கைத்தொழிலும் குலத்தொழிலும்
செய்யப்படும் முறை, அளவு, முதலீடு போன்றவற்றின் அடிப்படையில், கைத்தொழில், சிறுதொழில், பெருந்தொழில் என்று தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன. சிறு மற்றும் பேரளவுத் தொழில்களில் எந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் நிலையில், கையாலே பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் கைத்தொழில்கள் எனப்படுகின்றன.
உலகில் தொடக்க காலத்தில் எல்லா தொழில்களும் கைத்தொழிலாகவே இருந்தன. பிறகு, எந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதில் தொடர்ந்து வளர்ச்சி ஏற்பட்டு வந்ததால் எந்திரங்கள் மூலம் செய்யப்படும் சிறு, பெருந்தொழில்கள் உருவாகின.
உலகில் எல்லா நாடுகளிலும், கைத் தொழில்கள் நடப்பில் இருந்த காலத்தில், யார் யார் எந்தெந்தத் தொழிலில் ஆர்வமும், திறமையும் பெற்று இருந்தார்களோ அவர்கள் அந்தந்தக் கைத்தொழிலைச் செய்தனர். அதில் விருப்பமும் திறமையும் இல்லாதவர்கள் வேறு தொழில்களைச் செய்து கொள்வார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் சாஸ்திரங்களின் பெயரால், கைத்தொழில் என்பது குலத்தொழிலாக மாற்றப் பட்டது. குலத்தொழிலையே பரம்பரையாக பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டது.
அப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவாய் துணி வெளுக்க ஒரு குலமும். மட்பாண்டம் செய்ய ஒரு குலமும், தச்சு வேலை செய்ய ஒரு குலமும், பிணம் எரிக்க ஒரு குலமும், மாடு மேய்க்க ஒரு குலமும் என்று ஒவ்வொரு தொழிலையும் குலவழியாகச் செய்யும் கட்டாயநிலை பிறப்பின் அடிப்படையில் உருவாயிற்று. இதன் வழி ஜாதிகளும் உருவாகின.
குலத் தொழிலின் கேடுகள்
பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொழிலைத்தான் பரம்பரையாய்ச் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தால் தனிமனித உரிமை, விருப்பம், திறமை, மேன்மை எல்லாம் பாதிக்கப்பட்டன.
தச்சுவேலை செய்பவரின் பிள்ளை விஞ்ஞானியாக வர வாய்ப்புண்டு. அந்தப் பிள்ளைக்கு அத்தகுதியும் விருப்பமும் இருந்தாலும், குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தால், அப்பிள்ளை அறிவியல் படித்தும் விஞ்ஞானியாய் வர முடியாமல், தந்தையின் வேலையான தச்சுவேலையையே செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், அப்பிள்ளையின் விருப்பம், ஆற்றல், ஆளுமை அனைத்தும் தடைசெய்யப்பட்டன.
அதேபோல் ஒரு குயவருக்குப் பிறந்த பிள்ளை மட்பாண்டம் செய்ய விருப்பமும், அதில் திறமையும் இல்லாமல் இருந்தாலும், அப்பிள்ளை ஒரு மருத்துவராக வர விரும்பினாலும் அது தடுக்கப்பட்டு, அப்பிள்ளைக்கு விருப்பமில்லா, திறமையில்லா மட்பாண்டத் தொழிலிலே ஈடுபட வேண்டிய அவலம் ஏற்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டில், குலத்தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தால் மேற்கண்ட பாதிப்புகள் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஏற்படுத்தப்பட்டன.
நீதிக்கட்சியும், திராவிடர் இயக்கமும்
இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தச் சமூக அநீதி தொடர்ந்த நிலையில், ஒரு நூற்றாண்டுக்கு முன் சமூகநீதியை நிலைநாட்ட, ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க, மனித உரிமையை நிலைநிறுத்த நீதிக்கட்சி முயன்றது; அதற்கான முன்முயற்சிகளை எடுத்தது. கல்வி, வேலை வாய்ப்பில் பார்ப்பனர் அல்லாதார் உரிமையும், வாய்ப்பும் பெற வழிவகுத்தது.
