குறுந் தொடர் – 3 : அம்முவுக்கு வயது 11
இனியன்
கூடும் மழையும்
மறுநாள் அதிகாலை வேளை. சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியிருந்தது. தூங்கிக் கொண்டிருந்த அம்முவை மெதுவாகத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு அழைத்து வந்தார் தாத்தா. தண்ணீரைத் தொட்டுக் கண்களைக் கழுவிவிட்டார். ஆனால், உடனே அம்முவின் கண்களைப் பொத்தியபடியே சிறிது தூரம் அழைத்துச்சென்றார் தாத்தா.
“தாத்தா…. எங்கே கூட்டிட்டுப் போறீங்க?” என்று கேட்டுக்கொண்டே வந்த அம்முவை ஓரிடத்தில் நிறுத்தி, பொத்தியிருந்த கண்களைத் திறந்து, பார்க்கச் சொன்னார்.
ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த அம்முவை, தூரத்தில் இருந்த பெரிய மரத்தைக் காட்டி அதில் தொங்கிக் கொண்டிருந்த தூக்கணாங்குருவிக் கூட்டைக் காட்டினார். முதன்முறையாக தூக்கணாங்குருவியைப் பார்க்கிறாள் அம்மு. ஒரே மரத்தில் நிறையக் கூடுகள் இருந்தன. தூக்கணாங்குருவிகள் அவற்றின் கூட்டின் தெற்குப் பக்க வாயிலின் வழியாக வெளியே வந்துவந்து விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்த்துக் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தாள் அம்மு.
தாத்தா கேட்டார், “இப்போ என்ன மாதம்?”
“ஆகஸ்ட் மாதம்” என்றாள் அம்மு. அவள் கண்கள் அந்தக் கூடுகளிலிருந்து விலகவே இல்லை.
“இந்த முறை வடக்கிருந்து வரும் மழை நல்லா இருக்கும்” எனச் சொன்னார் தாத்தா.
அவர் சொன்னதைக் கேட்டதும், நேற்று சொல்லியது போல் ஏதாவது சுவாரசியமாகச் சொல்வார் என நினைத்தபடியே எப்படி எனக் கேட்கத் தயாரானாள்.
”தூக்கணாங் குருவிகள் பொதுவாக மழைக்காலத்துக்கு முன்புதான் கூடுகளைக் கட்டும். மற்ற குருவிக் கூடுகளை விட இந்தக் குருவியின் கூடு வித்தியாசமாக இருக்கும். மனிதர்கள் கட்டும் வீட்டைப் போலவே உள்ளுக்குள் அறையெல்லாம் வைத்துக் கட்டிக் கொள்ளும். அப்படிக் கட்டும் போது வடக்குப் பக்கம் பார்த்து அதன் வாசல் இருந்தால் தென்மேற்கு மழை பெய்யும். ஒருவேளை தூக்கணாங்குருவி கூட்டின் வாசல் தெற்குப் பக்கம் பார்த்து கட்டியிருந்தால், வடகிழக்கு மழையும் பெய்யும் என்று அர்த்தம். வடகிழக்கு மழை பொதுவாக செப்டம்பர் மாதம் துவங்கி டிசம்பர் வரை கொஞ்சம் கொஞ்சமாப் பொழியும். இன்னும் பத்துப் பதினைந்து நாளில் ஆரம்பமாகும்” என்றார் தாத்தா.
தாத்தா சொல்வதை ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அம்மு “அப்போ, நேற்று மழை வரப் போகுதுன்னு சொன்னீங்களே?” என்றாள்.
தாத்தா சிரித்துக்கொண்டே ”நேற்று ஏரி நிரம்பும் அளவுக்கு அதிக மழை இருக்கும்ன்னு சொன்னேன். இன்று விரைவில் மழை வரப் போகுதுன்னு சொல்றேன். அந்தக் குருவிகள் மழையின் அளவைச் சொல்லும், இந்தக் குருவிகள் மழையின் வரவைச் சொல்லும்” என்றார் தாத்தா.
தாத்தா சொல்வது ஆச்சர்யமாக இருந்தாலும், ஒருமுறை செக் பண்ணிப் பார்ப்போம் என்ற எண்ணம் அம்முவுக்கு வந்தது. உடனே வீட்டுக்குள் ஓடித் தன்னுடைய செல்போனில் இந்த ஆண்டிற்கான மழையின் அளவைக் கூகுளில் தேடினாள். என்ன அதிசயம்… தாத்தா சொல்லியதுபோல் விரைவில் மழை துவங்கும் என்றும், வழக்கத்தை விடக் கூடுதல் மழை என்றும் தெரிவித்தது. உடனடியாக வீட்டில் இருந்த அனைவரிடமும் தாத்தா சொன்னதையும் அதனைச் செல்போனில் போட்டுப் பார்த்ததையும் சொல்லி விட்டு அழகாய்ச் சிரித்தாள்
கோலியும் கோழியும்
அப்பா, அம்மாவுடன் தாத்தாவும் புதுவீடு தொடர்பாக வெளியே சென்றுவிட்டார். அதனால், நேற்று விளையாடிய நண்பர்களுடனே வீதியில் விளையாடினாள் அம்மு. இப்போது நன்றாக கோலி அடிக்கக் கற்றுக்கொண்டாள். இன்று போண்டாக் கோலி (பெரிய கோலி) வைத்துக்கூட விளையாடினாள்.
