அறிவியல் பயன்பாடு : குளிர்சாதனப்பெட்டி வலப் புறமாகத்தான் திறக்குமா?
கேள்வி: குளிர்சாதனப் பெட்டியின் கதவு ஏன் வலப் புறமா திறக்குற மாதிரியே வடிவமைச்சுருக்காங்கன்னு யாருக்காச்சும் தெரியுமா?
பதில் : ஒரு கதவுள்ள குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்தால்தான் இந்தக் கேள்வி எழும். பெரும்பாலும் அப்படித்தான் அமைக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கின்றோம். காரணம், பெரும்பாலோர் வலக் கைப் பழக்கம் உடையவர்கள். அதன் கதவைத் திறப்பதற்கு நாம் சற்று பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், குளிர்சாதனப் பெட்டியின் வெளிப்புறத்தை விட உட்புறத்தில் காற்று அழுத்தம் சற்றுக் குறைவாகவே இருக்கும். தவிரவும், கதவும் இறுக்கமாக மூடியிருக்க வேண்டும் என்பதற்காக Rubber Sealing/beading கொடுத்திருப்பார்கள். அதற்கு வலக்கையைப் பயன்படுத்துவதே எளிதானது என்பதற்காக அப்படி அமைத்திருக்கிறார்கள்.
எனினும், அப்படி வலப்புறம் மட்டுமேதான் திறக்கும்படி இருப்பதில்லை. குளிர்சாதனப் பெட்டியை நன்கு கவனித்தால் புலப்படும். சிறிய மாறுதல்களை எளிதாக மேற்கொண்டு அதனை இடப் புறமாகத் திறக்கும்படியும் மாற்றியமைக்க வசதி இருக்கும். அடிப்படைக் கருவிகளைக் கையாளத் தெரிந்திருந்தால் நாமே கூட அப்படி மாற்றியமைத்துக் கொள்ளலாம். அல்லது, குளிர்சாதனப்பெட்டி நிறுவனத்தின் பணியாளர்களின் உதவியை நாடலாம்.
இடப்புறம் திறப்பது போன்றும் குளிர்சாதனப் பெட்டிகள் கிடைக்கும். மேலும், நம் வீட்டில் அதனை எந்த இடத்தில் அல்லது எந்த மூலையில் வைக்கப் போகின்றோம் என்பதைப் பொறுத்தும் நாம் கதவு திறக்கும் முறையைத் தீர்மானித்துக் கொள்ளலாம். எல்லாம் நம் வசதிக்கேற்பதான்.
மேலதிக உதவிக் குறிப்பு
1. குளிர்சாதனப் பெட்டியின் கால் பகுதியில் அதன் உயரத்தினை சிறிதளவில் ஏற்றி இறக்கி வைக்குமாறு திருகு அமைப்பில் வைத்திருப்பார்கள். அது எதற்கென்றால், குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் தாழ்வாகவும், முன்புறம் சற்று உயர்ந்தும் இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால், அப்பொழுதுதான், திறந்த கதவை மூடும்போது பாதியிலேயே விட்டால் கூட அது தானாக மூடிக்கொள்ளும். அடுத்தது, Defrost ஆகும்பொழுது வடியும் நீர் பின்புறம் உள்ள வடிதொட்டியில் சேகரிக்கப்பட பின்புறம் சற்று சாய்ந்து இருக்க வேண்டும்.
2. குளிர்சாதனப் பெட்டியின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்கின்றதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். Rubber beading பழுதுபட்டிருந்தால் மாற்றிவிடுங்கள். உள்ளிருக்கும் பொருள்கள் ஏதேனும் கதவை சரிவர மூட முடியாத வகையில் நீட்டிக்கொண்டிருந்தால் அதனைச் சரி செய்யுங்கள். இல்லாவிட்டால், ஃப்ரீஸரில் (உறைவிப்பானில்) பனிக்கட்டி உருவாகும். உள்ளே சரியான வெப்பநிலை பராமாரிக்கப்படாது. கம்ப்ரெஸ்ஸரின் திறன் குன்றும்.
3. உணவுப் பொருள்கள் அல்லது வாடை தரக்கூடிய எந்தப் பொருளையும் திறந்தவாறு உள்ளே வைக்காதீர்கள். அது மற்ற பொருள்களின் சுவையைக் கெடுத்துவிடும்.
4. மென்மையான தோல், எளிதில் வாடக்கூடிய மேற்பரப்பைக் கொண்ட காய்கள் மற்றும் பழங்களைத் திறந்தவாறு உள்ளே வைக்காதீர்கள். அதிலிருக்கும் நீர்ச்சத்து உறிஞ்சப்பட்டு வறண்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது. காய்கனிகள் வைப்பதற்கென்று கீழே ஒரு பெட்டி இருக்கும், அதற்குள் வைக்கலாம்.
பிஞ்சுகளே, நீங்களும் இனிமேல் அப்பா, அம்மாவுக்கு இப்படி ‘டிப்ஸ்’ கொடுங்கள்!