அறிஞர்களின் வாழ்வில்…
பதவி தந்த பாடம்
அமெரிக்கா, இங்கிலாந்திடம் போரிட்டு வெற்றி பெற்று அடிமை விலங்கொடித்த நேரம். இராணுவத்தினர் தளவாடக் கருவிகளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர். ஒரு இடத்தில் குன்றின் மேல் உள்ள அரணுக்கு பெரிய தளவாடப் பொருளை வீரர்கள் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஒரு தளபதி கட்டளை பிறப்பித்து வழிநடத்தினார்.
வெகுநேரம் தள்ளியும் வீரர்களால் அப்பொருளை, உரிய இடத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை. களைப்பால் மிகவும் சோர்வுற்றனர். அதேநேரம், தளபதி ஒரு கை பிடித்துத் தள்ளினால் போதும்; கருவி உரிய இடத்திற்குச் சென்றிருக்கும். ஆனால், தளபதி, தனது பதவி வெறி, கவுரவ வெறியால் வீரர்களைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.
இந்தக் காட்சியை ஒருவர் பார்த்தார். குதிரையிலிருந்து இறங்கி, மேலே சென்று வீரர்களுடன் சேர்ந்து தள்ளினார். பொருளும் இலக்கை அடைந்தது. தளபதிக்கு அவர் வந்து உதவியது பிடிக்கவில்லை. நீ யார்? இங்கு ஏன் வந்தாய்? இராணுவப் பொருளைத் தொடுவதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கடிந்து கொண்டார். உதவிக்கு வந்தவர் அமைதியாக தலைகுனிந்து நின்றார். இதைப் பார்த்த தளபதியாருக்குக் கோபமும், ஏளனமும் எல்லை மீறிப்போனது. நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். நீ யார்? சொல், இல்லையேல் தண்டிக்கப்படுவாய் என எச்சரித்தார்.
உதவிக்கு வந்தவர் அடக்கத்துடனும், பணிவுடனும் மெதுவாக பதில் சொன்னார். “They said I am the President of U.S.A. அமெரிக்க அய்க்கியக் குடியரசு மக்கள் என்னைக் குடியரசுத் தலைவர் என்று சொல்லுகிறார்கள். என் பெயர் ஜார்ஜ் வாஷிங்டன் என்றார்.
தவறை உணர்ந்த தளபதி தன்னை மன்னித்து விடும்படி மன்றாடிக் கேட்டார். தளபதியே உங்களை மன்னித்தேன், மறந்தேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவிக்கரம் நீட்டுவதுதான் உங்கள் பதவிக்கும் இந்த நாட்டிற்கும் பெருமை என்று சொல்லிவிட்டு தன் குதிரை இருக்குமிடம் சென்றார் வாஷிங்டன். இராணுவ வீரர்கள் ஆனந்தக் கண்ணீரால் விடைகொடுத்து அனுப்பினர். அதேநேரம் தளபதியின் முகம் நாணத்தால் வெட்கித் தலைகுனிந்தது.
– மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்