பெரியார்145 : பெரியார் பன்னாட்டுமைப்பு நடத்திய இரண்டு நாள் கொண்டாட்டம்
தந்தை பெரியாருக்கு நன்றி காட்டுவது என்பது, மானசீகமாகக் காட்டுவதல்ல, அவருடைய கொள்கைகளை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதுதான்’ என்பதைக் காட்டுவதுபோல், பெரியாரின் 145ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை, “பெரியாரை உலகமயமாக்குவோம்! உலகத்தை பெரியார் மயமாக்குவோம்!! இணைந்து கொண்டாடுவோம்!!!” என்று உலகெங்கிலும் இருக்கின்ற இளையர்களுக்கு, 16.09.2023, 17.09.2023 இரண்டு நாட்கள் இணையவழியே அழைப்பு விடுத்தது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பெரியார் பன்னாட்டு அமைப்பு’ (Periyar International).
இதில், தாய்த் தமிழ்நாட்டிற்கென்று தனியே ஒரு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போட்டியில் முன்கூட்டியே பதியவும், சமர்ப்பிக்கவும் கால அவகாசத்துடன் கட்டுரை, பேச்சு, ஓவியம், பாடல், மாறுவேடம் என பல்வேறு போட்டிகள் இடம் பெற்றிருந்தன. பேச்சு, பாடல், மாறுவேடம் ஆகிய மூன்று போட்டிகளும் நேரலையிலும், குறுங்கட்டுரை, ஓவியம் ஆகியவற்றை முன்கூட்டியே அனுப்பி வைக்கும்படியும், பங்கேற்பதற்கான வழிகாட்டல்களுடனும் இணையத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
கூடுதலாக “மாரத்தான்” அல்லது “பெருநடை” மூலமாகவும், பெரியாரின் 145ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை, செப்டம்பர் 5 முதல் 17 வரை அவரவர் வசதிக்கேற்ப ஓடி, நடந்து கொண்டாடுங்கள் என்று ஒரு புதுமையான போட்டியையும் அறிவித்திருந்தார்கள்.
மிகுந்த உற்சாகத்துடன் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும், தேர்வானவர்களுக்குப் பரிசும், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், ஓவியங்கள் “பெரியார் பிஞ்சு” நாளிதழில் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் 125 பேர் கலந்துகொண்டனர். அனைத்து பிரிவுகளிலிருந்து சிறப்புப் பரிசுக்கு என மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதே போல போட்டிகள் வட அமெரிக்காவிலும் 17.09.2023 அன்று நடைபெற்றது. இதில் மேற்கண்டப் போட்டிகளுடன் கூடுதலாக Kahoot (Quiz) என்ற செயலி முலம் வினாடிவினா போட்டியும் நடைபெற்றது. 50 பேர் கலந்துகொண்ட வட அமெரிக்க இணையர்களுக்கான மொத்தம் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவருக்கும் அக்டோபர் முதல் வாரத்தில் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் “பெரியார் வலைக்காட்சி”யில் நேரலை செய்யப்பட்டது. பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமையிலான குழுவினர் மிகச் சிறப்பாக இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.