மதிய உணவுக்காக மட்டும் வீட்டுக்கு வந்தாள் அம்மு. மெதுவாக வீட்டிற்குள் வந்தபோது பாட்டி அங்கிருந்த கோழிக் குஞ்சுகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இப்போதுதான் பாட்டியிடம் முதல்முறையாகத் தனிமையில் பேச நேரம் கிடைத்தது அம்முவுக்கு.
”கோழிக் குஞ்சுகள்கிட்ட என்ன பேசுறீங்க” என்று கேட்டவளை, சிரித்துக்கொண்டே கட்டிப் பிடித்து கொஞ்ச ஆரம்பித்தார் பாட்டி.
”கோழிக் குஞ்சுக்குப் பசிக்கும்ல… அதான் பசிக்குதான்னு கேட்டுகிட்டு இருந்தேன். இந்தக் குஞ்சுங்க எல்லாம் வெளியே வந்து கொஞ்சநாள்தான் ஆகியிருக்கு” என்று சொன்னார் பாட்டி. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆட்டுக் குட்டி ஒன்று வீட்டிற்குள் ’ம்மே….ம்மே…ம்மே’னு கத்திக்கிட்டே ஓடி வந்தது. அதைப் பிடித்து, ”இது பேரு ரங்கன். வா… வந்து தொட்டுப் பாரு ரங்கன் உனக்குத்தான்” எனச் சொல்லி அம்முவிடம் கொடுத்தார் பாட்டி.
முதலில் தயங்கினாலும் பிறகு, ரங்கனைப் பிடித்துக் கொண்டு கொஞ்சி விளையாடினாள் அம்மு.
”வீட்டுக்குள்ளேயே ஆடு, கோழி வளர்த்தா ஒன்னும் பண்ணாதா?” எனக் கேட்டாள் அம்மு.
“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாதுப்பா… அதுங்கயெல்லாம் வெளியேதான் அதிகம் சுத்தும். தேவைப்படும் போது மட்டும் வீட்டுக்குள்ள வரும். சாயங்கால நேரத்துல மொத்தமா வந்து அதுங்களோட இடத்துல அடைஞ்சிடும்” என்றார் பாட்டி.
“ஆட்டுக்கு பேர் வச்ச மாதிரி கோழிக் குஞ்சிகளுக்கும் பேர் வச்சிருக்கீங்களா பாட்டி?” என்று கேட்ட அம்முவிடம், “கோழிக் குஞ்சுகளுக்கு இன்னும் பேர் வைக்கல. நீயே பேர் வையேன்” என்றார் பாட்டி.
பாட்டி இப்படிச் சொன்னதும், என்ன பெயர் எல்லாம் வைக்கலாம், மொத்தம் 8 கோழிக் குஞ்சுகள் இருக்கே என அம்மு யோசித்தாள். அவளுக்கு லண்டன் நண்பர்கள் நினைவுக்கு வரவே அவர்கள் பெயரையே வைத்து விடலாம் எனச் சொல்லி முடிவு செய்தாள்.
”பாட்டி.. இது எது பாய்… எது கேர்ள்னு தெரியலையே பாட்டி?” என்றாள் அம்மு. அவள் சொன்னது பாட்டிக்கு முதலில் புரியவில்லை. பிறகு ஒருவாறு புரிந்துகொண்டார்
“இதெல்லாம் முட்டையில் இருந்து வெளியே வந்து ஒருவாரம்கூட ஆகல. இருபது நாளுக்கு மேல் ஆனாதான் தெரியும். மண்டையில் கொண்டை இருந்தா சேவல். அதாவது ஆண் கோழி. இல்லாட்டி கோழி – பெண் கோழி” என்றார் பாட்டி.
‘இப்போ என்ன செய்யறது?’ என சிறிதுநேரம் யோசித்த அம்மு, எந்தக் கோழியாக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து லூசி, ஜெனிபர், கெய்ரன், ரோமன், டேவிட், ஜேம்ஸ், ஆலிவர், ஜெப்ரி ஆகிய பெயர்களைச் சூட்டினாள்.
அம்மு வைத்த பெயர்களில் ஒன்றுகூட பாட்டிக்கு புரியவில்லை. பெயர்களைச் சொல்லவும் தெரியவில்லை. இருந்தாலும் மிகவும் ரசித்து ரசித்து ஏற்றுகொண்டார்.
அம்முவுக்குச் சாப்பாட்டை ஊட்டிவிட்டார் பாட்டி. அப்போது நீண்ட காலத் தோழிகள் போல இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
குடிசை வீட்டில் இருந்து முதன்முதலாக இந்த ஊரில் மாடி வீடு கட்டும் அம்முவின் அப்பா பற்றியெல்லாம் பாட்டி நிறைய விஷயங்களைக் கூறினார். அதையெல்லாம் சாப்பிட்டு முடித்த பிறகும் கேட்டுக் கொண்டிருந்த அம்மு, அப்படியே மதியம் தூங்கிவிட்டாள்.
தூக்கத்தில் லண்டனில் இருந்த போது அப்பா பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஊரில் வீடு ஒன்று கட்ட வேண்டும். அப்போதுதான் ஊருக்குச் செல்ல வேண்டும் என! – அவர் அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தது எல்லாம் ஏன் என்று இப்போதுதான் உணரத் துவங்கியிருப்பதாக நினைத்தாள் அம்மு.
(தொடரும்)