அம்முவுக்கு வயது 11 – குறுந்தொடர் – 5 : டாட்டா
அடுத்தநாள் அம்மு மீண்டும் லண்டனுக்குச் செல்ல வேண்டிய நாள்.
ஊருக்கு வந்தபோது இருந்ததுபோல் இல்லாமல் கொஞ்சம் உற்சாகத்துடனே இருந்தாள் அம்மு. ஊரையும், மக்களையும், சூழலையும் ஏற்றுக் கொண்ட மனநிலை நிறைவாக இருந்தது அவளிடம்.
பத்து நாள்களாகத் தாத்தா, பாட்டி, நண்பர்கள், ஏரி, வயல் எனச் சுற்றியவள் இன்று புறப்படுகிறாள். அனைவரும் பிரிவின் சோகத்தில் இருந்ததைப் போல் அம்மு இல்லை. ஏனென்றால் இனி அவள் ஆண்டுதோறும் இங்கு வரப்போவதாய் முடிவு எடுத்து இருக்கிறாள்.
அவளைப் பார்க்க வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் அவள் வாங்கி வைத்திருந்த பரிசுகளைத் தந்தாள். அதில் ஒவ்வொருத்தர் கூடவும் பழகும்போதும் அவர்களுக்கு என்னென்ன பிடித்திருந்ததாகத் தெரிந்து கொண்டாளோ அவற்றையே பரிசாக வைத்திருந்தாள்.
இறுதியாகத் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பரிசு கொடுத்தாள். அதில் புதிய செல்போன் ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் மகிழ்ந்திருந்த அவர்களிடம் சொன்னாள். ’இத்தனை நாள் நான் கற்றுக் கொடுத்தபடி இதில் வீடியோ கால் பேசலாம். மழை எப்போ வரும் எனத் தெரிந்து கொள்ளலாம். நானும் தினமும் உங்க கிட்டே போன் பேசுகிறேன்” எனக் கொஞ்சிப் பேசி, கட்டிப் பிடித்து முத்தங்கள் கொடுத்தாள் அம்மு.
அனைவரிடமும் விடை பெற்றுவிட்டு காரில் ஏற, கார் புறப்பட்டது. இம்முறை அப்பாவுடன் சேர்த்து அம்முவுக்கும் அனைவரும் வணக்கமும் டாட்டாவும் காட்டிக்கொண்டிருந்தனர். அம்முவும் அனைவருக்கும் டாட்டா காட்டிக்கொண்டே சென்றாள்.
காரின் பின்னால் ஓட நினைத்திருந்த அம்முவின் நண்பர்களுக்கு “இனிமேல் காரின் பின்னால் ஓட மாட்டோம்” என அவளிடம் சொல்லிய வாக்கு நினைவுக்கு வரவே அனைவரும் நின்ற இடத்தில் இருந்தே டாட்டா காட்டினர், அவள் கொடுத்த பரிசுப் பொருள்களைக் கையில் வைத்தபடி!
ஊரைத் தாண்டிய காரில் பயணித்துக் கொண்டிருந்த அம்மு, தனது வாழ்நாளில் மறக்கமுடியாத முதல் நிகழ்வாக இந்தப் பதினொன்றாம் வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நினைத்தாள். அவளின் பிறந்த நாள் வரும்போது லண்டனில் பள்ளி விடுமுறைக் காலம். அதனால் இனி வரும் அனைத்தும் ஆண்டுகளிலும் நாம் ஊரில்தான் பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறோம் என்று முடிவு செய்தாள். அப்பாவிடம் சொன்னால், நிச்சயம் மறுக்க மாட்டார் என்று நம்பினாள். இவை எல்லாவற்றையும் தன்னுடைய டைரியில் எழுதியபடியே பயணமானாள் அம்மு. அன்றைய நாளின் டைரிக் குறிப்பை இப்படி முடித்திருந்தாள் அம்மு.
’எங்களின் கார் ஊரைவிட்டு வெளியே வரும்போது தாத்தா சொல்லியது போலவே மழை பெய்ய விருக்கும் அறிகுறிகள் தெரியும் விதமாக, மண்வாசனை வீச சில நொடிகளில் தூறத்தொடங்கியது மெல்லிய மழை.’
லேண்டிங்
இவையனைத்தையும் சிந்தித்து முடிக்கும் போதே சென்னை விமானநிலையம் வந்திருந்தது. இந்த 7 ஆண்டுகளில் தொடர்ந்து அம்முவும் வந்திருந்தாலும் அம்மாவுடனோ அல்லது அப்பாவுடனோ அல்லது மூவருமோதான் சேர்ந்து வருவார்கள். ஆனால் முதல்முறையாகத் தனியாக வருவதால் அவளை அழைக்கக் கார் எடுத்துக் கொண்டு தாத்தாவும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் வந்து இருந்தனர் விமானநிலையத்திற்கு.
தாத்தாவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டாள். இப்போதெல்லாம் தாத்தா சட்டை போட்டுகொண்டேதான் இருக்கிறார். டி-சர்ட் கூடப் போடத் துவங்கி விட்டார்.
கார் ஊருக்குள் நுழைந்தது. முதல்முறை இருந்ததுபோல் இல்லை. நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தன. பெரியபெரிய வீடுகள் நிறைய கட்டியிருந்தனர்.
கண்மணி அக்கா கலெக்டர் தேர்வில் பாஸ் ஆகி கலெக்டருக்கான பயிற்சியில் இருந்தார். தமிழ்வாணன் அண்ணாவும் படிப்பு முடித்து அப்பாவின் உதவியால் லண்டனில் வேலை பார்க்கிறார். இன்னும் நிறையபேர் படித்துப் பெரிய வேலைகளில் இருந்தனர்.
இவையெல்லாமே அம்முவுக்கு ஏற்கனவே தெரிந்தவைதான்.
அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது மாலை நேரம் ஆகியிருந்தது. நூலகத்தில் நிறையப்பேர் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு கீழே வந்து கொண்டிருந்தார். பாட்டியைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிப்பிடித்துக் கொண்டாள் அம்மு.
(நிறைவு…)