அம்முவுக்கு வயது 11 – குறுந்தொடர் – 4
இப்படியே ஒரு வாரம் வரை சென்று விட்டது. தாத்தாவும் பாட்டியும் அம்முவுக்கு ரொம்பவும் நெருக்கமாகி விட்டார்கள். புது வீட்டுக்குக் குடிப்போகும் நிகழ்வுக்கும், நூலகத் திறப்புக்கும், அம்முவின் பதினொன்றாம் பிறந்தநாளுக்கும் இன்னும் மூன்றே நாள்கள் மட்டுமே இருந்தன.
அம்முவின் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரும் கடுமையான வேலைகள் செய்துகொண்டே இருந்தனர். அப்பா அலைந்து திரிந்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டுவந்து சேர்த்திருந்தார். கூடவே அம்மு வாங்கி வரச் சொன்ன கலர் பெயின்ட் பாக்ஸ் மற்றும் கிஃப்ட் பேப்பர் சுற்றிய பரிசுப் பொருளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து சேர்த்திருந்தார். அம்மு அதைப் பத்திரமாக மறைவான இடத்தில் யாரும் பார்த்திராதபடி வைத்திருந்தாள்.
அப்பா வாங்கி வந்திருந்த பெயின்ட் பாக்ஸ்களை வைத்து நூலகத்தின் உள்புறச் சுவரில் வரையத் துவங்கினாள். வரையத் துவங்கும்போதே யாரும் வரக் கூடாது எனச் சொல்லித்தான் தொடங்கினாள்.
இரண்டு நாள் முழுதாக யாரையும் கிட்டயே சேர்க்காமல் வரைந்து முடித்து பெரிய துணிபோட்டு மூடியிருந்தாள் அம்மு.
* * *
இன்று அம்முவுக்குப் பதினொன்றாம் பிறந்தநாள்.
காலையிலிருந்தே உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள், அம்மாவின் நண்பர்கள் என அனைவரும் ஊருக்குள் வந்த வண்ணமே இருந்தனர். தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு ஆகிக் கொண்டிருந்தது. வந்த அனைவருக்கும் அவர்களின் ஊர் வழக்கப்படி மாட்டுக்கறி உணவு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
மாலையில் எல்லோரும் புது வீட்டின் முன் கூடியிருந்தார்கள். அம்முவை அழைத்த அப்பா, புது வீட்டின் வாசலில் கட்டபட்டிருந்த ரிப்பனை வெட்டச் சொன்னார். கத்தரிக்கோலில் அழகான தாள் சுற்றப்பட்டிருந்தது.
ஆனால், அம்முவோ தாத்தா பாட்டியையும் அழைத்து மூன்று பேருமாகச் சேர்ந்து ரிப்பனை வெட்டினார்கள். எல்லோரும் கைதட்ட அப்பா மகிழ்ச்சியோடு சிரித்தார். அனைவரும் வீட்டின் உள்ளே சென்றனர். வீட்டுக்குள் நுழைந்ததும் “11-ஆம் பிறந்தநாள் வாழ்த்துகள்” என எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்தாள் அம்மு.
பிறகு அம்முவையே நூலக அறையைத் திறக்கச் சொன்ன அப்பாவிடம், அவளது விளையாட்டு நண்பர்களான கருப்பசாமி, ரகீம், கந்தன், அமுதா, தமிழ்க்கொடி, பரீதா, மேரி சோபியா, ராபர்ட் மற்றும் ஊரில் உள்ள இன்னும் சில நண்பர்களையும் அழைத்துத் திறந்து வைக்கச் சொன்னாள் அம்மு.
கூடவே தான் வரைந்த ஓவியத்தின் துணியையும் திறக்கச் சொன்னாள்.
நண்பர்கள் ஒன்றுகூடி அந்தத் துணியை இழுத்ததும். இத்தனை நாட்களாக அவள் பார்த்த காட்சிகள், விளையாடிய விளையாட்டுகள், குருவிக் கூடு, தூக்கணாங் குருவிக் கூடு, தாத்தா, பாட்டி, நண்பர்கள், ஏரி, வயல் என அனைத்தையும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் வரைந்திருந்தாள் அம்மு.
இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அம்முவை வெகுவாகப் பாராட்டினர்.
ஊருக்கு வந்ததிலிருந்து வேலை அதிகமாக இருந்ததால் யாரிடமும் அதிகம் பேச முடியாமல் இருந்த அம்முவின் அம்மா இப்போதான் முதல்முறையாக மகிழ்ச்சி பொங்க அனைவரிடமும் பேசத் துவங்கினார்.
“இந்த நூலகம் புத்தகங்கள் மட்டுமே வாசிப்பதற்கான ஒன்று அல்ல. இங்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் இலவசமாக நடைபெற இருக்கின்றன. அதில் ஆங்கில மொழிப்பயிற்சிகள், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் நடக்கும். இணைய வழிக் கருத்தரங்குகள் மூலம் நாங்கள் அனைவரும் லண்டனில் இருந்து உங்கள் அனைவரிடமும் உரையாடப் போகிறோம். அதற்கான அறையும் இங்கே வைத்துள்ளோம். நம்ம ஊர் என்று மட்டுமல்ல, சுற்றி இருக்கும் எல்லா ஊரிலிருந்தும் குழந்தைகள், மாணவர்கள், பயிற்சிபெறுவோர் என அனைவரும் வந்து செல்ல இருக்கிறார்கள். இதை நிருவாகம் செய்ய நம்ம ஊரில் இருந்து போய் கல்லூரிப் படிப்பை முடித்து கலெக்டர் படிப்புக்குத் தயாராகி வரும் கண்மணியையும், கல்லூரியில் படித்து வரும் தமிழ்வாணனையும் நியமித்து உள்ளோம். ஊர் மக்கள் அனைவரும் எங்களின் முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என முடித்ததும் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரமாகக் கை தட்டினர்.
(தொடரும்)