டமடமடமால் : சிங்கமும் குட்டி எலியும்
சிங்கம் ஓடியது. எலி அதனைத் துரத்தியது. சிங்கம் வேகம் எடுத்தது, எலியும் வேகம் எடுத்தது. மலைக்காட்டில் இருந்த மரங்களை எல்லாம் சுற்றிச் சுற்றி இரண்டும் வந்தன. விநோதமாக இருக்கே என யானை யோசித்தது. சிங்கத்தின் பாதையில் யானை நின்றது. சிங்கம் கால்களால் ‘ப்ரேக்’ போட்டு நின்றது. எலியும் அதே போல நின்றது.
“என்னாச்சு சிங்கம், ஏன் எலி உங்களத் துரத்த நீங்க ஓட்றீங்க?”
“எனக்கு வயசாயிட்டுதுன்னு இந்த எலி சொல்லிச்சு. முடிஞ்சா பிடின்னு சொல்லி ஓடினேன்”
எலி அதற்கு முன்னர் நடந்த கதையைச் சொன்னது. சிங்கம் மரத்தின் அடியில் அமர்ந்து இருந்ததா. மரத்தின் மேலே இருந்து சிங்கத்தின் முதுகைப் பார்த்ததும் ஒரு சறுக்குமரம் போல இருந்ததால, ‘தொபக்’ என்று குதித்து சறுக்கினேன். முதல்முறை சிங்கம் கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் முறையும் கண்டுகொள்ளவில்லை. மூன்றாம் முறை சினம் கொண்டது சிங்கம். “எலியாரே, தூரப்போய் விளையாடு!” என எச்சரித்தது. அப்போதும் சறுக்குவதை நான் நிறுத்தவில்லை. ஒவ்வொரு முறையும் ‘டமடம டம்டம்’ என்று பாடிக்கொண்டே இறங்கும்போது எனக்கு மகிழ்வாக இருந்தது. போகப் போக வாய்ப்பேச்சு முற்றியது.
“நான் வயதானவன் இல்லை, என்னைத் துரத்திப் பிடித்துவிட்டால் நீ சொல்வதைக் கேட்கின்றேன் என்று சிங்கம் சவால்விட்டது. அதுதான் ஓடி வந்தோம்’’ என்று எலி கூறியது.
உடனே யானை, “இப்ப நீங்க நண்பர்களாக இருப்பீங்க. நாளைக்கோ நாளை மறுநாளோ வேடன் வலை விரிப்பான், சிங்கம் சிக்கும். நீ உன் பற்களால் வலையைக் கடித்து சிங்கத்தைக் காப்பாற்றுவாய். எவ்ளோ காலத்துக்கு இதே கதை நடக்கும்” என்றது. சின்ன வயதிலிருந்து யானை இதே கதையை ஆயிரத்தி அய்ந்நூறுமுறை கேட்டுவிட்டது போல “அட, போங்கப்பா” என நகர்ந்துவிட்டது யானை.
“சரி, நாம இனிமேல் நண்பர்களாக இருப்போம் சிங்கம்” என்றது பவ்யமாக எலி.
“சம்மதம். எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்து என்மீது ஏறி விளையாடு” என்றது சிங்கம் சிரித்தபடி.
அதன்பிறகு இருவரும் நண்பர்களாக மாறிவிட்டன. எலி அடிக்கடி சிங்கம் மீது குதித்து விளையாடும். ‘டமடமடம்டம்’ என்ற பாட்டு அடிக்கடி கேட்கும்.
காடுகளில் விலங்குகள் வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பதில்லை. அதற்காக ஆங்காங்கே கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தன. ஒரு நாள் இரவு… சிங்கத்திற்கு அவசரமாக சூச்சூ வந்தது. கழிவறையைத் தேடிச் சென்றது. சிறுநீர் கழித்த பின்னர்தான் அது சதிவலையில் சிக்கி இருப்பது புரிந்தது. வேடர்கள் இப்போது வலைகளைப் பயன்படுத்துவதில்லை. வேட்டையாட வேன் களைப் பயன்படுத்துகின்றனர். வேனில் நடமாடும் கழிவறைகளை வைக்கின்றனர். விலங்கு உள்ளே வந்ததும் அதனைக் கம்பி போட்டுப் பிடித்துவிடுகின்றனர். வீடுகளில் எலிகளைப் பிடிக்கும் எலிப்பொறி போலவே பெரிய கூண்டாக இருக்கும். சிங்கத்திற்கு முன்னர் கம்பிக் கதவு இருந்தது. சிறைக் கம்பி போல அது இருந்தது. எவ்வளவோ பலங்கொண்ட மட்டும் கால்களால் அடித்தும் அதனால் கம்பியை நீக்க முடியவில்லை. சத்தமிட்டும் எதுவும் பயனில்லை. காலையில் பனிக்கூழ் சாப்பிட்டதால் தொண்டை கட்டி இருந்தது.
