழமையெல்லாம் கச்சிதமாக நினைவில் வைத்துத் தெளிவாகச் சொல்கிறீர்களே…!
பெரியவர்: பொறு, பொறு ஆழ்கடல் கலம் இறங்கிய இடத்தில் கடலின் ஆழம் 35,800 அடி. அதாவது கிட்டத்தட்ட 7 மைல். அக்கலத்தில் இருந்தவர்கள் இருவர். ஆழ்கடல் வீரர்கள் அவர்கள். அதுவரை எவரும் கடலில் அவ்வளவு ஆழத்துக்கு இறங்கியது கிடையாது.
இளவரசன்: விண்ணில் ராக்கெட் சர் என்று உயரே போவது போல் ஆழ்கடல் கலம் தண்ணீருக்குள்ளே சென்றிருக்குமோ?
பெரியவர்: அதுதான் இல்லை. ஆழ்கடல் கலம் இந்த 7 மைல் உள்ளே இறங்க 4 மணி நேரமும், மேலே வர 9 மணிநேரம் ஆகியது. டிரியெஸ்டி என்ற ஆழ்கடல் கலம் 4 முதல் 6 அங்குலம் வரை களம் கொண்ட உருக்கினால் தயாரிக்கப்பட்டு ஜன்னல்கள் அய்ந்தரை அங்குலம் களம் கொண்ட பிளாஸ்டிக்கினால் உருவாகியிருந்தன.
இளவரசன்: நீர்மூழ்கிக் கப்பல் போன்றதுதானே ஆழ்கடல் கலம்.
பெரியவர்: அதுதான் இல்லை. ஆழ்கடல் கலத்துடன் ஒப்பிட்டால் நீர்மூழ்கிக் கப்பல்கள் எல்லாம் அதிக ஆழம் செல்ல முடியாது. ஒரு மைல் ஆழம் செல்லும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள்கூட சமீபத்தில்தான் உருவாயின.
இளவரசன்: அய்யா, இந்தத் தகவல்கள் எல்லாம் புதியதாகவும், கேட்பதற்கு வியப்பாகவும் உள்ளன. இந்த முத்துக் குளிப்பவர்கள் என்பவர்கள் தூத்துக்குடியில் எவ்விதக் கலமும் இன்றி நீருக்குள் இறங்குகிறார்களே?
பெரியவர்: எவ்விதக் கலமும் இன்றி நீருக்குள் இறங்கி ஆராய்கிறவர்களுக்கு டிரைவர் என ஆங்கிலத்திலும், முக்குளிப்பாளர் என்று தமிழிலும் பெயர். அவர்கள் சுவாசிக்கக் காற்றை அளிக்கும் கருவியான ஸ்கூபா என்பதனை முகத்தில் மாட்டிக் கொண்டுதான் உள்ளே இறங்குகின்றனர். என்னதான் ஸ்கூபாவை மாட்டிக் கொண்டாலும் 300 அடிக்குக் கீழே செல்வது கடினம்.
இளவரசன்: அவ்வளவு ஆபத்து என்பது எனக்கு இவ்வளவு நாளும் தெரியாது.
பெரியவர்: அது மட்டுமல்ல, 300 அடிக்குக் கீழே இறங்கினால் சுவாசிக்க விசேட வாயு தேவையாதலால் இதனால் ஆக்சிஜன், ஹீலியம், நைட்ரஜன் ஆகிய மூன்றும் கலந்த கலவையினைக் குப்பி வழி அல்லது குழாய் வழி சுவாசிக்கச் செய்கின்றனர். சில வேளைகளில் நியான், ஆக்சிஜன் ஆகிய இரு வாயுக்கள் கலைவையைச் சுவாசிக்கின்றனர்.
இளவரசன்: இவ்வாறு ஆழத்தில் இறங்கும்போது அங்கிருந்து பேச முடியுமா?
பெரியவர்: கடலில் இவ்வாறு 300 அல்லது 400 அடி ஆழத்தில் இறங்கியவர்கள் அங்கிருந்து தொலைப்பேசியில் பேசினால் என்ன பேசுகிறார்கள் என்று புரியாது. நீருக்கடியில் விசேட வாயுக்கலவையைச் சுவாசித்துக் கொண்டே பேசும்போது அவர்கள் குரல் வாத்துக் குரல் போல மாறிவிடும். வேறு ஒரு கருவியை வைத்தே அவர்கள் பேச்சைப் புரிந்துகொள்ள முடியும்.
இளவரசன்: விண்ணில் பயணித்த யூரிகாகரின் போல கடலில் அதிக ஆழம் இறங்கிய சாதனையாளர்கள் இருக்கிறார்களா?
பெரியவர்: 1964ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லிண்ட் பெர்க் என்பவரும், இராபர்ட் ஸ்டெனுயிட் என்பவரும்தான் 432 அடி ஆழத்தில் 49 மணி நேரம் தங்கிச் சாதனை ஏற்படுத்தினர். கடலடியில் அமைக்கப்பட்ட உலோகக் கூடாரம் ஒன்றில் தங்கி, அவ்வப்போது சுவாசக் கருவியுடன் வெளியே வந்து நீரில் நடமாடினர்.
