குறுநாடகம் : சமத்துவக் கோயில்
காட்சி – 1
(மன்னர், அமைச்சர்)
மன்னர் தனது அரண்மனை வளாகத்தில் சோகமாக உலாவுவது. அப்போது வந்த அமைச்சர் மன்னரின் முக வாட்டத்தைப் பார்த்து,
அமைச்சர்: மன்னா.. நேற்றுவரை நன்றாகத்தானே இருந்தீர்கள். இன்று ஏன் இந்தச் சோகம்?
மன்னர்: அமைச்சரே.. நேற்று யாருக்கும் தெரியாமல் நகர்வலம் சென்றேன் அல்லவா.. அங்கே நான் கண்ட ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்து விட்டது. அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..
அமைச்சர்: உங்களையே சோகத்தில் ஆழ்த்தும்படி அப்படி என்ன காட்சி மன்னரே..?
மன்னர்: சென்ற மாதம் நாம் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்குச் செய்தோம் அல்லவா.. அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தேன்.. அங்கே இருந்த அர்ச்சகருக்கும், வழிபட வந்த ஒரு தொழிலாளிக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. நான் மறைந்திருந்து கேட்டேன்..
(திரை)
காட்சி – 2
(அர்ச்சகர். தொழிலாளி, மன்னர்)
தொழிலாளி கோயிலுக்குள் போக முயற்சி செய்வது – கையை நீட்டித் தடுத்த அர்ச்சகர் தொழிலாளியைத் திட்டுவது…
அமைச்சர்: ஏய், கீழ்ஜாதிப் பயலே.. நீ எதற்காகக் கோயிலுக்குள் நுழைகிறாய்..?
தொழிலாளி: அய்யா.. எதற்காகக் கோயிலுக்குச் செல்வார்கள்.. இறைவனை தரிசிக்கத்தான்..
அமைச்சர்: இங்கேயே இருந்து இறைவனைத் தரிசித்துக் கொள்.. உள்ளே வரக் கூடாது.. ஏனென்றால் நீ தீண்டத்தகாதவன்..
தொழிலாளி: அய்யா, இந்தக் கோயிலைக் கட்டிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் நானும் ஒருவன்.. கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது முதற்கொண்டு, முழுக் கோயிலையும் கட்டி முடிக்க கடுமையாக வேலை செய்தேன்.. கோயில் சுவர்களில் உள்ள ஒவ்வொரு கருங்கல்லிலும் என்னுடைய வியர்வையும் ரத்தமும் கலந்து இருக்கிறது அய்யா.. கோயில் கருவறையில் உள்ள பெரிய அடிக்கல்லை என்னுடைய தலையிலே தூக்கிச் சுமந்துதான் அங்கே வைத்தேன்.. ஏன்.. அந்தக் கல்லின் மேலே எழுந்தருளியிருக்கும் அந்த சிவபெருமானையும், ஒரு கைக் குழந்தையைத் தூக்குவது போல் மிக எச்சரிக்கையாகத் தூக்கி நிறுத்தியதும் என்னுடைய இந்தக் கைகள்தான்.. ஆனால் இந்தக் கைகளையே அந்த இறைவனை வழிபடக் கூடாது என்று சொல்கிறீர்களே.. இது எந்த வகையில் நியாயம்..?
அமைச்சர்: நீ தொட்டுக் கட்டியதால்தான் இந்த கோயில் தீட்டாகியிருந்தது.. சென்ற மாதம் நடந்த கும்பாபிஷேகத்தில் நாங்கள் புனித தீர்த்தம் தெளித்து, தீட்டைக் கழித்துவிட்டோம்.. நீ மீண்டும் உள்ளே நுழைந்தால் கோயில் தீட்டாகிவிடும்.. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.. நீ வெளியிலிருந்தே இறைவனை வணங்கிவிட்டுப் போ..
தொழிலாளி: என்ன அநியாயம்.. கடவுளுக்கே இது அடுக்காது..
(தொழிலாளி கண்ணீருடன் அங்கிருந்து போவது)
(திரை)
காட்சி – 3
(மன்னர். அமைச்சர்)
மன்னர்: நான் கோயிலைக் கட்டியது நாட்டு மக்கள் அனைவரும் இறைவனை வணங்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் மனிதர்களில் ஒரு பிரிவினரை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைப்பது ஏன்..? அவனிடம் உழைப்பை மட்டும் வாங்கிக் கொண்டு மரியாதைக் குறைவாக நடத்துவது ஏன்..? ஏன் இந்த ஏற்றத் தாழ்வு..?
அமைச்சர்: மன்னா.. மனிதர்களுக்குள் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால்தான் அனைத்து வேலைகளும் சரியாக நடக்கும்..? மலம் அள்ளும் தொழிலாளர்கள் எல்லோரும் படித்துப் பண்டிதர் ஆகிவிட்டால் பிறகு அந்த வேலையை யார் செய்வது..? நாடு நாறிப் போய் விடாதா..?
மன்னர் யோசித்துவிட்டு…
மன்னர்: சரியாகச் சொன்னீர் அமைச்சரே.. நாடு நலமுடன் இருக்க வேண்டும் என்றால் உயர்ஜாதி மக்கள் என்றும், தீண்டத்தகாத மக்கள் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டும்.. அப்படித்தானே..?
