ஓவியராகலாம் வாங்க! : கிளி
நண்பர்களே, இந்த முறை நாம் அஞ்சுகம், தத்தை, கிள்ளை எனப் பழங்கால இலக்கியங்களில் சிறப்பிடம் பெற்றுள்ள கிளியை வரையப் போகிறோம். எப்படி வரையலாம் என்று பார்ப்போமா?
கிளி என்றால் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா! கிளி மிகவும் அழகான பறவை. இது பச்சை மற்றும் பளீர் வண்ணங்களை இறகுகளாகக் கொண்டது. வளைந்த சிவப்பு நிற அலகும், உறுதியான கால்களும் கொண்டது. பறவை இனங்களில் புத்திக் கூர்மையையும், மனிதர்களைப் போன்று பேசும் தன்மையையும் கொண்டது.
நாரை விடுதூது, புறா விடுதூது, முகில்விடு தூது இவற்றைப் போலவே பழங்கால இலக்கியங்களில் கிளியைத் தூது அனுப்பியது கிள்ளை விடுதூது என்று பாடல்களாக அமைந்துள்ளன.
உலகில் கிட்டதட்ட 398 வகையான கிளிகள் உள்ளன. இவை பெரும்பாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன. கிட்டத்தட்ட 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பறவை இனம். கிளி, பழங்கள் மற்றும் பழக்கொட்டைகளை உணவாக உட்கொள்ளும். சில வகைக் கிளிகள் தேன், மலர்கள் மற்றும் சிறுசிறு பூச்சி, புழுக்களை உண்ணுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
* கியா என்னும் பெயர் கொண்ட ஆஸ்திரேலியக் கிளி இனம் இறைச்சி தின்பவை.
* Kakapo (ககாபு) என்று பெயர் கொண்ட கிளியால் பறக்க முடியாது.
அழகுப் பறவையான இந்தக் கிளியை நாம் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு மிக எளிமையாக வரையலாம் வாங்க!
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் P, U மற்றும் V.
1. P எழுத்தை சற்றே சாய்வாக எழுதவும்
2. P எழுத்தின் வளைவுப் பகுதியில் U எழுத்தை வலது பக்கத்தில் சாய்வாக எழுதவும்
3. U எழுத்தின் உட்பகுதியில் சிறிய வடிவில் U எழுத்தை படத்தில் காண்பது போல் எழுதவும்
4. உள்ளே இருக்கும் U எழுத்தின் மேற்பகுதி நுனியில் தொடங்கி வளைவுக் கோடு ஒன்றை மலையைப் போன்ற தோற்றத்தில் வரையவும்
5. படத்தில் காட்டிருப்பதைப்போல் வளைவுக் கோடுகள் போட்டு கிளியின் ஒரு பக்க இறக்கை வரையவும். பின்னர் தேவையற்ற கோடுகளை அழித்துவிடவும்
6. P எழுத்தின் மேற்பகுதியில் V எழுத்தை எழுதவும்
7. V எழுத்தின் உட்பகுதியில் வளைவுக் கோடுகள் வரைந்த பிறகு தேவையற்ற கோடுகளை அழித்துவிடவும்.
8. P எழுத்தின் வளைவுப் பகுதியில் மாங்கனி வடிவத்தில் மூக்கு (அலகு) வரையவும்.
9. மாங்கனியின் அடிப் பகுதியையும் கண், கால்கள் மற்றும் வால் பகுதிகளையும் வளைவுக் கோடு கொண்டு படத்தில் காண்பது போல் வரையவும்.
கிளி மரக்கிளையில் அமர்ந்து இருப்பதுபோல் வரைந்து வண்ணம் தீட்டி மகிழவும்.