நினைவில் நிறுத்துவோம்! துள்ளித் திரியுங்கள்! துருதுருவென்று இருங்கள்!
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் பிஞ்சுகளாக நாங்கள் இருந்தபோது எங்கள் குழந்தைப் பருவம் எப்படியிருந்தது என்பதை நீங்கள் அறிந்தால்தான் இன்றைய பிஞ்சுகள் எவ்வளவு இழந்து நிற்கிறார்கள் என்பது விளங்கும்.
அதிலும் குறிப்பாக கிராமத்துப் பிள்ளைகள் பெற்றிருந்த வாய்ப்புகள் அன்றைக்குக்கூட நகர்ப்புறப் பிள்ளை களுக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மையாயினும், இன்றைக்கு நகர்ப்புறப் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒடுக்க, முடக்க நிலை அன்றைக்கு இல்லை.
நாங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்த போது எங்கள் வாழ்வு சிறகடித்துப் பறக்கும் பறவைபோல இருக்கும். 5 வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்படுவோம். அதற்குமுன் விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டுதான்!
நடைவண்டியில் நடைபயின்றபின் நடக்கத்தொடங்கியதும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கால் ஓயாது நடந்துகொண்டும், ஓடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், துள்ளிக்கொண்டும் இருக்கும்.
நீந்தத் தெரியாத, மரம் ஏறத் தெரியாத பிள்ளைகள் எதுவும் கிராமத்தில் இருக்காது. பணம் கொடுத்து எந்த விளையாட்டுப் பொருளும் வாங்கியது இல்லை. கிடைப்பவை எல்லாம் விளையாட்டுப் பொருட்களாக மாறும்.
பனை நுங்கு சாப்பிட்ட பின் அந்த பனங்காய்கள் சக்கரமாக மாற்றப்பட்டு வண்டி ஓட்டுவோம். உடைந்த பானைகளின் ஓடுகள் சில்லியாக உடைக்கப்பட்டு சில்லி விளையாடப்படும். புளியங்கொட்டைகள் பல்லாங்குழி விளையாடப் பயன்படும். பல்லாங்குழிப் பலகை இல்லையென்றால், இலைகளைக் கசக்கி கட்டம் போட்டு பல்லாங்குழி ஆட்டம் ஆடப்படும். தாயமும் அப்படியே.
மணிக்கணக்கில் குளம், ஆறு, வாய்க் கால்களில் நீந்தி விளையாடுவோம். ஆலமர விழுதுகளில் ஊஞ்சல்கட்டி ஆடுவோம்.
கோலிக்குண்டு விளையாட்டு, பதுங்கி ஆடும் விளையாட்டு, சடுகுடு ஆட்டம், கோகோ ஆட்டம், ஓட்டப்பந்தயம், பந்து ஆட்டம், கிட்டிப்புள் ஆட்டம் (இதுதான் இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தின் முன்னோடி.) அதிலும் அடித்தாலும், கேட்ச் பிடித்தலும் உண்டு. விடுகதை போடுதல், கதை கேட்டல், கூட்டாஞ்சோறு ஆக்குதல் என்று எப்போதும் ஓயாத விளையாட்டுகள் பலப்பல.
5 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டாலும், பள்ளியிலும், துருதுரு என்றுதான் இருப்போம். அங்கும் விளையாட நேரம் ஒதுக்கப்படும். அது சிறப்பு வகுப்புகளாக ஆக்கப்படாது. உண்மையிலே வியர்க்க வியர்க்க விளையாடுவோம். அதனாலே விளையாட்டு வகுப்புகள் பெரும்பாலும் கடைசிப் பாடவேளையாக இருக்கும். எல்லா பள்ளிகளிலும் பெரிய விளையாட்டுத் திடல் இருக்கும்.
படிப்பையும் விளையாட்டாகவே படிப்போம். மூளையை, உடலை வருத்திக் கொண்டு படிக்க மாட்டோம். அப்படிப் படிக்கவும் கூடாது. இவ்வளவும் ஏன் சொன்னேன் என்றால், இன்றைய பிஞ்சுகளும் அப்படி இருக்கவேண்டும். அதுதான் உண்மையான பிள்ளைப்பருவமாகும். இப்படி துள்ளித் திரிந்து துருதுருவென இருக்க நல்ல உணவு மூன்று வேளையும் உண்ணவேண்டும்.
