சிறார் கதை : சிம்புவுக்குக் கால் கொடுத்த அப்பு!
வசீகரன்
அந்தக் காட்டில் ஒரு குரங்குக் குட்டி இருந்தது. அதன் பெயர் சிம்பு, சிம்புவின் கையில் ஒரு பலாப்பழம் கிடைத்தது. அந்தப் பழத்தை உருட்டி உருட்டிப் பார்த்தது சிம்பு. அதன் தோளில் முள்கள் நிறைந்திருந்தன. இருந்தாலும், அப்பழத்திலிருந்து வந்த வாசனை சிம்புவை விடவில்லை. இந்தப் பழத்தைப் பிளந்து விட்டால் உள்ளே இருக்கும் இனிப்பான சுளைகளை எடுத்துச் சுவைக்கலாம் என்பது அதற்குத் தெரிந்தே இருந்தது.
ஆனால், சிம்புவோ ஒரு குட்டிக் குரங்கு. அந்தக் குட்டியால் எப்படி அந்தப் பழத்தைப் பிய்க்க முடியும்? பலம் கொண்ட மட்டும் கைகளால் முயற்சி செய்து பார்த்தது. இம்மிகூட முடியவில்லை. சிம்புவுக்கு அழுகையே வந்து விட்டது.
அப்போது அங்கே ஒரு யானைக் குட்டி வந்தது. அந்தக் குட்டி யானையைப் பார்த்தது, சிம்பு. ஒரு கணம் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அதனை வரவேற்றது.
“வா.. வா.. யானைக்குட்டியாரே! என்ன தனியாக வருகின்றீர்” என்று கேட்டது சிம்பு.
உடனே குட்டி யானையும், “என் பெயர் யானைக்குட்டி இல்லை. அப்பு! தெரியுமா? எங்க அம்மா வைத்த பெயர்’’ என்றது.
“அட… அழகான பெயராத்தான் இருக்கு! அது. சரி அப்பு, நீ ஏன் தனியே வருகிறாய்! உன் இனத்தாரை எங்கே காணோம்?” என்றது,
“குரங்குப் பையா… நான்தான் எங்கள் கூட்டத்தை விட்டு, காணாமல் போய்விட்டேன். நான், என் அம்மா, உறவினர்கள் எல்லாம் காட்டுக் கதை பேசிக்கொண்டு, ஹாயாக வந்து கொண்டிருந்தோம். அப்போது நான்தான் எப்படியோ வழிதவறி விட்டேன். அவர்களைத் தேடித்தான் அலைகிறேன்” என்றது.
“அடடா… அப்பு, உன் கதையைக் கேட்க பரிதாபமாக இருக்கிறது. சரி சரி… நீ வந்திருப்பது சிம்புவிடம் என்பதால் நம்மிருவருக்கும் இனி நல்ல நேரம் தான்” என்றது சிம்பு,
அப்புவும் “அது யார் சிம்பு?” என்று கேட்டது.
“என்ன அப்படிக் கேட்டுவிட்டாய் அப்பு, இதோ உன் முன் நிற்கிறேனே. இந்த இளவரசனின் பெயர்தான் சிம்பு” என்றது.
“ஓகோ… சிம்பு, நீதான் இந்தக் காட்டுக்கு இளவரசனா?” என்று கேட்டது அப்பு.
அதற்கு சிம்பு சிரித்தபடி, ”என் அம்மா தான் அப்படிச் சொல்வாள். ஆனால் அதை மற்ற விலங்குகள் முன் சொல்ல மாட்டாள். என்ன இருந்தாலும் நாங்கள் சாதாரண குரங்குகள் தானே!” என்றது.
“சாதாரண குரங்காக இருந்தாலும் நீங்கள் தானே மனித இனத்துக்கு முன்னோடி. என் அம்மா சொல்லி இருக்கிறாள், உன்கிட்ட எதுக்கும் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்” என்று கிண்டல் செய்தது அப்பு.
“அதுசரி… நான் இங்கே வந்தபோது நீ அழுதுகொண்டிருப்பதுபோல் தெரிந்ததே உண்மையா… நீ அழுதாயா?”
“இந்த இளவரசனின் இயலாமையைப் பார்த்து விட்டாயா அப்பு! இதோ, இந்தப் பலாப்பழம் தான் என் அழுகைக்குக் காரணம். இதைப் பிய்த்துத் தின்ன ஆசை. ஆனால், இயலவில்லை. நீ யானை இனம் தானே, உனக்குப் பலம் அதிகம் இருக்கும். எனக்கு இந்த உதவியைச் செய்ய மாட்டாயா?” என்று கேட்டது சிம்பு.
“அடுத்தவருக்கு உதவி செய்வது என்பது எனக்குத் தேன் பருகுவது மாதிரி. ‘இயலாதவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வாள். ‘நான் உனக்குக் கால் கொடுக்கிறேன்” என்றபடி மெல்ல தன் முன்காலைத் தூக்கி அந்தப் பலாவின் மீது ஒரு ‘மொத்’ வைத்தது.
அவ்வளவுதான் பலாப்பழம் பிளந்து நான்காக விரிந்கீது விட்டது. பலாச் சுளைகள் மீது சூரியக் கதிர் பட்டு மஞ்சள் வண்ணத்தில் சூரியன்கள் போன்றே மின்னின. அதைவிடவும் பலா வாசனை காற்றோடு கலந்து சிம்புவின் மூக்கை அள்ளியது.
“நன்றி அப்பு நண்பா, நாம் இருவரும் இந்தப் பலாவை உண்ணலாம்” என்றது சிம்பு.
“சிம்பு, பலாவை நீயே உண்டு கொள்; அடிக்கடி நான் உண்பதுதான் இது. எனக்கு உதவுவதாக இருந்தால், என் கூட்டத்தைக் கண்டுபிடித்துக் கொடு”
“இதோ ஒரு நொடியில் துப்பறிவான் இந்தச் சிம்பு” என்று கூறிவிட்டு அருகில் இருந்த பெரிய ஆலமரத்தில் ‘கிடுகிடுவென ஏறி அதன் உச்சிக்கே சென்று விட்டது. உச்சியில் இருந்து பார்த்தது. கிழக்கில் உள்ள ஆற்றங்கரை ஓரமாக யானைக்கூட்டம் நின்று கொண்டு இருந்தது.
அங்கிருந்து ஒரே தாவாய்த் தாவி, தரைக்கு வந்தது சிம்பு.
“உன்னைத் தேடிக்கொண்டுதான் ஆற்றங்கரை ஓரமாக உன் உறவினர்கள் நிற்கின்றார்கள். வா… நான் வழிகாட்டுகிறேன்” என்றது சிம்பு.
“சிம்பு நீ முதலில் பலாவைச் சாப்பிடு, அப்புறம் நாம் உலா போகலாம்” என்றது அப்பு.
“ம்… ஹூம்… முதலில் உன் அம்மாவோடு உன்னைச் சேர்க்கிறேன். அதுதான் நன்றிக்குரிய செயல்” என்று கூறி, அப்புவுக்கு வழிகாட்டியபடி சென்றது சிம்பு.
பலா வாசனையும் அதன்கூடவே பயணம் செய்தது.