செ.நு. தொடர் – 4 : அசிமோவின் மூன்று விதிகள்
‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்
செயற்கை நுண்ணறிவும் ரோபோ தொழில்நுட்பமும் வளர மிக முக்கியமான காரணம் கலைப் படைப்புகள்தாம்! செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையான விதிகளை அறிவியலாளர்கள் பெற்றது ஒரு சிறு கதையிலிருந்து! ரோபோ என்ற பெயர் கூட ஒரு நாடகத்தில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த நாடகத்திலிருந்து தான் அந்தச் சொல்லை அறிவியல் உலகம் பெற்றுக் கொண்டது.
செயற்கை நுண்ணறிவு என்பதற்கே அய்சக் அசிமோவின் மூன்று விதிகள் தாம் அடிப்படையானவை. அய்சக் அசிமோ ஓர் இயற்பியலாளர். சிறுகதைகள், நாவல்கள் அற்புதமாக எழுதுவார். குறிப்பாக அறிவியல் புனை கதைகள். அப்படி அய்சக் அசிமோவின் கற்பனையில் உருவாகிய ஒரு சிறுகதையில் ரோபோக்கள் நிச்சயமாக மூன்று விதிகளைப் பின்பற்ற வேண்டும் என பட்டியலிட்டார். அவை,
1. ஒரு ரோபோ எக்காரணம் கொண்டும் மனிதர்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது.- ஒருவேளை மனிதர்கள் ஏதாவது தீங்கில் மாட்டிக் கொண்டால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது.
இந்த விதி உங்களுக்கு எளிதாகப் புரியும். ரோபோ எக்காரணம் கொண்டும் மனிதர்களுக்குக் காயம் விளைவிக்கவோ அல்லது உளவியல் ரீதியாக மனக்காயம் ஏற்படுத்தவோ கூடாது; அப்படியான செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
2. மனிதர்கள் கொடுக்கும் கட்டளையை ரோபோ நிறைவேற்ற வேண்டும். ஆனால் முதல் விதியுடன் முரண்படக்கூடாது.
மனிதர்கள் கொடுக்கும் கட்டளையை ஒரு ரோபோ ஏற்று நடக்க வேண்டும். ஒரு வேளை மனிதர், ‘என்னைக் கொல்லு’ என்று கட்டளையிட்டால், அந்தக் கட்டளை, “மனிதர்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது’’ என்ற முதல் விதியுடன் முரண்படுவதால் ரோபோவால் நிறைவேற்ற முடியாது.
3. ஒரு ரோபோ தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்தத் தற்காத்துக் கொள்ளுதல் முதல் விதியுடனும் இரண்டாம் விதியுடனும் முரண்படக் கூடாது.
ஒரு காரில் மனிதரும் ரோபோவும் சென்று கொண்டிருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்தக் கார் தீப்பற்றி எரிகிறது. இப்போது ரோபோ தற்காத்துக் கொள்ள வேண்டும். அதுதான் மூன்றாம் விதி. ஆனால், அப்படி தற்காத்துக் கொள்ள அது தப்பிக்கும் போது ஒரு வேளை அங்கு இருக்கும் மனிதருக்கு ஏதாவது தீங்கு நேரிடும் என்றால், ரோபோ தன்னைக் காத்துக் கொள்வதை விட அந்த மனிதருக்குத் தீங்கு ஏதும் செய்யக்கூடாது என்ற விதியைத் தான் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு வேளை “நீ தப்பித்துக் கொள்’’ என்று கட்டளை மனிதர் இட்டாலும் தப்பிக்கும் பொருட்டு அந்த மனிதருக்கு ஏதாவது தீங்கைச் செய்ய வேண்டும் என்றால் இது இரண்டாம் விதியுடன் முரண்படுவதால் ரோபோ அந்த மனிதரின் அந்தக் கட்டளையை ஏற்று நடக்காது.
மனிதர்களுக்குப் பாதுகாப்பாக மேற்கண்ட மூன்று விதிகளும் இருக்கு இல்லையா?
செக் நாட்டைச் சேர்ந்த கரேல் காப்பி என்பவர் எழுதிய நாடகத்தில் தான் ரோபோ (Robot) என்ற வார்த்தை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அது செக்கோஸ்லோவிக்கிய மொழியில் உள்ள ரோபாட்டா எனும் வார்த்தையில் இருந்து உருவானது. ரோபாட்டா என்றால் அடிமை அல்லது வேலைக்காரர் என்று பொருள்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் பல வகையில் சிறுகதைகள் மற்றும் நாவல்களால் பெரும் தாக்கம் ஏற்பட்டது. நல்ல அறிவியல் புனைவுகளை நாம் நிச்சயம் நம் வாழ்வில் படித்தே தீர வேண்டும். அந்த அறிவியல் புனைவுகளில் இருந்து தான் வருங்காலத் தொழில்நுட்பத்திற்கான அகத்தூண்டுதல் நம்மிடையே ஏற்படும்.
கதைகள், நாவல்கள், நல்ல கவிதைகள், அறிவியல் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் அனைத்தையும் சிறுபிள்ளைகளான நீங்கள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இவை எல்லாம் தான் பல சிக்கலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை உங்களுக்கு எளிதாகப் புரிய வைக்கப் பயன்படும். கற்பனை வளம் இல்லாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் கற்பது நிச்சயம் சாத்தியம் இல்லாதது. அதனால் கற்பனை வளத்தைத் தூண்டும் நல்ல கலைகளை நம் வாழ்வில் ரசிப்பதும், கற்றுக் கொள்வதும், அதன் உருவாக்கத்தில் ஈடுபடுவதும் மிகவும் அத்தியாவசியமானது.
அசிமோவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட அய் ரோபோட் (I Robot) என்னும் திரைப்படத்தை அவசியம் பாருங்கள். அதே போன்று ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனும் ஆங்கிலப் படம் தமிழ் மொழிபெயர்ப்புடன் உள்ளது. அந்தப் படத்தையும் அவசியம் பாருங்கள்.