மூன்று வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது இன்றைய நிலை. என்றாலும், 3, 4 வயதுகளில் விளையாட்டாகவே கற்பித்தல் நடக்கவேண்டியது கட்டாயம். அடக்கி, ஒடுக்கி, விரட்டி, மூளைக்குள் மூன்று வயதில் அளவுக்கு அதிகமாய்த் திணிப்பது கூடாது. அப்படிச் செய்வது அவர்களின் உடல் நலத்தையும், மூளை நலத்தையும் ஒருசேரப் பாதிக்கும். படிப்பில் வெறுப்பை உண்டாக்கும்.
காலை 7 மணிக்குப் பிள்ளைகளை பள்ளி வாகனங்களில் ஏற்றி, மாலை 4 மணிவரை கசக்கிப் பிழிவதை குற்றச் செயலாகவே குறிக்க வேண்டும். கல்வியாளர்களும், அரசும், பெற்றோரும், ஆசிரியர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளைத் துள்ளவும், துருதுருவென்று இருக்கவும் ஊக்குவிக்க வேண்டும். வாய்பளிக்கவேண்டும். வழிகாண வேண்டும். அப்படிப்பட்ட கல்விதான் அறிவுக் கூர்மையுள்ள ஆய்வு நுட்பமுள்ள பிள்ளைகளை உருவாக்கும். மதிப்பெண் பெறும் மனநோயாளிகளாகப் பிள்ளைகளை ஆக்கக்கூடாது என்பதை கல்வித்துறை கருத்தில் கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் தாங்களாகவே எப்போதும் மனத்தளவில் இறுக்கமின்றி மகிழ்வாக இருக்க வேண்டும். படிப்பைச் சுமையாக, வெறுப்பாக எண்ணாமல், எளிமையாக, ஆர்வத்தோடு படிக்க வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் படிப்பு ஒரு சுமையாக, வெறுப்பாக மாறாது.
ஆசிரியர் கற்பிப்பதில் அய்யம் வந்தால், உடனே விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். ஆசிரியர் கற்பிக்கும் போது அதைக் கவனமாக கேளுங்கள். அப்போது விளையாடக்கூடாது, வேறு எதிலும் உங்கள் கவனம் செல்லக்கூடாது.
ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கும் முறையைச் சரியாகப் பிள்ளைகள் செய்ய வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும்.
காலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதில் விளையாடவும், ஓய்வெடுக்கவும், ஓய்வு நேரத்தில் விருப்பமான சரியானவற்றைப் பார்க்கவும் கேட்கவும் வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை நிற்க வேண்டும்.
பெரும்பாலான நேரங்களில் செல்பேசியில் விளையாடுவது பார்ப்பது, கேட்பது கூடாது. தேவையானவற்றை அளவோடு பார்க்க வேண்டும்.
படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும். எல்லா நேரமும் படிப்பு என்பது தப்பான செயல். இதை பெற்றோர்கள் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எவ்வளவு படித்து அறிந்தார்கள் என்பதே முக்கியம். படிப்பில் ஆர்வமும் கவனமும் இன்றி மூன்று மணி நேரம் படித்தாலும் பயனில்லை. ஒரு மணி நேரம் கவனமுடன் படிப்பில் கருத்தூன்றிப் படித்தால் மூன்று மணி நேரத்தில் படிக்க வேண்டியதை படித்துவிட முடியும்.
இந்த உண்மையைப் பிள்ளைகளும் பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆர்வமும், விருப்பமும் இன்றி, கட்டாயப்படுத்தித் திணிக்கப்படும் எதுவும் பயன் தராது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நலமான வலுவான உடலில்தான், மகிழ்வான சுறுசுறுப்பான, தெளிவான மூளை இருக்கும்; இருக்க முடியும். எனவே, உடல் நலமும், அறிவு நலமும் காக்க, துள்ளித் திரியுங்கள், துருதுருப்பாக இருங்கள்! பெரியவர்கள் பிள்ளைகளை அப்படி இருக்கவிடுங்கள்! அதுவே மனநலமுள்ள, அறிவு, ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்கும்.<