நடந்த கதை – 3: போராட்ட மேகம் சூழ்ந்தது
இதுவரை…
செழியன் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். தன் அம்மாவிடம் தந்தி என்றால் என்ன என்று கேட்கிறான். 100 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாருக்கு வந்த தந்தி பற்றி அந்தப் பேச்சு நீள்கிறது. கேரளம் மாநிலம் வைக்கம் எனும் ஊரில் குறிப்பிட்ட தெருக்களில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் செல்ல முடியாதது பற்றியும் அதற்கு எதிராகப் போராட்டம் செய்த கே.பி.கேசவமேனன் பற்றியும் கூறுகிறார். 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி நடக்க உள்ள போராட்டம் குறித்துப் பேசத் தொடங்குகிறார் அம்மா.
இனி…
“மார்ச் 30ஆம் தேதி காலையில…” என்று அம்மா சொல்லத் தொடங்கியதும், செழியன் இடைமறித்தான்.
“அம்மா… அம்மா… ஒரு நிமிஷம்… அந்தப் போராட்டத்தைப் பத்தி சொல்றதுக்கு முன்னால ஒரு கேள்விக்குப் பதில் தெரிஞ்சா நல்லா இருக்குமே”
“ஓ! என்ன கேள்வி? கேளு”
“வைக்கத்தில் உள்ள குறிப்பிட்ட தெருவுக் குள்ள புலையர், ஈழவர், தீயர் போன்ற ஜாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் போவதற்குத் தடை இருக்குன்னு சொன்னீங்க, இல்லையா?”
“ஆமா… அதுதானே பிரச்சனையின் தொடக்கம்”
“அப்ப, அங்க நீதிமன்றம், ஆட்சி செய்தவங்க எல்லாம் இதுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லையா?”
“நல்ல கேள்விதான் செழியா… சில விஷயங்கள் பழைய பழக்க வழக்கம்னு அப்படியே கண்டுக்காம விட்டுடுவாங்க இல்லையா… அதுபோலத்தான் இதுவும்”
“புரியற மாதிரி சொல்லுங்கம்மா?”
“வைக்கம் உள்ளிட்ட பகுதிகள் திருவிதாங்கூர் மகாராஜா ஆளுமைக்கு உட்பட்டு இருந்துச்சு. தெருக்கள்ல நடக்கக்கூடாது என்ற தீண்டாமையை எதிர்க்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்யுது. இதை தெரிந்துகொண்ட அதிகாரிங்க பார்ப்பனர்கள் மூலமா நீதிமன்றத்துக்குப் போக வைக்கிறாங்க”
“அப்பறம்”
“இந்த விஷயத்தைப் பற்றி கே.பி. கேசவமேனன் சொல்றப்ப, ‘தடையை மீறித் தீண்டாதவர்கள் தெருக்கள்ல நடந்தா இப்போ இருக்குற சமாதானமான நிலைக்கு ஆபத்து வந்துடும் என நீதிமன்றத்துல அவங்க சொல்லியிருக்காங்க. அதனால நீதிமன்றமும் அந்தத் தெருக்களுக்குள் போறதுக்குத் தடை உத்தரவு போட்டுடுச்சு’ அப்படினு விளக்கமா மக்கள்கிட்ட சொல்றாரு”
“போகக்கூடாதுன்னு சொன்னது சரியாம்மா”
“இதே கேள்வியைத்தான் செழியா, முக்கியத் தலைவரா இருந்த ஜார்ஜ் ஜோசப் எழுப்பினாரு. இந்தத் தடை உத்தரவு கொஞ்சம்கூட நியாயம் இல்லைன்னு துணிச்சலாகச் சொன்னாரு. சில உயர்ஜாதியினரோட வேண்டுகோளினால் இப்படி தடை விதிச்சிட்டாங்கனு சொன்னாரு”
“ஜார்ஜ் ஜோசப் விடுதலைப் போராட்டத் தலைவர்கள்ல முக்கியமானவரு. காந்தியவாதி. வைக்கம் போராட்டத்துக்குத் தந்தை பெரியார் வரணும்னு கடிதம் எழுதினவரு”
“அப்படியா!”
“ஆமா செழியா… ஜாதி வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்னு உறுதியாப் போராடினவரு”
“சரிம்மா.. அப்பறம் என்னாச்சு? நீதிமன்றமே சொல்லிடுச்சுனு போராட்டத்தைக் கைவிட்டுட்டாங்களா?”
“அது எப்படி விடுவாங்க… காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதான தலைவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்துறதுல உறுதியா இருந்தாங்க… கே.பி.கேசவ மேனன் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை நேரடியாகப் பார்த்துப் பேசினாங்க. சின்னச் சின்ன அளவில கூட்டம் போட்டு இதில் உள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னாங்க”
“என்ன சொன்னாங்க?”
“பெரும்பாலும் ஜாதி இந்துகள்கிட்டதான் பேசினாங்க. ‘ஆடு, மாடு எல்லாம் போற தெருவுல ஈழவனோ, புலையனோ போனால் தப்புனு சொல்றது என்ன நியாயம்? அவங்களுக்கு அங்க போறதுக்கு உரிமை இருக்கு. அந்த உரிமையைப் பெற்றுதருவது உயர்ஜாதினர்னு சொல்லிக்கிற உங்க பொறுப்பு தான்’னு மண்டையில உறைக்கிற மாதிரி பேசினாங்க”
“சூப்பர்ம்மா..”