இளவரசன்: அந்த உலோகக் கூடாரத்தின் உள்ளே நீர் நுழையுமே?
பெரியவர்: கூடாரத்தில் நீர் நுழையாமல் தடுக்கக் கூடாரத்துக்குள் வெளிப்புறத்தில் இருந்த நீரில் அழுத்தத்துக்குச் சமமான விசேட வாயுக் கலவை இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர்.
இளவரசன்: அய்யா, அறிவியல் வளர்ச்சி இவ்வாறெல்லாம் பெருகி இருப்பதைக் கேட்கும்போது பெருமையாக இருக்கிறது. மனிதனின் சாதனைதான் இது.
பெரியவர்: லிண்ட்பெர்க்கும், ஸ்டெனூயிட்டும் கடலடியில் 49 மணி நேரம் வாசத்தை முடித்து மேலே வந்தபோது உடனடியாக வெளியே வரவில்லை. ஏன் தெரியுமா?
இளவரசன்: அப்படியா? உடனடியாக வெளியே விட்டால் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படுமா?
பெரியவர்: பரவாயில்லையே, சரியாகச் சிந்தித்து விட்டாயே. அவர்களை மேலே கொண்டு வந்து நான்கு நாட்கள் அழுத்தக் குறைப்பு அறை எனப்படும் Decompression Chamber என்பதில் தங்கி இருக்க நேரிட்டது. ஏனென்றால் கடலுக்குள் இறங்கியவர்கள் கடலடியில் பணியை முடித்து உடனே மேலே வெளியே வந்தால் அவர்களுக்குப் பிடிப்பு ஏற்படும், இறப்பு ஏற்படலாம். கடலுக்கு அடியில் நடமாடும் மனிதர் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாவதால் அவ்வாறான நிலையில் நைட்ரஜன் வாயு அவருடைய மூச்சுடன் வெளியேறாமல் இரத்தத்தில் கரைசலாகத் தங்கிவிடுகிறது. அதே அழுத்தத்தில் இருக்கும் வரை அந்த நைட்ரஜன் இரத்தத்தில் இருப்பதால் ஆபத்து இல்லை.
அவ்வாறு இல்லாது கடலின் மேற்பரப்புக்குத் திடீரென வந்தால், சோடாவில் கேஸ் வெளிவருவது போல நைட்ரஜன் திடீரெனப் பொங்கி இரத்தத்திலிருந்து வெளிப்பட்டு ஆளைக் கொன்றுவிடவோ, முடமாக்கவோ செய்துவிடும்.
இளவரசன்: இவ்வளவு பெரிய ஆபத்தை நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது.
பெரியவர்: அதனால்தான் ஒருவர் கடலுக்கு அடியில் மேலும், மேலும் ஆழத்தில் இறங்கும்போது எவ்வளவு நேரம் நீருக்கு அடியில் இருக்கலாம் என்பதற்குக் கால அளவுகள் உள்ளன.
இளவரசன்: வேறு யாரேனும் சென்றுள்ளார்களா?
பெரியவர்: 1964ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த நால்வர் கடலுக்கு அடியில் 190 அடி ஆழத்தில் 11 நாட்கள் இருந்தனர். விண்ணில் பறப்பது ஸ்கைலாப். தண்ணீரில் இறங்குவது சீலாப். 1965இல் சீலாப் 2 என்பதில் மொத்தம் 10 பேர் மூன்று குழுக்களாக 205 அடி ஆழத்தில் 15 நாள்களும், எம்.ஸ்காட் கார்பெண்டர் என்பவர் மொத்தம் 30 நாள்களும் தங்கிச் சாதனை புரிந்துள்ளனர்.
மனிதன் கடலுக்கு அடியில் தங்கிப் பணியாற்றும் ஆழமும், காலமும் படிப்படியாக அதிகரித்தது.
இளவரசன்: கடலுக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் அதிகபட்சமாகப் பணியாற்ற இயலும்?
பெரியவர்: மனிதனால் அதிகபட்சமாக 2,000 அடி ஆழத்தில் பணியாற்ற இயலும்.
இளவரசன்: அதற்கு மேல் முடியாதா?
பெரியவர்: முடியும். ஆனால், உறுதியான உருக்குத் தகட்டினால் ஆன கோட்டைக்குள் உட்கார்ந்து இருட்டில் இருந்துவிட்டு வரவேண்டியது. அவ்வளவுதான்.
இளவரசனின் தந்தை: என்னண்ணே! இளவரசன் உங்களைத் துளைத்து எடுத்து விட்டானா?
இளவரசன்: அதெல்லாம் ஒன்றும் இல்லை.
அப்பா! அய்யா கடலடி பற்றிப் புதிய புதிய செய்திகளையெல்லாம் தெளிவாகச் சொன்னார். ரொம்ப நன்றிங்க…
இளவரசனின் தந்தை: சரி சரி, வாங்க சாப்பிடலாம்.