12 வயதில் புத்தகம் எழுதிய மலேசியச் சிறுவன்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆசிரியர் அவர்களுடன் நூலாசிரியர் திவாஹர் ராமச்சந்திரன்
கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்று பலரின் வாழ்க்கையை முடக்கியதை நாம் அறிவோம். அதே நேரத்தில் பலரின் சிறகுகளை விரியச் செய்யவும் வாய்ப்பு அளித்துள்ளது.
அப்படி கொரோனா ஊரடங்குக் காலத்தில் தன் சிறகை விரித்தவர்தான் திவாஹர் ராமச்சந்திரன்.
12 வயதே நிரம்பிய சிறுவன் அவர் ஓர் எழுத்தாளர் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். மலேசியாவில் துன் சம்பந்தன் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவரான இவர், கொரோனா ஊரடங்குக் காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு, தன் கற்பனைத்திறனையும் சேர்த்து தான் புனைந்த பத்து சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை ‘சிறகுகள் முளைத்த தருணம்’ என்னும் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.
மொத்தம் பத்து கதைகள். ஒவ்வொரு கதையும் ஒரு கருவைத் தாங்கி இருக்கிறது. அவை தனிமனித ஒழுக்கம் சார்ந்ததாகவோ, இயற்கை சார்ந்ததாகவோ, மற்றவர்களின் உணர்வுகளுக்கு இடம் அளிப்பதாகவோ, உணர்ந்து கற்பதாகவோ இன்னும் இப்படி பலதரப்பட்டதாகவுமான கதைகளைப் புனைந்து இருப்பது திவாஹர் எதிர்காலத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளராக வலம் வருவார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
கதைகளுக்கான படங்களை அவரே வரைந்து இருக்கிறார் என்பதும், புத்தகத்தின் முகப்பு அட்டையின் படத்தினையும் அவரே வடிவமைத்திருக்கிறார் என்பதும் இப்புத்தகத்தின் கூடுதல் சிறப்பு!
முதல் கதை ‘கரிய உருவம்’ திகில் கதையாகத் தொடங்கி நகைச்சுவைக் கதையாகத் தொடர்கிறது. ஆனாலும் இறுதியில் எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்ற மனித நேயம் காக்கும் உணர்வோடு முடிவது நிறைவைத் தருகிறது.
‘அய்ந்தறிவின் நேசம்’ என்ற கதையில் செல்லப் பிராணிகளுக்கு இடையே நிகழும் மோதலையும், இறுதியில் எதிர்பாராத உணர்வுப்பூர்வமான முடிவையும் கொண்டு எழுதி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஸ்கூபி ராக்ஸ்..
‘வெண்டைச் செடியும் அணிலும்’ என்ற கதையில், செடிகள் வளர்ந்தால் நமக்குப் பயன் தரும்; ஆனால் வளரும்போதே விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பயன் தரும் என்பதை உணர வைத்திருக்கிறார். நாமெல்லாம் வெண்டைச் செடியிலிருக்கும் வெண்டை தானே சாப்பிடுவோம்? ஆனால் அந்த அணில் மட்டும் அதிலிருந்து தினமும் பழங்கள் சாப்பிட்டு இருக்கிறது.
ஹா..ஹா..ஹா..!
இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘ஸ்டோர் ரூம்’ கதை. பெற்றோர்கள் தங்களின் உலகைச் சுருக்கிக் கொண்டு பிள்ளைகளின் உலகத்தில் வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். பிள்ளைகளின் ஆசையே தங்களின் லட்சியம், பிள்ளைகளின் கனவே அவர்களின் வாழ்க்கை என்றாகி விடுகிறது. இந்தப் பேருண்மையை எல்லோரும் ஒரு கட்டத்தில் உணர்வார்கள்தான். ஆனால் திவாஹர் இவ்வளவு சிறிய வயதிலேயே உணர்ந்து எழுதி இருப்பது ஆச்சரியமானது. அப்பா அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்த திவாஹர் அவர்களின் ஆனந்தத்தையும், புன்னகையையும் ஏனோ நமக்குச் சொல்லாமல் விட்டுவிட்டார்.
