விரிவாக அறிவோம் : சந்திரயான் 3 நிலவுக்கலனின் கடைசி திக் திக் நிமிடங்கள்
அய்ந்தாவது கட்டம்: நிலாவின் மேற்பரப்பை நெருங்கியது.
நிலாவின் மேற்பரப்பில் இருந்து 150 மீட்டரில் இருந்த விக்ரம் தரையிறங்கி, 60 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்குவதுதான் அய்ந்தாவது கட்டம்.
இப்போது எந்த இடத்தில் தரையிறங்க வேண்டுமோ அந்த இடத்தில் விண்கலம் இருக்கிறது. இந்த நிலையில், கீழ்நோக்கி இறங்கக்கூடிய ராக்கெட்டின் விசையைக் கொஞ்சம் குறைத்தால் என்ன நடக்கும்?
நிலாவினுடைய ஈர்ப்புவிசையின் கை ஓங்கி, மெல்ல மெல்ல காற்றில் மிதந்து விழும் இறகைப் போல விண்கலம் கீழ்நோக்கிச் செல்ல வேண்டும்; சென்றது.
இந்த முறை விண்கலத்தில் லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவியை இஸ்ரோ இணைத்திருந்தது. இந்தக் கருவி நிலாவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பியது.அந்த லேசர் கற்றை திரும்பி மேல்நோக்கி வரும். அதை உணர்ந்து, விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதை கணத்திற்குக் கணம் கணக்கிடும். அதைப் பொருத்து, கூடுதல் வேகம் இல்லாமல் தேவைப்படும் வேகத்தில் தரையிறங்கும் வேலையை அந்தக் கணினி செய்யும். அந்த அளவுக்கு ராக்கெட்டை நுணுக்கமாக இயக்கும் வேலையைச் செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி செய்தது.
ஆறாவது கட்டம்: விண்கலத்தைக் கீழே விழாமல் தடுக்கும் எளிய நுட்பம்.
அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்க இஸ்ரோ ஒரு புதுமையான நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.
அதன்பிறகு அறுபது மீட்டர் உயரத்திலிருந்து 10 மீட்டர் உயரத்திற்கு விண்கலத்தைக் கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம்.
இந்தச் சூழலில் பயன்படுவதற்காக விண்கலத்தில் மற்றுமொரு சிறப்பம்சத்தை விஞ்ஞானிகள் வைத்துள்ளார்கள். விண்கலத்தின் கீழ்ப்பகுதியில் தரையைப் பார்த்தவாறு ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அது தொடர்ச்சியாக ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கும். அது எதற்காக?
இதை ஓர் எளிய சான்றுடன் விளக்கலாம். நமக்கு எதிரே ஒரு பேருந்து வந்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது தொலைவில் இருக்கும்போது அதன் உருவம் மிகவும் சிறியதாகத் தெரிகிறது. ஆனால், பேருந்து நம்மை நெருங்க நெருங்க, அந்த உருவம் பெரிதாகிக் கொண்டே வரும் அல்லவா!
பேருந்தின் உருவம் எவ்வளவு வேகமாக நம் கண்களுக்குப் பெரிதாகப் புலப்படுகிறது என்பதை வைத்து, பேருந்தின் வேகத்தைக் கணக்கிட முடியும்.
அதேபோல, விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும்போது அது எடுக்கும் ஒளிப்படங்களில் நிலவின் தரைப்பரப்பு எவ்வளவு வேகமாகப் பெரிதாகிறது என்பதை அடிப்படையாக வைத்து எவ்வளவு வேகத்தில் விண்கலம் கீழ்நோக்கி வருகிறது என்பதைக் கணக்கிட்டார்கள். ஒன்றுக்கு இரண்டான பாதுகாப்பு என்பதே இதன் நோக்கம்.
அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்கவே இத்தகைய புதுமையான நுட்பங்கள்.
ஏழாவது கட்டம்: விண்கலத்தின் இயக்கத்தை (ஆயுளை)த் தீர்மானித்தது.
நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருத்தன.
இப்போது நிலவின் தரைப்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் விண்கலம் இருந்தது. இந்த நேரத்தில் ராக்கெட் (ஆஃப்) இயக்கத்தை நிறுத்தி விண்கலத்தை நிலத்தில் கல் விழுவதைப் போல் தொப்பென விழ வைப்பார்கள். இதுதான் ஏழாவது கட்டம்.
