ஊருக்குப் போய் வந்த கரடி – 2 : தூங்கு மூஞ்சி
இரவுப் பொழுது…
வானத்தில் முழுநிலா…
“ஊருக்குப் போய் வந்த கரடி, எங்க எங்க போச்சோ? என்ன என்ன பாத்துச்சோ? என்ன என்ன சாப்புட்டுச்சோ?…” என்ற பல கற்பனைக் கனவுகளில் மிதந்த விலங்குகள் அனைத்தும் மொத்தமாய்த் திரண்டு வந்து உயர்ந்த நாவல் மரத்தடியில் கூடி விட்டன.
“காட்டுல காணாமப் போன கரடி, ஊருக்குப் போயிட்டு இன்னைக்குக் காலையில காட்டுக்குத் திரும்பி வந்துடுச்சு. அது ஊருக்குள்ள போயி அங்கே பார்த்ததை இன்னைக்கு ராத்திரி நாவல் மரத்தடியில நிலா வெளிச்சத்துல சொல்லப் போகுதாம்! அதனால எல்லாரும் தவறாம அங்கே வந்துடுங்க” என்று பறக்கும் அணிலும், குரங்கும் சேதி தெரியாமல் இருந்த மற்ற விலங்குகளுக்கும் மரத்தில் உள்ள மைனா, பஞ்சவர்ணக்கிளி, ஆந்தை, தேவாங்குன்னு ஒருத்தர விடாம எல்லாருக்கும் தாவிப் பறந்து சொல்லி முடிச்சுட்டாங்க…
நாவல் மரத்துக்கு மேலே வான் நிலாவின் குளிர்ச்சியான வெளிச்சம்.
வழக்கமா காட்டுக்குள்ள சில்லுனு வீசுற குளிர் காற்று.
மரத்துல, செடி கொடியிலெ ஒட்டிக்கிட்டு இருக்கும் பூச்சிகள் போடுற ‘ஙொய்யிங்’கிற ஓசை.
இதுக்கு நடுவுல குட்டிக் கரடி ஊருக்குப் போய் வந்ததைக் கேட்க விலங்குகளின் பெரிய கூட்டம்.
சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பெரிய விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் அங்கே தான் கூடி இருந்தன.
தன் குட்டியைப் பிரிந்து தேடி அலைந்த சோகத்தில் தூக்கத்தை இழந்திருந்த தாய்க் கரடியும், ஊரைச் சுத்திட்டு வந்ததுனாலேயும், உடம்பு சோர்வுனாலேயும் தூக்கம் இழந்த குட்டிக் கரடியும், தங்களோட குகையிலே நல்லா குறட்டை விட்டுத் தூங்கிக்கிட்டிருந்தன.
நாவல் மரத்தடியில் நிறைய விலங்குகள் கூட்டமாக் கூடியிருக்கிற செய்தி தாய்க்கரடிக்கும் குட்டிக்கும் தெரியவே தெரியாது.
ஊருக்குப் போய் வந்ததைப் பத்தி எல்லாருக்கும் சொல்றேன்னு சொன்ன குட்டிக் கரடி இன்னும் காணோமே… ஒருவேளை மறுபடி ஊருக்குப் போயிடுச்சோ… நாம வேற பெருசா சொல்லி எல்லாரையும் வர வைச்சிட்டோமே… என்று நினைத்தபடி கரடி இருக்கும் குகையின் திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தது குறும்புக்காரக் குரங்கு.
“ஏப்பா! எப்ப கரடி வர்றது? எப்ப ஊருக்குப் போய் வந்ததைச் சொல்லி முடிக்கிறது? நான் எப்ப போய் இரை தேடிச் சாப்பிடுறது?” என்று தன் நிலையை நினைத்துப் பேசியது ஆந்தை.
“அணிலு! எனக்கு இப்பவே தூக்கம் வருது. கரடி வர்ற மாதிரி தெரியல. நான் போகட்டுமா?”
-கொட்டாவி விட்டபடி கேட்டது முயல் குட்டி.
“அடே! கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. நான் போயி கரடிக் குட்டியையும் அதோட அம்மாவையும் கையோட கூட்டிகிட்டு வாறேன்…” என்று தாவிக் குதித்துப் புறப்பட்டது குரங்கு.
கரடி இருக்கிற குகையின் வாசலுக்குப் போய் நின்றதுமே தெரிந்தது – அம்மாவும் கரடிக் குட்டியும் நல்ல தூக்கத்தில் இருக்கிறார்கள் என்பது.
குறட்டைச் சத்தம் குகை வாசலிலேயே கேட்டது.
குரங்குக்கு கோபம் வந்தது… “ராத்திரிக்கு நாவல் மரத்தடிக்கு வாங்க, நான் ஊருக்குப் போய் வந்ததை சொல்றேன்னு சொல்லிப்புட்டு இங்கே அம்மாவும் புள்ளையும் குறட்டை விட்டுத் தூங்குறீங்களா? அடச் சீ… எழுந்து வாங்க!” என பக்கத்தில் கிடந்த குச்சியை எடுத்து அம்மாவைத் தட்டியது. தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அம்மாகரடி துள்ளிக் குதித்து விழித்தது.
“எங்களை வரச் சொல்லிட்டு இங்கே என்ன தூக்கம்? நாங்க அங்கே காத்துக்கிட்டிருக்கோம்னு கொஞ்சம் கூடக் கவலை இல்லாம குறட்டை விட்டுத் தூங்குறீங்க… சீக்கிரம் எழுந்து வாங்க!” – என்றது குரங்கு.
காலையில குட்டிக் கரடி சொன்னது அப்போதுதான் அம்மா கரடிக்கு ஞாபகத்துக்கே வந்தது.
உடனே “செல்லக்குட்டி… செல்லக்குட்டி… எழுந்திருப்பா… எல்லாரும் நீ சொல்றதைக் கேக்க நாவல் மரத்தடியில காத்துக்கிட்டு இருக்காங்களாம் வா… வா… போலாம்னு” அம்மா கரடி கூப்பிட்டது.
“அம்மா! இப்படி நிம்மதியா தூங்கியே ரொம்ப நாளாச்சும்மா. நான் அப்பறமா வாறேம்மா… நீ போம்மா” என்று முனகியபடியே புரண்டு படுத்தது குட்டிக் கரடி.
குரங்கு தன் கையில் இருந்த குச்சியை குட்டிக் கரடியின் காதில் விட்டு லேசாக ஆட்டியது. துடித்து எழுந்தது குட்டிக் கரடி.
“குரங்கு அண்ணே! ஏன்னே இப்படிப் பண்றீங்க? தூக்கம் வருதுண்ணே.”
“ஊருக்குப் போய் வந்ததுல நிறைய செய்தி இருக்குன்னு சொல்லி, எங்க தூக்கத்தையும் கெடுத்துப்புட்டு… இங்கே நீ நிம்மதியா தூங்கலாம்னு பாக்குறியா… கிளம்பு கிளம்பு! அங்கே உன் பேச்சைக் கேட்கக் காடே கூடி நிக்குது.’’
“என்னது? காடே கூடி நிக்குதா! என்ன சொல்றீங்க அண்ணே?”
“ஆமா அங்கே வந்து பாரு”
என்று முன்னால் நடந்தது குரங்கு.
“சரி… சரி… போகலாம் வா” என்றது அம்மா கரடி.
மூவரும் நாவல் மரம் நோக்கிப் புறப்பட்டனார்.
(பயணம் தொடரும்)