தீ விபத்துகளும் அணைப்பான்களும்
கடந்த கட்டுரையில் வெப்பம், எரிபொருள், காற்று இந்த மூன்றும் சேர்ந்தால்தான் தீ உண்டாகும்; அந்த மூன்றில் ஒன்றை நீக்கி விட்டால் தீயை அணைத்து விடலாம் எனப் பார்த்தோம் அல்லவா?
அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டு இப்பொழுது தீயைத் தீயணைப்பானைக் கொண்டு எப்படி எளிதாக அணைக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போமா?
முன்பு ஒரு காலத்தில் திரையரங்கம் போன்ற இடத்தில் மட்டுமே இருந்த தீயணைப்பான் இப்பொழுது பள்ளி, மருத்துவமனை, உணவகங்கள் போன்று மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் இருக்கின்றது. தீயணைப்பானைப் பயன்படுத்துவதற்கு முன்பு எளிதாக அடையாளம் காணுவதற்காக தீயை ஆறு வகைகளாக பிரித்துள்ளனர். அதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
1. A class என்பது எரிந்து சாம்பலாகக் கூடிய தீ (Carbonized fire): கூரை, வைக்கோல், காய்ந்த புல், செடி, கொடி, மரம், துணி போன்றவை.
2. B class என்பது எண்ணெய் தீ விபத்து (Oil fire): எண்ணெய்ப் பொருள்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கிரீஸ் போன்ற பொருள்கள்.
3. C class என்பது எரியக்கூடிய வாயுக்கள் (Gas fire): எல் பி T(LPG) எனப்படும் சமையல் எரிவாயு, மீத்தேன், ஹைட்ரஜன், அமோனியா போன்றவை ஆகும்.
4. D class என்பது உலோகத் தீ (Metel fire) விபத்து.
5. E class என்பது மின்சாரத் தீ விபத்து
6. F class – தற்போது புதிதாக ஆறாவதாக
‘எஃப் கிளாஸ் ஃபயர்’ என்று பிரித்துள்ளனர். சமையலறையில் ஏற்படும் தீ விபத்துகள், சமையல் எண்ணெய்கள், கொழுப்பு போன்றவற்றால் ஏற்படுபவை.
இப்பொழுது உங்கள் பள்ளியிலோ அல்லது அருகில் உள்ள நிறுவனங்களிலோ வைக்கப் பட்டிருக்கும் தீயணைப்பானைப் பாருங்கள். அதில் கிஙிசி அல்லது கிஙி அல்லது ஙிசி அல்லது ணி என எழுத்துகள் ஆங்கிலத்தில் பெரிதாகப் போடப்பட்டிருக்கும், எனவே, தீயை நாம் என்ன வகை என அறிந்து கொண்டால் தீயணைப்பானில் உள்ள ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எளிதாகப் பயன்படுத்தி அணைக்கலாம். ஏன் அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது – பிரிக்கப்பட்டுள்ளது என்றால் எண்ணெயால் தீ விபத்து மற்றும் மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் பாதிப்பு அதிகமாகிவிடும்.
தீயணைப்பான்கள் பல்வேறு அளவுகளில் வருகின்றன. சாதாரணமாக எல்லா இடங் களிலும் பார்க்கக்கூடிய அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய தீயணைப்பான் அய்ந்து கிலோ கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இதை ஒன்றரை முதல் மூன்று நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். 5 அடி முதல் 15 அடி தூரத்திலிருந்து பயன்படுத்த முடியும்.
அதே போல் தீ அணைப்பான்களில்
1. தண்ணீர் வகை
2. உலர் மாவு (DCP) தீயணைப்பான்
3. நுரை தீயணைப்பான்
4. கரியமில வாயு தீயணைப்பான் எனப் பல வகைகளில் உள்ளன.
நம் வீட்டுச் சமையலறையில் பயன்படுத்து வதற்காகக் கார்களில் பயன்படுத்துவது போன்ற சிறிய அளவிலான தீயணைப்பான்களும் உள்ளன.
ஒரு சிறிய தீக்குச்சி ஒரு காட்டையே அழித்துவிடும். காடு தீப்பிடித்து எரிந்தால் பல மணி நேரமல்ல, பல நாட்கள் நூற்றுக்கணக்கானவர்கள் போராடி அணைக்க வேண்டும். பாதிப்பு மிகக் கடுமையாக இருந்து கொண்டே இருக்கும். ஆனால், அந்தத் தீக்குச்சியை சாதாரணமாக வாயால் ஊதியோ கீழே போட்டு காலால் மிதித்தோ எளிதாக அணைத்து விடலாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவ்வளவு சிறிய தீ மிகப் பெரிய காட்டையே அழித்து மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது எனில், தீயைப் பரவ விட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். எனவேதான் ஆங்காங்கே தீயணைப்பான்கள் இருந்தால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த உடனே அதைப் பயன்படுத்தி எளிதாக அணைத்து விடலாம்.
எப்படிப் பயன்படுத்துவது? இப்பொழுது நடைமுறையில் உள்ள தீயணைப்பான்கள் மிக எளிதாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் வந்துள்ளன. Safety pin எனப்படும் ஒரு கம்பி இருக்கும். அதை வெளியில் எடுத்து விட்டு, கைப்பிடி போன்ற அமைப்பை அழுத்திப் பிடித்தால் ரீச்சார்ஜ் டியூப் எனப்படும் குழாய் வழியாக தீயை அணைக்கக்கூடிய பொருள் வெளியேறி தீயை அணைத்து விடும்.
PASS என்பது நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. தீயணைப்பான்களைப் பயன்படுத்த அதை நினைவில் வைத்துக் கொள்ளவும் .
P- Pull
A- Aim
S- Squeeze
S- Sweep
இந்த முறையைப் பயன்படுத்தி எளிதாகத் தீயை அணைக்கலாம். சில தீயணைப்பான்களில் கைப்பிடியைத் திருகுவது போன்ற அமைப்பு இருக்கும். அது கரியமில வாயு CO2 தீயணைப் பான்கள் ஆகும். தண்ணீர்க் குழாயைத் திறந்து மூடுவது போல் அதை திறந்து மூடலாம்.
குழந்தைகளே, நாம் இப்போது நடைமுறையில் உள்ள ஒரு செயலை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். வீட்டில் சூடம் கொளுத்தும் பொழுதோ விளக்கைக் கொளுத்தும் பொழுதோ அதில் உள்ள நெருப்பை நிறைய பேர் தொட்டுக் கும்பிடுவதைப் பார்த்திருப்போம். கேட்டால் அக்னி பகவான் என்று கூறுவார்கள். ஆனால், அதே தீ பெரிதாகி வீடு தீப்பிடித்து எரியும் பொழுது அக்னி பகவான் பெரிய அளவில் வந்துள்ளார் என்று ஏன் அவர்கள் கும்பிடுவதில்லை. பெரியார் தாத்தா கூறியது போல் “பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்” என்பது புரிகிறதல்லவா?
இந்தக் கட்டுரையில்கீ உங்களுக்கு ஏதாவது அய்யம் இருந்தால் 9787709101 எண்ணில் தொடர்பு கொண்டோ, அல்லது அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.