எதேச்சையாக அதன் நண்பர் எலி அங்கே வந்தது.
“ஏய் எலி நண்பா, என்னைக் காப்பாற்று! உன் பல்லால் கம்பியைக் கடித்து உடைத்துக் காப்பாற்று” என்றது. கம்பியைச் சுற்றிச் சுற்றி வந்தது எலி.
“வாய்ப்பில்ல ராசா வாய்ப்பில்லை. நேற்று மாலைலதான் பல் டாக்டர்கிட்ட போயிட்டு வந்தேன். இருக்கிற ரெண்டு பல்லில் ஒரு பல் ஆடுது. நிறைய ‘ஜங்க் புட்ஸ்’ சாப்பிட்றேனாம். இதனைக் கடிக்க முடியாது. எங்காச்சும் சர்கஸ்ல பார்க்கின்றேன், சிங்க நண்பனே! டாட்டா”… என்றது.
“அடேய், பயமுறுத்தாத” எனப் பதறியது சிங்கம்.
சரியாக வேடர்கள் வேன் எடுக்க வந்தனர். சிங்கம் சிக்கி இருப்பது தெரிந்தது. “சத்தமில்லாமல் வண்டிய ஓட்டிக்கிட்டு மலை மேல இருக்கும் காட்டிலிருந்து போய்விடவேண்டும் எனக் கட்டளையிட்டார் முதல் வேடன்.
“இதோ கூட்டிகிட்டுப் போக வந்துட்டாங்க” என்று எலி மேலும் பயமுறுத்தியது.
இரண்டாம் வேடன் எஞ்சினை இயக்கி, முன் விளக்கினைப் போடாமல் வண்டியை நகர்த்த முயன்றார். ‘டப்’ என்று சத்தம். டயர் வெடித்தது. நம்ம எலியார் ஏற்கனவே நான்கு டயர்களின் கீழேயும் கூர்மையான கற்களையும் முள் செடிகளையும் வைத்திருந்தார். முன்விளக்கினைப் போட்டு கீழே இறங்கி டயர் மாற்ற முடியுமா என ஆராய்ந்தனர் இரண்டு வேடர்களும். இதுதான் சமயம் என எலி வண்டிக்குள் ஏறியது. ஒலிப்பான்(ஹார்ன்) அடிக்கும் பகுதிக்குச் சென்று மேலே ஏறி ஏறிக் குதித்தது.
பாம் பாம் பாம் பாம் என காடே அதிரும் சத்தம். ஒலிப்பான்(ஹார்ன்) மீது எகிறிக் குதிப்பதை நிறுத்தவே இல்லை.
குட்டி விலங்குகள் பயந்தாலும் பெரிய விலங்குகள் எல்லாம் எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கி ஓடின. யாருக்கோ ஏதோ ஆபத்து என உணர்ந்தன. யானைகளும், விலங்குகளும் ஓடிவரும் சத்தம் கேட்டதும் வேடர்கள் நடுங்கினார்கள். ஓட்டம் பிடித்தார்கள். எல்லோரும் சேர்ந்து சிங்கத்தை மீட்டனர். யானையைப் பார்த்து எலி சொன்னது, “என்ன யானையாரே, என் நண்பரை நான் காப்பாற்றிவிட்டேனா?” என்றது. கூடியிருந்த விலங்குகள் எல்லாம் குழம்பிவிட்டன.
விடியற்காலை ‘டமடமடமால்’ என்ற சத்தம் கேட்டது. அது மலையில் இருந்து வேனை உருட்டிவிட்ட சத்தம்தான்.<