லாலி
மலை அடிவாரத்தில் ஒரு குட்டி கிராமம். டிங்… டிங்… டிங்… என சத்தம் எழுப்பியபடி ஒரு லாரி ஊருக்குள் நுழைந்தது. பிங்க் நிற லாரி… இல்லை இல்லை, பச்சை நிற லாரி… இல்லை இல்லை, இளஞ்சிவப்பு நிற லாரி… இல்லை இல்லை, அது ஒரு ஜாலி லாரி! ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும் ஒரு ஜாலி லாரின்னு வைத்துக் கொள்ளலாம். ஊரில் இருக்கும் குழந்தைகள் எல்லாருக்கும் அந்த லாரியைப் பிடிக்கும். அது வழக்கமான பொருள்களை ஏற்றிவரும் லாரி அல்ல. அது மேகங்களைச் சுமந்துவரும் லாரி. என்னது… மேகமா? ஆமாம் ஆமாம்! சூரியன் உதித்து மறையும் வரையில் லாரி ஒரு மலை உச்சியில் நிற்கும். எல்லாப் பக்கங்களிலும் காணப்படும் மேகங்களைப் பார்க்கும் இடத்தில் நிற்கும். மேகத்தில் பலவித வடிவங்கள் வரும் அல்லவா? ஓடும் குதிரை, சுருண்ட வால் நாய்க்குட்டி, நீண்ட தந்தம் கொண்ட யானை, சிரிக்கும் குழந்தை என ஏகப்பட்ட வடிவங்களில் இருக்கும் அல்லவா? அந்த வடிவங்களைப் பார்த்துச் சிறந்த வடிவங்களைத் தேர்ந்து எடுத்து அவற்றின் குட்டி வடிவத்தினை லாரி தயாரிக்கும். வானில் பெரிய யானை தென்பட்டால், லாரிக்குள் கைக்கு அடக்கமான ஒரு குட்டி யானை அதே போலத் தயாராகும்.
மாலை நேரத்தில் லாரி கிராமத்திற்குள் வரும். டிங்… டிங்… டிங்… என்று சத்தம் எழுப்பும். எல்லாக் குழந்தைகளும் ஓடி வருவார்கள். வரிசையில் நிற்பார்கள். வயது வாரியாக நிற்பார்கள். அவரவர்க்கு விருப்பமான மேக உருவத்தினை வீட்டிற்கு எடுத்துச் சென்று குழந்தைகள் விளையாடுவார்கள். அதனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். ஆனால், காலையில் மேகம் காணாமல் போய் ஒரு சொட்டுத் தண்ணீராக மாறி இருக்கும். மேக உருவத்திற்குள் கை விடுவார்கள். புகைக்குள் கைவிட்டது போல இருக்கும். வண்ணப்பொடிகள் தூவுவார்கள். படுக்கைக்குப் பக்கத்தில் வைப்பார்கள். ஒரு வெள்ளைத்தாள் மீது வைப்பார்கள். ஒரு தட்டில் வைப்பார்கள். விளையாடிக் களைத்து உறங்கிடுவார்கள்.
பிரிட்டோ எப்போது லாரி வருமெனக் காத்துக்கொண்டே இருப்பான். இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. சிறுவன் என்பதால் முதலில் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அவனுக்கு விருப்பமான மேக உருவமே கிடைக்கவில்லை. போனால் போகட்டும் என்று ஏதோ ஒன்றினை எடுத்து வருவான். ஆனால் பின்னர் மகிழ்ச்சியாக விளையாடுவான். பிரிட்டோவிற்கு விருப்பமான உருவம் அவன் மனதில் இருந்தது. ஆனால் அவனால் விளக்கிச் சொல்ல முடியவில்லை.
தினம் தினம் அந்த மாதிரி மேக உருவம் எதுவும் தென்படவில்லையே என்று வருத்தப்படுவான்.
ஒரு நாள், எல்லோருக்கும் மேக உருவங்களைக் கொடுத்த பிறகு லாரி காலியானது. நன்றாக இருட்டிக்கொண்டு வந்தது. லாரிக்குள் அவன் ஏறிவிட்டான். நன்றாக அதனுள் தூங்கிவிட்டான். லாரிக்கு ஓட்டுநர் என்று யாரும் கிடையாது. தானாக வரும்; தானாகத் திறக்கும். விருப்பமானதைப் பசங்க எடுத்துப்பாங்க. விடிந்தது போல இருந்தது. லாரியின் பின்புறம் இருந்தான் பிரிட்டோ. எழுந்து பார்த்தால் அவனுக்கு இன்ப அதிர்ச்சி! அப்படி ஒரு ரம்மியமான இடம். சுற்றிலும் விதவிதமான மேகங்கள் – வெள்ளை, மேகங்கள் அணிவகுப்பு! ‘வாவ்’! என்று” ª’சால்லி கன்னத்தில் கை வைத்துக்கொண்டான். லாரிக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது
“தம்பி, நீ எப்ப வந்த?”
“நாளைக்கு” என்றான்.
லாரி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.
“என்ன மேக உருவம் வேண்டும்-?”
“அப்படி வேணும்” என்றான்.
“சரி, நீ அப்படி எங்காச்சும் பார்த்தா என்கிட்ட சொல்லு, பிடிச்சுக் கொடுக்குறேன்”
“சரி”
எல்லா பக்கமும் பார்த்துக்கொண்டே இருந்தான். அவ்வப்போது ‘க்ளிக்’ என்ற சத்தம் கேட்கும். கொஞ்ச நிமிடத்தில் லாரியின் பின் புறம் குட்டி மேக உருவம் வந்துவிடும். ஒரு நீள வால் நாயினை வானத்தில் பார்த்தான். ‘க்ளிக்’ என்ற சத்தம் கேட்டது. லாரியின் பின் பக்கம் ஒரு குட்டி மேகம் – நீள வால் நாயினைப் போல உருவம். பிரிட்டோ சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.
“பார்த்தியா?”
“இல்ல”
மதியம் எங்கிருந்தோ பழங்களை வரவழைத்தது லாரி. சாப்பிட்டான். சாப்பிட்டுக்கொண்டே பார்த்தான். மாலை வந்துவிட்டது. ‘கிளம்பலாமா’ என்று லாரி கேட்டது. சோகமாகச் ‘சரி’ என்றான். வண்டியைக் கிளப்பும்போது “அதோ அதோ அதோ…” என்று கத்தினான். அட இதுதானா என்று லாரி உடனே ‘க்ளிக்’ சத்தத்துடன் குட்டி மேக உருவத்தை உருவாக்கிவிட்டது.
பிரிட்டோவிற்கு முகமெல்லாம் பல். ஊருக்குப் போனதும் தனக்குப் பிடித்த உருவத்தை எடுத்துக்கொண்டு ஓடினான். இரவெல்லாம் தூங்கவே இல்லை. அதனை வைத்து விளையாடினான். விடியற்காலையில் கெஞ்சநேரம் தூங்கியபோது அது ஒரு சொட்டு நீராக மாறியது.
மாலையில் ‘டிங் டிங் டிங்’ எனச் சத்தம். அதே போன்ற மேக உருவத்தை லாரி எடுத்து வந்தது. பிரிட்டோவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி. தினம் தினம் கிடைத்தது. தினமும் ‘டிங் டிங்’ சத்தம் கேட்டதுமே குழந்தை மொழியில் “லாலி” என ஊரே அதிரத் துவங்கியது.<