ஊருக்குப் போய் வந்த கரடி – 3 : தேனடைக்கு ஆசைப்பட்டு ’தொபீல்’ னு விழுந்த கரடிக் குட்டி!
தள்ளு தள்ளு! வழி விடு! ஊருக்குப் போய் வந்த கரடி வந்தாச்சு. எல்லாரும் சத்தம் போடாம அமைதியா, அங்கங்க, உங்க வசதி போல உக்காந்துக்குங்க. அமைதி! அமைதி! செல்லக்குட்டி… நீ அந்த சாய்ஞ்சு கிடக்குற சவுக்கு மரத்து மேல ஏறி உக்காந்துக்கோ. ஊருக்குள்ள நீ எப்படி போனே..? என்னென்ன பாத்தே..? என்னென்ன தெரிஞ்சுகிட்டே..? எப்படி மறுபடி காட்டுக்கு வந்தே..? இப்படி எல்லா விவரத்தையும் விளக்கமா புட்டுப் புட்டு வையி.
ஏன்னா, இங்க இருக்கிற யாருமே இந்தக் காட்டைத் தாண்டி ஊருக்குள்ளே போனதே இல்லை. போக வாய்ப்பும் இல்லை. அப்படியே காட்டை விட்டுப் போனாலும் யாரும் திரும்பி காட்டுக்கு வந்ததும் இல்லை.
இதோ… இந்த நரிப் பய, ஊருக்குப் போறேன்னு போயி, காட்டை ஒட்டி இருக்கிற ரோட்டுக்குப் போயிட்டு வந்தே ரொம்ப அலட்டிக்கிட்டான்.
நீ எனனடான்னா பத்து நாளைக்கு முன்னாடி போயி ஊரு நாட்டை எல்லாம் சுத்திப் பாத்துட்டு வந்திருக்கே.
ராஜ மரியாதையோட மனிதர்களே உன்னை மறுபடியும் கொண்டு வந்து காட்டுல விட்டுட்டுப் போறாங்கன்னா நீ எவ்வளவு பெரிய ஆளா இருப்பே!” என்று குரங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போதே… இடைமறித்து,
“போதும் போதும் நீ பேசினது. ஊருக்குப் போய் வந்த கரடியைப் பேசச் சொல்லு. நீ உட்காரு” என்றது நரி.
“சரி சரி செல்லக் குட்டி நீ பேசுடா” என்றது அம்மா கரடி.
காற்றில் சாய்ந்து விழுந்து காய்ந்து கிடந்த சவுக்கு மரத்தின் மேல் ஏறி வசதியாக உட்கார்ந்தது கரடிக் குட்டி.
“நண்பர்களே! பத்து நாளைக்கு முன்ன நான் திடீர்னு காணாமப் போயிட்டேன்”
“அதுதான் எங்களுக்குத் தெரியுமே! உங்க அம்மா உன்னைத் தேடாத இடமில்லை. அதுவா முக்கியம்… நீ ஊருக்கு எப்படிப் போனே அதைச் சொல்லு?” என்றது பறக்கும் அணில்.
“சொல்றேன்… சொல்றேன்… நான் காணாமல் போன அன்னைக்கு காலையில அம்மாவும் நானும் மலைக்குப் பக்கத்துல இருக்குற புதர்ல கரையான் புத்து இருக்கிறதப் பார்த்துட்டோம். புத்தை இடிச்சு கரையானை எல்லாம் புடிச்சுத் தின்னோம்.
அதுக்குப் பிறகு அம்மா கரடி தூக்கம் வருதுன்னு சொல்லி, அங்க இருந்த ஒரு மரத்து மேல ஏறி தூங்கிடுச்சு. கீழே தனியா விளையாடிக்கிட்டு இருந்த எனக்கு தண்ணி தாகம் எடுத்துச்சு.”
“மலைக்குப் பக்கத்துல எங்கயுமே தண்ணி கிடையாதே” என்றது மான்குட்டி.