அமைச்சர்: ஆமாம் மன்னா..!
மன்னர்: உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.. ஏற்றத் தாழ்வுகள் வேண்டும்.. சரி.. இரண்டு பிரிவினரையும் இடமாற்றம் செய்து விடுவோம்.. இதுவரை உயர்ந்த ஜாதிக்காரர்களாக இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக மாறட்டும்..
அவர்களிடமிருந்து நிலத்தையும் அதிகாரத்தையும் பறித்துவிடுவோம்.. அவர்கள் மலம் அள்ளட்டும், சாக்கடையைத் தூய்மை செய்யட்டும், தெருவைப் பெருக்கிச் சுத்தப்படுத்தட்டும்.. இப்படி சில ஆண்டுகள் தூய்மைப் பணியாளராக வேலை செய்யட்டும்.. அதே போல் இதுவரை தீண்டத்தகாதவர்களாக இருந்தவர்கள் உயர் ஜாதிக்காரர்களாக மாறட்டும்.. அவர்களிடம் நிலங்களையும் அதிகாரத்தையும் கொடுத்து விடுவோம்.. அவர்கள் இவர்களை வேலை வாங்கிக் கொள்ளட்டும்.. சரிதானே, அமைச்சரே..
அமைச்சர் தலையைச் சொறிந்தவாரே…
அமைச்சர்: இது.. இது.. எப்படிச் சரிப்பட்டு வரும்..?
மன்னர்: ஏன் சரி வராது.. நீங்கள் கேட்டது ஏற்றத் தாழ்வுதானே.. இதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா இல்லையா..?
அமைச்சர்: இருக்கிறது மன்னா.. இவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள்.. இவர்கள் எப்படி நிருவாகம் செய்வார்கள்..?
மன்னர்: இவர்கள் அனைவருக்கும் கல்வியைக் கொடுப்போம்.. அவர்கள் கற்றுக்கொண்டு, பிறகு பணியாற்றுவார்கள்.. கல்வியைக் கொடுக்காமலேயே கல்வி அறிவு இல்லை என்று சொல்வது சரியாகுமா அமைச்சரே..
அமைச்சர்: அது வந்து மன்னா.. இப்படி மாற்றம் செய்தால் இதுவரைக்கும் உயர்ஜாதியாய் இருந்தவர்கள் கொதித்தெழுவார்கள்.. வேலை நிறுத்தம் செய்வார்கள்..
மன்னர்: அப்படியா..? அந்த உயர் ஜாதியினர் இப்போது என்ன வேலை செய்கிறார்கள்..? பண்ணையார்கள்.. அவர்கள் இப்போதும் ஒரு வேலையும் செய்வதில்லை.. வியாபாரிகள்.. அவர்களும் தொழிலாளியை வைத்துத்தான் வேலை செய்கிறார்கள்.. புரோகிதர்கள்.. இவர்கள் மக்கள் சேவையே செய்வது கிடையாது.. அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாட்டுக்கு என்ன கெடுதல்..? இதுவே.. தூய்மைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும்.? தெருப் பெருக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும்..?
நாடு நாறிப் போய் விடாதா..? விவசாயிகள் வேலை நிறுத்தம் செய்தால் நாமெல்லாம் பட்டினியில் செத்துப் போய்விடமாட்டோமா..? என்ன நீங்கள் மங்குனி அமைச்சர் போல் பேசுகிறீர்கள்..?
(அமைச்சர் தலையைச் சொறிந்து கொண்டு அசடு வழிவது)
மன்னர்: அமைச்சரே.. ஏற்றத் தாழ்வுகள் மனிதர்களிடம் உண்டு.. ஆனால் நிரந்தரமாகி விட முடியாது; கூடாது. சூழல், சிந்தனை, செயல்பாடுகள் அடிப்படையில் இருக்கத்தான் செய்யும், ஆனால், பிறப்பின் அடிப்படையில் இருக்கக் கூடாது.. ஆகவே நான் ஓர் உத்தரவு பிறப்பிக்கிறேன்.. பிறப்பின் அடிப்படையில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது ஒரு பெருங்குற்றம்.. தீண்டாமை ஒரு பாவச் செயல்.. தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்.. இப்படிப்பட்ட தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்த நாட்டில் கடுமையான தண்டனை அளிக்கும் படி உத்தரவிடுகிறேன்.. அவரவர் விரும்பும் மதங்களைப் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதே சமயம் கோயில்களில் ஒரு ஜாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்பதை மாற்றுகிறேன்.. தகுதியுள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உத்தரவிடுகிறேன்.. தாய்த் தமிழில் மந்திரம் ஓதத் தெரிந்த, மனிதனை மனிதனாய் மதிக்கத் தெரிந்த, சிறந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்கக்கூடியவர்கள் மட்டுமே இனிமேல் அர்ச்சகர்கள் ஆக முடியும்.. இனிமேல் இந்த நாட்டில் இருக்கும் அனைத்துக் கோயில்களும் சமத்துவக் கோயில்களே…
(முற்றும்…)