உலகநாடுகள்
சீனா(CHINA)
- கிழக்காசிய நாடு.
- உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்து பரப்பளவில் மூன்றாவது பெரிய நாடு.
- உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ளது.
- சீனப் பெருஞ்சுவர் இதன் பெருமையைக் கூறுவது.
- தலைநகர் பீஜிங்; வர்த்தகத் தலைநகர்: சாங்காய். ஆட்சிமொழி : மாண்டரின். அரசு: சோசலிச குடியரசு.
- நாணயம்: ரென்மின்பி யுவான் (Renminbi Yuan) 1911, அக்டோபர் 10 அன்று சீனக் குடியரசாகியுள்ளது.
- 1949 அக்டோபர் 1 அன்று மக்கள் சீனக் குடியரசாகியுள்ளது.
- அதிபர்: ஹூ ஜின்டாவ் (Hu Jintao), பிரிமியர்: வெண் சியாபோ (Wen Jiabao)
- ஆசியாவில் மிக நீளமானதும் உலகில் மூன்றாவது நீளமுடையதுமான யாங்சி நதி ஓடுகிறது.
உலகின் மிகப் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான சீன நாகரிகம், வடசீனச் சமவெளியின் ஊடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்துள்ளது. 4,000 ஆண்டுகளாக சியா(Xia) வம்சம் தொடங்கி கிங்(Qing) வம்சம் வரை யிலான அரச வம்சங்களால் ஆளப்பட்டுள்ளது.
1911ஆம் ஆண்டு டாக்டர் சன் யாட் சென் தலைமையில் குடியரசானது. தொடர்ந்து உள்நாட்டுக் கலகங்களையும் ஜப்பானின் தாக்குதலையும் எதிர்கொண்டது. 1949ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள், தியென் ஆன் மென் வாயிற் கோபுரத்திலிருந்து பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் மா சே துங் சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டதாக அறிவித்தார்.
சீனாவுக்கு அஞ்சி புத்தமதத் தலைவர் தலாய்லாமாவும் அவரது ஆதரவாளர்களும் திபெத்திலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1962இல் இந்தியாவுடன் எல்லைத் தகராறு போர் நடைபெற்றது. 1972இல் ரஷ்யாவிடமிருந்து பிரிந்து அமெரிக்காவுடன் கைகோர்த்தது. அய்க்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினரானது. 1989இல் தினாமென் சதுக்கத்தில் ஜனநாயகம் வேண்டிப் போராடிய மாணவர்கள் கொடூரமான முறையில் அடக்கப்பட்டனர். டென் சியாவோ பெங்கின் பொருளாதாரச் சீர்திருத்தத்தால் பொதுவுடைமைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஆண்டுச் சராசரியாக 9 சதவிகித வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. என்றாலும் ஆட்சி அதிகாரம் பொதுவுடைமைக் கட்சியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
ஹாங்காங்
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த ஹாங்காங்கை பிரிட்டிஷ் கடற்படை 1841இல் கைப்பற்றியது. 1898இல் பிரிட்டன் ஹாங்காங்கை 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு எடுத்தது. இரண்டாம் உலகப் போரின்போது சில வருடங்கள் ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்தது. பிரிட்டனின் ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய வாணிக மய்யமாக வளர்ந்தது. 1997 ஜூலை அன்று பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிற்குத் திருப்பிக் கொடுத்தது.
சீனாவின் சிறப்பு ஆட்சிப் பகுதிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. உலகின் பரபரப்பான வாணிக மய்யமாகவும் திகழ்கிறது.
புவியியல் அமைப்பு
கிழக்கு: வடகொரியா. வடக்கு: மங்கோலியா வடகிழக்கு: ரஷ்யா. வடமேற்-கு: கசாக்கிஸ்தான், கீர்கிஸ்தான், தாஜிகிஸ்தான். மேற்கு, தென்மேற்கு: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான். தெற்கு: மியான்மர், லாவோங், வியட்நாம்.
மக்கள்தொகை
இங்கு 56 வகை இன மக்கள் உள்ளனர். ஒரு தம்பதிகளுக்கு ஒரு குழந்தைத் திட்டம், முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் இரண்டாவது குழந்தையைப் பெறலாம் போன்ற பல குடும்பநலத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியதில் 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற பால் விகிதநிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி
1986 முதல் வழங்கப் பட்டு வந்த 9 வருட கட்டாயக் கல்வி முறையானது 2006 முதல் இலவசக் கல்வியாக மாற்றப்பட்டுள் ளது. பழங்குடி, கிராமப்புற மக்களுக்கு தேசிய உதவித் தொகை மற்றும் மாநில நிதி உதவியுடன் கல்வி வழங்கப்படுகிறது.
ஷாங்காய் மாணவர்கள் கணிதம், அறிவியல், இலக்கியத்தில் 2009ஆம் ஆண்டு உலக அளவில் சாதனை மாணவர்க ளாகத் திகழ்ந்துள்ளனர்.
உலகின் மிகப் பழைமை வாய்ந்த சிறந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றான பீகிங் பல்கலைக்கழகம் சீனாவில்தான் உள்ளது. Guozijian என்ற பழைய பெயரானது 1898இல் பீகிங் பல்கலைக்கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது.
எலட்ரானிக் பொருள்கள், செயற்கைக்கோள், கணினி தயாரிப்பில் உலகின் முன்னணியில் உள்ளது.