“ஆமா… ஆமா… அதனாலதான் நான் வேகமா தெற்கே இருக்கிற ஆத்துக்கு ஓடுனேன்.”
“ரொம்பத் தூரமாச்சே” என்றது அம்மா கரடி.
“தாகம் ரொம்ப அதிகமாயிடுச்சா… அதனால வேகமா ஓடிப்போனேன், ஓட ஓட தாகம் இன்னும் அதிகம் ஆயிடுச்சு. ஆத்தங்கரைக்குப் போய் சேர்ந்து தாகம் தீரத் தண்ணி குடிச்சேன். அப்போ ஓடுற தண்ணியில ஒரு மரத்துக் கிளையில தேனடை தொங்குறது அழகா தெரிஞ்சுது.
நிமிர்ந்து பார்த்தா ஆத்துக்கு அந்தப் பக்கம் உயரமான மரத்து மேல இருந்தது அந்தத் தேனடை.
அதை எப்படியாவது எடுத்துத் தின்னணும் போல தோணுச்சு. வாயிலே எச்சி வேற ஊற ஆரம்பிச்சிடுச்சு. அவ்வளவுதான், ஆத்துல இறங்கி நீந்தி அந்தப் பக்கம் போயிட்டேன்.”
“நான் உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்… ஆத்துல இறங்கி அந்தப் பக்கம் எல்லாம் போகக் கூடாதுன்னு. அம்மா பேச்சைக் கொஞ்சம் கூட மதிக்கிறதே இல்லை” என்று ஆதங்கப்பட்டது அம்மா கரடி.
“சரி விடு, எந்தப் புள்ளை தான் அம்மா அப்பா சொல்றதை அப்படியே கேட்டுக்குது. சின்னப் பிள்ளைங்க அப்படித்தான் இருக்கும்.” என்று ஆறுதல் சொன்னது அருகில் இருந்த காட்டுப்பன்றி.
“நீ பேசு செல்லக்குட்டி!. ஆத்துல நீந்தி அந்தப் பக்கம் போயிட்ட… தேனடையை எடுத்தியா இல்லையா? அதைச் சொல்லு” என்றது பறக்கும் அணில்.
“சொல்றேன். ஆத்தை நீந்திக் கடந்ததே ரொம்ப சோர்வா இருந்துது. ஆனாலும் தேனடை மேல உள்ள ஆசையாலே சிரமப்பட்டு மரத்து மேல ஏறிட்டேன்.
தேனடை தொங்குற கிளைக் கிட்டயும் போயிட்டேன். தேனடையை எடுக்க கையை நீட்டிச் சாயும்போது அந்தக் கிளை உடைஞ்சுடுச்சு. ‘தொபீல்’னு ஆத்துத் தண்ணியில விழுந்துட்டேன்.”
“அய்யையோ” என அம்மா கரடி முதல் அனைத்து விலங்குகளும் அதையே சொல்லின.
“அப்புறம் என்ன ஆச்சு?” ஆர்வத்தோடு கேட்டது முயல்.
“என்ன ஆச்சுன்னு எனக்கு ஒண்ணுமே தெரியல. ஓட்டம், நடை, தாகம், நீச்சல்னு போன நான் மயக்கமாயிட்டேன்.”
“அப்புறம்!” குரங்கு வியப்பா கேட்டது.
“அப்புறம் தண்ணியில விழுந்த நான் மயக்கமானதுனால ஆத்துத் தண்ணி போற போக்குலேயே ரொம்ப தூரம் போயிட்டேன்.
நான் மயக்கம் தெளிஞ்சு பார்க்கும் போது ஒரு கோயில் பக்கம் ஒட்டி இருக்கிற ஆத்தங்கரைப் படிக்கட்டு கிட்ட இருந்தேன்.”
“கோயிலா! அப்படின்னா?” ஆச்சரியத்தோடு கேட்டது பறக்கும் அணில்.
(பயணம் தொடரும்)