ராஜகோபாலாச்சாரியார் முதல்வராக இருந்தபோது, பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு குலக்கல்வியை வலியுறுத்திச் சட்டம் செய்தார். அதன்படி ஒவ்வொரு பிள்ளையும் பாதி நேரம் பள்ளியில் படிக்கவேண்டும், மீதி நேரம் வீட்டில் தன் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.
இதனால் வெகுண்டெழுந்த தந்தை பெரியார் குலக்கல்விக்கு எதிராகக் கடும் போராட்டங்களை அறிவித்தார்.
பெரியாரின் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த ராஜகோபாலாச்சாரியார், முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். அவருக்குப்பிறகு முதலமைச்சரான பெருந்தலைவர் காமராசர் குலக்கல்வி ஆணையை நீக்கி விட்டு எல்லா பிள்ளைகளும் படிக்கும்படி செய்தார். புதிதாகப் பள்ளிகளைத் திறந்தார்.
காமராசருக்குப் பிறகு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் உருவாக்கப்பட்டு, எல்லா ஜாதிப் பிள்ளைகளும் படிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதோடு, மாணவர்களுக்கு இலவசக்கல்வி, இலவச விடுதிகள் தரப்பட்டன. கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அடித்தட்டு மக்களும் கல்வி வாய்ப்புப் பெற்றனர்.
மறைமுகமான குலக்கல்வித் திட்டம்
ஒன்றிய ஆட்சியில் பி.ஜே.பி. அமர்ந்த 9 ஆண்டு காலத்தில் குலக்கல்வியைப் புதிய தேசியக் கல்வித் திட்டம் என்ற போர்வையில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மைக் காலத்தில் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம் என்ற பெயரில் குலக்கல்வியையும், குலத்தொழில் முறையையும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. திராவிட இயக்கமும் தமிழ்நாட்டு மக்களும் இதைக் கடுமையாக எதிர்த்து சமூகநீதியை நிலைநாட்டப் போராடி வருகின்றனர். இச்சூழலில் இளைய தலைமுறையைச் சேர்ந்த பிஞ்சுகள் குலத்தொழிலுக்கும் கைத்தொழிலுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து விழிப்போடு சதியை முறியடிக்க வேண்டும்.
கைத்தொழில் வேண்டும்! குலக்கல்வி கூடாது!
சிறு பிள்ளைகளாகப் பள்ளிப் பருவத்தில் இருக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி அல்லது குழப்பம் இருக்கும். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே! அதையேன் தடுக்க வேண்டும்? என்ற குழப்பம் அல்லது கேள்வி உங்களுக்கு இருக்கும். எனவே, இதில் ஒரு சரியான புரிதல் உங்களுக்குக் கட்டாயம் வேண்டும்.
எந்த ஒருவரும் தனக்கு விருப்பமான ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொள்வதில், தேர்ச்சி பெறுவதில், திறமை பெறுவதில் தப்பு இல்லை. யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். ஆனால் அது படிப்பைக் கெடுப்பதாய், பறிப்பதாய் இருக்கக்கூடாது.
கல்வி கற்பதில் எத்தடையும் இல்லாமல் கல்வியைக் கற்றுக்கொண்டு, ஒரு மாணவர், தான் விரும்பும் ஒரு கைத்தொழிலை விரும்பினால் கற்கலாம்.
ஆனால், அந்த மாணவன் அவனுடைய குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், எல்லா மாணவர்களும் குலத்தொழிலைக் கற்க வேண்டும் என்பதும் தான் குற்றம். இவ்வாறு செய்வது மாணவர்களின் உயர் கல்வியைத் தடுத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும். இதைப் பிஞ்சுகள் நெஞ்சில் ஆழமாய்ப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.