தெருவுக்குள்ள நுழையக் கூடாது
இதுவரை:
செழியன் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். வீட்டுக்கு வந்து ‘தந்தி அனுப்புவது’ பற்றி தன் அம்மாவிடம் கேட்கிறான். அது குறித்து சொன்ன அம்மா, 100 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாருக்கு வந்த தந்தி ஒன்றைப் பற்றிச் சொல்கிறார். அது கேரளாவில் இருந்து வந்த தந்தி என்றும், வைக்கம் எனும் ஊரைப் பற்றியும் சொல்கிறார்.
இனி…
“வைக்கம் கோவிலைச் சுத்தி இருக்கிற தெருவுல ஈழவர், புலையர் உள்ளிட்ட சில ஜாதியினர் நடக்கக்கூடாதுனு தடை இருந்துச்சு” என்று அம்மா சொல்லத் தொடங்கியதும் இடைமறித்தான் செழியன்.
“அம்மா… அம்மா… ஒரு நிமிஷம்… கதையை இப்படி நடுவுல இருந்து ஆரம்பிச்சா எனக்கு எப்படிப் புரியும்? நீங்க சொல்ற வைக்கம் எங்கே இருக்கு… அது என்ன கோவிலுனு விரிவா சொல்லுங்கம்மா?”
செழியன் கேட்பதும் நியாயம்தான் என்று அம்மா புரிந்துகொண்டார். புத்தக அடுக்கில் இருந்து இந்திய வரைபடத்தை எடுத்தார். அதை மேஜையில் விரித்து வைத்தார்.
“செழியா… இதோ, இதுதான் கேரளா”
“இப்பக் கூட ’கேரளம்’னு பெயர் மாத்திருக்காங்க இல்லையாம்மா?”
“ஆமா ஆமா, கேரளம். இதுதான் அதோட தலைநகரமான திருவனந்தபுரம். சென்னை, கோயம்புத்தூர் போல இதுவும் ஒரு மாநகரம். இங்கே இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்துல இருக்கிறது கோட்டயம் மாவட்டம். இந்த நகரத்தில் இருந்து இதோ இப்படியே 30 கிலோமீட்டர் போனா வைக்கம் என்ற ஊருக்குப் போயிடலாம்”
“அம்மா, கூகுள் மேப்ல போட்டு பார்க்கலாமா?”
“ம்ம்.. அப்பறமா பார்ப்போம். இந்த ஊர்லதான் மகாதேவர் கோவில் இருக்கு”
“மகாதேவர்ன்னா.. அங்கே என்ன சாமி இருக்குனு சொல்றாங்க. அதைப் பத்தி நிறைய கதைகளும் இருக்குமே?”
“சிவன் கோவில் அது. அப்பறம் என்ன கேட்ட, கதைகளா…? தல வரலாறுன்னு நிறைய கதைகள் சொல்லப்படுது. அதில ஒன்னு, ஒரு அசுரன் சிவனை நோக்கித் தவம் செஞ்சாராம். அதனால அவருக்கு மூனு லிங்கங்கள் வரமா கிடைச்சுதாம். வலக்கையில ஒண்ணு, இடக்கையில ஒண்ணு, வாயில ஒண்ணு வைச்சு தூக்கிட்டு போனாராம்”
“ம்ம்”
“அப்படி போறப்ப, களைப்பா இருந்துச்சுனு ஓர் இடத்துல லிங்கத்தை வைச்சாராம். சிறிது நேரம் கழிச்சு மறுபடியும் லிங்கத்தைத் தூக்கலாம்னு பார்த்தப்ப, தூக்கவே முடியலையாம்”
“அதெப்படிம்மா மூணு லிங்கத்தைத் தூக்கிட்டு வந்தவரால ஒரு லிங்கத்தைக்கூட தூக்க முடியலையா?… நம்ப முடியலையே”
“கதையைக் கேளு… அப்பறம் அதே இடத்துல வைச்சி வழிபட்டதா கோவில் தலத்தோட கதை சொல்றாங்க… இன்னொரு கதை என்னன்னா?”
“அம்மா… அம்மா.. போதும்… இதுவே போதும்மா.. கோவில் வந்துடுச்சு. அப்பறம் நடந்த விஷயத்துக்கு வாம்மா”
அம்மா சிரித்துக்கொண்டே, ”கோவில் எப்படி வந்ததுங்குற கதையை வேணாம்னா விடு. கேரளத்தில் உள்ள பெரிய கோவில்கள்ல அதுவும் ஒண்ணு. தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரிதான் கோவில்னா ஒரு குளம் இருக்கும். கோவிலைச் சுத்தி தெருக்கள் இருக்கும். வீடுகள் இருக்கும். வைக்கத்துலேயும் அப்படித்தான் இருந்துச்சு”
”இதுல எங்கே பிரச்சனை வந்துச்சும்மா?”
