நேருக்கு நேர் நின்று பேசு!
நேருக்கு நேர் நின்று பேசு!
சினத்தைக் குறைத்திடு தம்பி
சோர்வை விரட்டிடு தம்பி
மனத்தில் தூய்மையை வளர்த்தே
மடமையைப் போக்கிடு தம்பி!
உறுதுணை யாய்வந்தே உதவும்
உயர்ந்த வரோடு, நீ பழகு!
குறுமனப் பான்மை கொண்டவர்
கூட்டினை விட்டே, நீ விலகு!
நாளை நாளையென எதையும்
நகர்த்திப் பழகாதே தம்பி!
காலையும் மாலையும் கல்வியைக்
கருத்துடன் நன்றாய்க் கற்றிடு!
உயர்ந்த கொள்கையைப் பற்றிடு
உழைப்பே உன்னை உயர்த்திடும்!
கயமை கவடு செய்பவரால்
கனவிலும் தீங்கே விளைந்திடும்!
முழங்கிடு முப்பால் கருத்தினை
முயற்சியை என்றும் நிறுத்தாதே!
விலங்கு பறவைகள் மீது, நீ
விருப்பம் கொண்டிடு தம்பியே!
நேருக்கு நேர்நின்று பேசிடும்
நெஞ்சுரம் கொண்டே விளங்கிடு!
யாருக்கும் அஞ்சுதல் இன்றியே
ஊருக்கு நல்லன செய்குவாய்!
– பாவலர் அழகுநிலவன்
புதுக்கோட்டை