மலேசியா போவோமா?
கடந்த இதழில் மதுரையிலிருந்து சிவகாசிக்குச் செல்வதைப் பார்த்தோம். இப்போது, சென்னையிலிருந்து மலேசியாவிற்குச் செல்வது எப்படி எனப் பார்ப்போமா? மூன்று வழித் தடங்களில் சென்னையிலிருந்து மலேசியாவைச் சென்றடையலாம் என்பதும் புரிகிறது அல்லவா! தரை வழி, கடல் வழி, வான் வழி என இப்படிச் சொல்வதிலிருந்து எந்தெந்த ஊர்திகள் என்பதும் புரிகிறது அல்லவா!
தரை வழியாகச் செல்வது எனில் பல நாடுகளைக் கடந்து செல்லவேண்டி இருக்கும். மொத்தமாக 6250 கிலோ மீட்டர்கள். அடைவதற்குச் சுமார் 115 மணி நேரம் பிடிக்கும். [எங்கேயும் தங்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து பயணம் செய்தால்]
கணிதப் பாடத்தில் படித்திருப்போம். அதாவது இரண்டு புள்ளிகளுக்கு இடையிலே இருக்கும் குறைந்தபட்ச தூரம் ஒரு நேர்கோடு என்று. சரி தானே? அப்படி என்றால் சென்னையிலிருந்து மலேசியாவிற்கு ஒரு நேர்கோடு போட்டால் கிடைக்கும் தூரம் மிகக் குறைவாக இருக்கும். இந்தத் தூரத்தைக் கப்பல் மூலம் கடல் வழியிலோ அல்லது விமானம் மூலம் வான்வழியிலோ சென்றடையலாம் அல்லவா? ஆம் நிச்சயம்.
அப்படியெனில்… தூரம்? கடலில் எவ்வாறு தூரத்தைக் கணக்கிடுகின்றார்கள்? அதே கிலோமீட்டர் தானா? அதுதான் இல்லை. கடல்வழிப் பயணங்களுக்கான தூரத்தின் அலகு கடல் மைல்- நாட்டிக்கல் மைல் (Nautical Miles). ஏன் புதிய அலகு? தரைவழித் தூரத்திற்குப் பயன்படுத்தும் அதே கிலோமீட்டரையே ஏன் பயன்படுத்தக்கூடாது? கடல்வழி மட்டுமல்ல வான்வழிப் பயணங்களுக்கும் கடல் மைல்தான்.
அது என்ன சிறப்பு?
பூமியின் வரைபடத்தில் அட்சக்கோடுகள் (Latitude) தீர்க்கக்கோடுகள் (Longitudes) எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவை கற்பனைக் கோடுகள். (படத்தினைக் காண்க). பூமி பற்றிய ஆராய்ச்சிகள் மிகவும் வியக்கத்தக்கவை. பல நூற்றாண்டுகளாக இதனைப் பற்றிய பார்வை மாறிக்கொண்டே வந்து இந்த நிலையினை அடைந்துள்ளோம். இந்த அட்சரேகையை உருவாக்க எத்தனை கணித மேதைமைகள் தேவைப்பட்டு இருக்கும். சரி சரி, நாம மலேசியாவுக்குச் செல்லும் வழியைப் பார்ப்போம். ஒரு கடல் மைல் என்பது ஒரே அட்சரேகையில் 1 டிகிரி பயணம். இது மீட்டரில் 1852 மீட்டர்கள். கடல் மைலை ஸீனீவீ எனக் குறிப்பிடுகின்றனர்.
1 nmi = 1,852 meters = 1.852 km
இதனையே அடியில் சொல்வதெனில்,
1 nmi = 6,076 feet.
இதில் மீட்டர், கிலோமீட்டர் அலகுகள் மட்டுமே SI Unit இல் வரும். nmi கூட அதில் வராது.
“ஹலோ, மலேசியாவுக்கு எப்ப சார் வருவீங்க?”
இப்பத்தான் எவ்வளவு தூரம்னே கணக்கிட்டு இருக்கோம். இல்லை இல்லை தூரத்தின் அலகிற்கு வந்திருக்கோம். சென்னைக்கும் மலேசியாவில் ஒரு துறைமுகத்திற்குமான தூரம் சுமார் 1600 கடல் மைல்கள். [பொறுப்பான பசங்க உடனே என்ன செய்வாங்கன்னா இது எவ்வளவு கிலோமீட்டர் வரும்னு கண்டுபிடிப்பாங்க] இவ்வளவு தூரத்தைப் படகு, ஓடம் இவற்றின் மூலம் கடக்க முடியாதல்லவா!
எனவே தேவை கப்பல். ஆனால், இந்த வாகனத்திற்கு நிறைய எரிபொருள்களும் 5 முதல் 6 நாள்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர வசதிகளும் தேவை. இதற்கே இப்படி யோசிக்கிறோமே… அப்ப முதல்முதல்ல இந்தியாவுக்கு கடல் வழியைத் தேடிக் கிளம்பிய வாஸ்கோடகாமா எப்படி எல்லாம் பயணம் செய்திருப்பாருன்னு சிந்திச்சுப் பாருங்க! அப்ப கூகுள் மேப்ஸ் இல்லை, இந்தியா எங்க இருக்குன்னுகூட தெரியாது.
கப்பலை என்ன வேகத்தில் செலுத்தலாம்? கடல் பயணத்தில் வேகத்திற்கான அலகு (unit) – முடிச்சு (knot). kn எனக் கடல் பயண வேகத்திற்கும், வான் வழி வேகத்திற்கு kt எனவும் குறிப்பிடுவார்கள். ஒரு மணி நேரத்தில் கடலில் கடக்கும் தூரமே ஒரு முடிச்சு. நமது கணக்குப்படி 1 knot = 1.852 km/h. W [நிலத்தில் ஊர்திகள் வேகத்தின் அலகு km/h அல்லது kmph].
“ஹலோ, மலேசியாவுக்கு எப்ப சார் வருவீங்க?”
கடலில் செல்லும்போது நேர்கோட்டில் பயணம் செய்வது சிரமம். தோராயமாகவே பயணம் செய்ய இயலும். சாலையில் விரைந்து செல்வது போலச் செல்ல இயலாது. வேகமான காற்று, கடல் அலை எனப் பல காரணிகள் பாதையைக் கொஞ்சம் மாற்றக்கூடியவை. துல்லியமாகச் செல்வது கடினம். வான்வழியிலும் இப்படியே! கடல்சீற்றம் கொள்ளும் நேரங்களில் மெதுவாகச் செல்வதே பாதுகாப்புக்கு உகந்தது. ஆகவே, முன்னப் பின்ன ஆகலாம். தோராயமாக 5 முதல் 6 நாள்கள் எடுக்கும். சீக்கிரமாகவும் வந்திடலாம்; தாமதமும் ஆகலாம். ரயில், கார், பேருந்து போல அவ்வளவு துல்லியமாகக் கணக்கிடவும் முடியாது. அப்ப விமானத்தில் போவோமா?