“சில விஷயங்கள் பிரச்சனை என்றே பலருக்கு தெரியறது இல்ல செழியா… வைக்கத்துல அந்தக் கோவிலச் சுத்தி இருக்கிற தெருக்கள்ல சில ஜாதிகளைச் சேர்ந்தவங்க நடக்கக் கூடாதுன்னு தடை இருந்துச்சு”
“எந்த எந்தச் ஜாதிக்காரங்க?”
”முன்பே சொன்னேன் இல்லையா… புலையர், ஈழவர், தீயர்னு ஜாதி அடுக்குல கீழே வைக்கப்பட்ட சில ஜாதியைச் சேர்ந்தவங்க அந்தத் தெருக்கள்ல நடக்கக்கூடாது என்கிற இந்த நடைமுறை, காலம் காலமா இருந்ததால அது ஒரு பிரச்சனை என்றே பலரும் உணரல”
“அப்பறம்?”
“1924ஆம் ஆண்டு அதாவது சரியா நூறு வருஷத்துக்கு முன்னாடி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.பி.கேசவமேனன் என்பவரு மார்ச் மாசம் முதலாம் தேதி அன்னிக்கு முக்கியமான வேலை ஒண்ணு செய்தாரு”
”என்ன செஞ்சாரு?”
“தெருவுல நடக்கக்கூடாதுனு சொல்லப்பட்ட புலையர் ஜாதியைச் சேர்ந்த சிலரை அழைச்சுக்கிட்டு அந்தத் தெருவுக்குள்ளே ஊர்வலமாகப் போக முடிவு செய்தாரு”
“ஆஹா! சூப்பர்! அப்பறம் என்னாச்சு? அன்னேலேயிருந்து எல்லோரும் போற மாதிரி மாறிடுச்சா?”
“அதெப்படி நடக்கும்… காலம் காலமாக ஒடுக்கி வைச்சிருக்கவங்க இதுக்கு எல்லாம் உடனே ஒத்துப்பாங்களா? கே.பி.கேசவன் ஊர்வலத்திற்கான ஏற்பாடு செய்யறதை அங்கே இருந்த மேல்ஜாதிக்காரங்க தெரிஞ்சுக்கிட்டாங்க. உடனே, அவர்கிட்ட வந்து சமாதானமாகப் பேசினாங்க. ‘எங்க ஊர்க்காரங்க கிட்ட இதைப் பத்தி பேசறோம். அதுக்கு சில நாள் ஆகும்’னு சொல்லி டைம் கேட்டாங்க”
“அவங்க யாரு இதெல்லாம் சொல்ல? அந்தத் தெருவுக்கு அவங்கதான் செலவு செஞ்சு பார்த்துக்கிறாங்களா?”
“கோவிலைச் சுத்தி இருக்கிற எல்லாத் தெருக்களுமே மக்களோட பொதுப்பணத்துலதான் பராமரிக்கப்பட்டு வருது. அதைச் சொல்லித்தான் கே.பி.கேசவன் நியாயம் கேட்டாரு”
“சரி… அவங்க சொன்னதும் கே.ஜி.கேசவனும் கூட சரினு திரும்பிப் போய்ட்டாங்களா?”
அம்மா சிரித்துகொண்டே, “கே.ஜி. இல்ல செழியா.. கே.பி.கேசவன். இது மக்களோட நம்பிக்கை சார்ந்த விஷயம். அதனால தடாலடியா இறங்கிட வேணாம்னு அவர் நினைச்சாரு. அதனால ஊர்வலத்தைச் சில நாள் ஒத்தி வைக்கலாம்னு முடிவு செய்தாரு”
“அட, போம்மா… உடனே தெருவுக்குள்ள போயிருந்தா அன்னிக்கே ஜெயிச்சிருக்கலாம் இல்லையா?”
“இல்ல செழியா… இது விளையாட்டு மாதிரியான காரியம் இல்ல. இப்போ இருக்கிற மாதிரி தகவல் தொழில்நுட்பமும் அப்ப அதிகம் இல்ல. தெருவுக்குள்ள அழைச்சிட்டுப் போறவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அது வெளி உலகத்துக்குத் தெரியறதுக்குக்கூட வாய்ப்பு குறைவு. அதனால, நிதானமாகத்தான் இந்தக் காரியத்தில் செயல்படணும்னு கேசவன் நினைச்சாரு. இதைப் பத்தி காந்திக்குகூட ஒரு கடிதம் எழுதியிருக்காரு”
“ஓ!… அப்பறம் என்னிக்கு ஊர்வலம் போகலாம்னு முடிவு செஞ்சாரும்மா?”
“மார்ச் 30ஆம் தேதி!”
(தொடரும்)