“பலரையும் திரட்டினாலும் இந்தப் போராட்டம் வன்முறை இல்லாத அகிம்சை வழிப் போராட்டம்தான் என்பதுல எல்லோரும் உறுதியாக இருந்தாங்க. ஜார்ஜ் ஜோசப் இதைப் பல இடங்கள்ல வலியுறுத்திப் பேசுறாரு. ஆர்வம் இருக்கிறவங்க தொண்டர்களாச் சேருங்கன்னு அழைப்புக் கொடுத்தாங்க. 18 வயதுக்கு மேற்பட்டவங்க சேர முடியும்னு நிபந்தனையும் விதிச்சாங்க. அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கே”
“என்ன?”
“போராட்டம்னா செலவும் ஆகும் இல்லையா? அதுக்கான பணம் திரட்டுறதையும் கூடவே செய்தாங்க. அப்பக்கூட தாழ்த்தப்பட்டவங்க முடிஞ்ச தொகையையும் ஜாதி இந்துகள் அதிகப் பணமும் கொடுத்து உதவ வேண்டும்னு கேட்டுக்கிட்டாங்க”
“யப்பாடி… ஒரு போராட்டம் நடத்தறதுக்கு முன்னாடி இவ்வளவு வேலை செய்யணுமா?”
“ஆமா… மக்கள்கிட்ட முதல்ல எதுக்கான போராட்டம்னு சொல்லணும். அப்பதான் அவங்க ஆதரவு போராட்டக்காரங்களுக்குக் கிடைக்கும். அப்படி ஆதரவு கிடைச்சாத்தான் ஆட்சி செய்யறவங்க போராட்டத்துக்கு முக்கியத்துவம் தருவாங்க. அப்படி முக்கியத்துவம் தந்தால்தான் போராட்டம் வெற்றி அடையும்… பெரியாரும் இப்படித்தான் ஒரு போராட்டம் நடத்துறதுக்கு சில மாதங்கள் முன்னால மக்கள்கிட்ட பிரச்சாரம் செய்தாரு. என்ன செழியா குழப்பமா இருக்கா?”
“இல்லம்மா.. தெளிவாக இருக்கேன்… மேலே சொல்லுங்க”
“தலைவர்களோட தீவிரமான பிரச்சாரம், மக்கள்கிட்ட ஆதரவு, காந்தியடிகளோட வாழ்த்து, என போராட்டத்துக்கு தயாரயிகிட்டு இருந்தாங்க கேரள காங்கிரஸ் கட்சிக்காரங்க”
“எதிரி தரப்புல எதுவும் செய்யலையா?”
“நீதிமன்றத்துக்கே போனவங்க அடுத்ததா எதுவும் செய்யாமல் இருப்பாங்களா? நேரடியாக காந்தியிடமே இரண்டு பேர் போய்ப் பேசினாங்க. அந்தத் தெரு, கோவிலுக்குச் சொந்தமானவை, எல்லாம் பிராமண டிரஸ்ட்டின் பொறுப்பில் உள்ளன என்றெல்லாம் சொன்னாங்க. காந்தியும் அதைக் கேட்டுட்டு போராட்டத்தை நிறுத்தி வைக்கலாமா என்றுகூட கடிதம் எழுதினார்”
“அடடா… அப்பறம் என்னாச்சு?”
“ஊர்ல நடக்கும் நிலவரம் எல்லாம் அங்க உள்ளவங்களுக்குத்தானே தெரியும்… அதனால, காந்தியோட கடிதத்தைக் கவனத்துல எடுத்துக்கல. போராட்டத்துக்கு நாள் முடிவு பண்ணி, வேலைகள் வேக வேகமாக நடக்குது. நடக்க இருக்கிற போராட்டத்தைப் பத்திதான் அக்கம் பக்கத்துல இருக்கிற ஊர்கள்ல பேச்சு. ஏன், இந்திய அளவுல முக்கியமான தலைவர்கள்கூட என்ன நடக்கப்போகுதுன்னு கவனமாப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க”
“ஓ!”
“ஆமா… அந்தளவுக்கு முக்கியமான போராட்டமா அது பார்க்கப்பட்டுச்சு. ஏன்னா, இந்து மதத்துக்குள்ள இருக்கிற குறிப்பிட்ட ஜாதியினரை, அதே மதத்தைச் சேர்ந்தவங்க தெருவுக்குள் நடக்கக்கூடாதுன்னு சொல்றத ஜனநாயகம் பேசற யாராலும் ஏத்துக்க முடியாது இல்லையா? போராட்டம் தொடங்கின நாள் முதலாய் அங்கே நடந்த ஒவ்வொரு செய்தியும் ரொம்பவே பரபரப்பா இருந்துச்சு…”
“சரி, மார்ச் 30ஆம் தேதிக்கு வாங்க”
“அன்னிக்கு…”
தொடரும்..