அன்போடு கூடவே, அறிவையும் சேர்த்து பெற்றோர் நமக்கு ஊட்டுவார்கள் என்பதை ‘அப்பா ஊட்டிய சோறு’ கதையின் மூலம் உணர்த்தி இருக்கிறார் திவாஹர்.
‘புறாவின் குடும்பம்’ கதையின் மூலம் பிள்ளைகளுக்கு எத்தனை துன்பம் வந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடுவதன் வழியாக அன்னையின் உண்மையான அன்பையும், தைரியத்தையும் உணர்ந்து எழுதி இருக்கிறார்.
தாமும் எறும்பைப் போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என எறும்பைப் பார்த்துக் கற்றுக்கொண்ட அந்த அழகான அனுபவத்தை ‘கொடையாளி’ கதையில் எழுதியிருக்கிறார். ஒரு சிறிய உயிரினம் கூட நம்மில் தன்னம்பிக்கையை விதைக்கும் என்பதை உணர்த்தி இருக்கிறார் திவாஹர்.
எல்லா உயிர்களுக்கும் உணர்வு உண்டு என்பது தெரியும். அவை அதை வெளிப்படுத்திக் கொண்டால் எப்படி இருக்கும்! அதுதான் ‘இயற்கையின் குரல்’ கதை. அந்தக் கற்பனையிலும் கூட பறவைகள் எதையோ பற்றிப் பேசாமல் மரங்களை வெட்டுவதைப் பற்றிப் பேசுவது போல தன் கற்பனையை ஓடவிட்டு இருப்பதற்காகவே திவாஹருக்கு ஒரு ஹக் (Hug).
அடுத்து பல தளங்களில் ஏற்கனவே கேட்ட கதைதான். எல்லாருக்கும் விடுமுறை உண்டு. அடுப்படியில் இருக்கும் அம்மாவுக்கு என்றுமே ஓய்வு இல்லை என்பதை இவர் பாணியில் ‘அம்மா செய்த பலகாரம்’ கதையில் எழுதி இருக்கிறார்.
இத்தனை எண்ண ஓட்டத்தை இந்த வயதிலேயே பெற்றிருக்கும் திவாஹரின் கதைகளைப் படிக்கும் போது அவருக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று நமக்கே தோன்றுகிறது. அவரோடு தொடர்ந்து பயணிக்கும் ஆசிரியர்கள் அவரின் மற்ற திறமைகளையும் எவ்வளவு எடை போட்டிருக்கக்கூடும்! அதற்கெல்லாம் பரிசு வேண்டாமா? ஒன்றல்ல, இரண்டல்ல.. 11 பரிசுக் கோப்பைகளை ஒரே நேரத்தில், ஒரே மேடையில் தனது பல்திறனுக்காகப் பெற்றிருக்கிறார் திவாஹர்! அந்த அழகான அனுபவம் தான் இப்புத்தகத்தின் பத்தாவது கதையான துன் சம்பந்தனில் ஒரு நாள். இக்கதையில் பெற்றோரைப் பெருமைப்படச் செய்ததோடு தனது ஆசிரியர்களையும் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறார்.
இப்புத்தகத்தில் மிகவும் குறிப்பிட வேண்டிய தகவல் என்னவென்றால்… இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் வார்த்தைகள். மலேசிய வாழ் தமிழரான இவர் இத்தகைய தேர்ந்த தமிழ்ச் சொற்கள் தனது முதல் புத்தகத்திலேயே பயன்படுத்தி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
= தொலை இயக்கி
= மறுபயனீட்டுப் பைகள்
= ஒளியேறிக் கொண்டிருந்தது
= பசைநாடா
= நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு
இந்த இளம் வயதிலேயே தனது தமிழ் ஆளுமையையும், எழுத்தாற்றலையும், கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தியுள்ள 12 வயது மாணவர் திவாஹரின் “சிறகுகள் முளைத்த தருணம்” என்னும் இப்படைப்பானது தமிழ் இலக்கியத்திலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டலாக அமையும்.
திவாஹரின் தமிழ்ப் பணியும், எழுத்துப் பணியும் தொடர அன்பும், வாழ்த்துகளும்!