முட்டாள் கணினி
கணினி மிக நன்றாகக் கணிதம் செய்யும். மனிதர்களை விட வேகமாகக் கணக்கிடும். இருந்தாலும் கணினி முட்டாள் தான். மனிதர்கள் ஏற்கனவே சொல்லி வைத்தவற்றை ‘ஏன்? எதற்கு?’ என்று கேள்விகள் கேட்காமல், துளியும் சிந்திக்காமல் அப்படியே செய்யும் முட்டாள் கருவி.
கணினிக்கு நீங்கள் கட்டளைகளை முன்னமே கொடுக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ‘Instructions’ என்பார்கள். பல கட்டளைகளின் தொகுப்பு தான் ஒரு நிரல். இதை ஆங்கிலத்தில் ‘Program’ என்பார்கள். ஒரு நிரலில் ஒரே ஒரு கட்டளை இருக்கலாம் அல்லது ஒரு கோடி கட்டளை இருக்கலாம். இப்படி பல்வேறு நிரல்களின் தொகுப்பைத் தான் நாம் செயலி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் Applications அல்லது சுருக்கமாக app என்று அழைக்கிறோம்.
இப்போது நீங்கள் கணினியைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
கணினிக்கு அனைத்தையும் நிரல்களாகத் தான் சொல்ல வேண்டும். அதைச் சிந்திக்க வைப்பதையும் நிரல்களாகவே சொல்ல வேண்டும். சிந்திக்கும் கணினி என்பதை நுண்ணறிவு கொண்ட கணினி எனப் புரிந்து கொள்ளலாம். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கணினிகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரித்துள்ளார்கள்.
Strong AI or Artificial General intelligence (AGI)
இதை நாம் தமிழில் வன் நுண்ணறிவு என அழைக்கலாம். ஒரு கணினி கிட்டத்தட்ட மனிதனைப் போலவே சிந்தித்து, செயல்பட்டால் அதை நாம் வன்நுண்ணறிவு என அழைக்கிறோம். மனிதனுக்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் வித்தியாசமே தெரியாது. அறிஞர்களின் குறிக்கோள் என்பது இந்த வன் நுண்ணறிவை உருவாக்குவது தான்.
ஆனால், ஆரம்ப காலத்தில் செயற்கை நுண்ணறிவைப் பற்றி இன்னொரு கருத்தும் உருவானது. பறவையைப் போல பறக்க நீங்கள் ஒரு கருவியைச் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது பறப்பதை வைத்துத் தீர்மானிப்பீர்களா? அல்லது பறக்க வேண்டும்; ஆனால் பறவையைப் போலவே இறக்கையைப் பயன்படுத்திப் பறக்க வேண்டும் என்று கூறுவீர்களா?
விமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அது பறக்கிறது. ஆனால், அது பறவையைப் போல இறக்கையை மேலும் கீழும் அசைத்துப் பறப்பதில்லை, ஆனாலும் வானத்தில் பறக்கிறது. இந்த வாதத்தை முன்வைத்து ‘செயற்கை நுண்ணறிவுக் கணினிகள் மனிதனைப் போலவே அனைத்திலும் நுண்ணறிவை வெளிப்படுத்தத் தேவையில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அது நுண்ணறிவை வெளிப்படுத்தினால் போதும்’ என்று அறிஞர்கள் முடிவு செய்தார்கள். இதைத்தான் நாம் Weak AI or Narrow AI என்கிறோம். தமிழில் அதை குறுநுண்ணறிவு என அழைக்கலாம்.
அண்மைக் காலம் வரை உருவாக்கப்பட்ட நுண்ணறிவுச் செயலிகள் முழுக்க முழுக்க குறு நுண்ணறிவு வகையைச் சார்ந்தவை. ஆனால் வன்நுண்ணறிவுக் கணினி ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் பலரின் கனவு ஆனால் அந்தக் கனவு நனவாகாது என்று கல்லைத் தூக்கிப் போடுகிறார்கள் இயல்பியலாளர்கள்.
ரோஜர் பென்ரோஸ் எனும் மிகப்பெரும் இயல்பியல் அறிஞர் சர்ச்சைக்குள்ளான ஒரு கருத்தை வெளியிட்டார். அவரின் ஆய்வுகளின்படி வன் நுண்ணறிவு என்பது சாத்தியமற்றது என்றும், அதற்கான முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என்றும், அதனால் அறிஞர்கள் குறுந் நுண்ணறிவு சார்ந்து ஆய்வுகளையே செய்யலாம் எனவும் கூறினார். பிற்காலத்தில் கணினி வல்லுநர்களும் இதையே வழிமொழிந்தார்கள். ரோஜர் பென்ரோசின் ஆய்வுகள் பிற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளுக்கு முடிவுகட்டும் அளவுக்குச் சென்றது. அதிலிருந்து எப்படியோ தற்போது மீண்டு வந்துவிட்டார்கள். அந்தக் கதையை எல்லாம் நாம் பிறகு விரிவாகப் பார்க்கலாம்.
ஆரம்பகாலச் செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமானவர் அறிஞர் மார்வின் மில்ஸ்கி. ஆரம்பக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுகள் முழுக்க முழுக்க குறியீடுகள் மற்றும் தர்க்கம் சார்ந்த கணினிகள் தொடர்பாகத் தான் இருந்தன. இவற்றை செவ்வியல் செயற்கை நுண்ணறிவு (Classical AI) என்று அழைப்பார்கள்.
மார்வின் மில்ஸ்கிதான் முதல் முதலில் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்களைப் பற்றிய கோட்பாட்டை முன் வைத்தார். இவரது கோட்பாட்டின் நுண்ணறிவு என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு கணினி ஏஜென்ட்களின் தொகுப்பு என்று அழைத்தார். அடுத்ததாக இவரது கோட்பாட்டின் படி கணினி நிரல்கள் சுற்றுச்சூழல் அடிப்படையில் புரிதல் இருந்தால் தான் நுண்ணறிவு வெளிப்படும் என்று முன் வைத்தார். இன்று வரை அனைத்து செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்களும் இவரது கோட்பாட்டின் அடிப்படையில் தான் உருவாக்கப் பட்டுள்ளன.
‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்