தரையிறங்கும் கடைசி நொடி வரை ஏன் ராக்கெட்டுகளை இயக்கவில்லை?
ஏனெனில், நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருக்கும். தரை வரைக்கும் ராக்கெட்டை இயக்கிக்கொண்டே இறங்கினால், அந்த மண் துகள்கள் புழுதியாக மேலெழும்பும்.
அப்படி எழும்பும் தூசுகள் விண்கலத்தின் மேற்பரப்பில் உள்ள சூரியத் தகடுகளில் படிந்து சூரிய ஒளியைத் தடுத்து மின்சாரமே உற்பத்தி செய்ய முடியாத அபாயம் ஏற்பட்டுவிடலாம். அதைத் தவிர்ப்பதற்காகவே இந்த உத்தி.
அப்படி விழும்போது நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் விழ வைக்கவேண்டும் ஆனால் தவறுதலாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும்கூட அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு தரையிறங்கிக் கலனின் கால்களை அமைத்திருந்தார்கள்.
முதல் கட்டம் முடிந்த பிறகு, இரண்டாவது கட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் இருந்த விண்கலம் ஏழாவது கட்டத்தில் வெறும் பத்து மீட்டர் உயரத்திற்கு வந்து சேர வெறும் 4:30 நிமிடங்களே ஆகும். இந்த நேரத்தைத்தான் விண்கலத்தின் “திக்… திக்… நிமிடங்களாக அமைந்தது இருந்தது.
இந்த விண்கலத்திற்கு வாழ்வா சாவா என்பதைத் தீர்மானித்த நிமிடங்கள் அவை. இந்த நேரத்தில் விண்கலம் எப்படி இயங்க வேண்டும், பக்கவாட்டில் நகர வேண்டுமா, கீழே எவ்வளவு வேகத்தில் இறங்க வேண்டும் என அனைத்தையும் விண்கலத்தின் உள்ளே இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுக் கணினிதான் தீர்மானித்தது.
அந்த நேரத்தில் விண்கலத்தின் உயிர்நாடி அந்த செயற்கை நுண்ணறிவுக் கணினியின் கையில்தான்.
எட்டாவது கட்டம்: கண்கொள்ளாக் காட்சியை உலகம் கண்டது.
ஒருவழியாகத் தரையிறங்கிக் கலன் கீழே இறங்கிவிட்டது. ஆனாலும் விழுந்த வேகத்தில் தூசுகள் மேலே எழும்பியிருக்கும். அவை அடங்கும்வரை ஏதும் செய்யாமல் விண்கலம் அப்படியே இருந்தது.
அனைத்தும் அடங்கிய பிறகு, கங்காரு தனது வயிற்றுக்குள் குட்டியை வைத்திருப்பது போலவே, தனது வயிற்றுக்குள் தரையிறங்கிக் கலன் வைத்திருந்த ஊர்திக்கலனை வெளியே கொண்டு வந்தது.
ஊர்திக் கலன் வெளியே வந்து அதன் தாய்க் கலனான தரையிறங்கிக் கலனை ஒளிப்படம் எடுத்தது. தாய்க் கலன் ஊர்திக் கலனை ஒளிப்படம் எடுத்தது. அந்த ஒளிப்படங்களின் கண்கொள்ளாக் காட்சியை இந்தியா மட்டுமின்றி உலகமே கண்டு மகிழ்ந்தது.
நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய சில மணி நேரங்களில் பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் கால் பதித்தது. பிரக்யான் ரோவர் சக்கரங்களில் இஸ்ரோவின் அடையாளமாக மற்றும் நமது தேசிய சின்னம் பதிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் இறங்கிய பிரக்யான் ரோவர் இஸ்ரோவின் லோகோ மற்றும் இந்திய தேசிய சின்னத்தையும் நிலவில் பதித்துச் சென்றது. நிலவில் காற்று இல்லை. எனவே இந்த அடையாளம் எப்போதும் இருக்கும். நிலவில் பிரக்யான் ரோவர் செல்லும் இடங்களில் எல்லாம் நமது தேசிய சின்னத்தை பதித்துச் செல்லும்.
நிலவில் தரையிறங்கியது முதல் 11 நாட்கள் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வந்த பிரக்யான் ரோவர் தற்போது உறக்க நிலைக்கு சென்றது அதனை மீண்டும் நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி படும் போது உயிரிப்பிக்க இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் பணிகளைச் செய்து வருகிறது.