ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்
“The Lady of the Lamp” (1820-1910)
“ஓளிவிளக்கு ஏந்திய மங்கை”
– சாரதாமணி ஆசான்
அடல்வேல் ஆடவர்க்கன்றி மகளிர்க்கும் வீரம் உண்டு என்று சான்றுகளுடன் விளக்கின சங்க நூல்கள். அவ்வாறு மகளிரின் வீரம் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் மூதின் முல்லை என்று பெயரிடப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க நூல்கள் காட்டிச் சென்ற வீரம் சார்ந்த பெண்மணிகளுக்கு நிகராக வாழ்ந்து காட்டியவர் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் [Florence Nightingale] என்ற வீரமங்கை. ஒளிவிளக்கு ஏந்திய மங்கை என்று எல்லோராலும் விரும்பி அழைக்கப்பட்ட நைட்டிங்கேல் 12 வயதிலேயே மனித நேயம் மிக்கவராய்த் திகழ்ந்தார். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்பது வள்ளுவர் கருத்து. தன்னை ஒத்த மக்களின் துன்பத்திலும், இன்பத்திலும் பங்கு கொண்டு வாழ்வதுதான் உயிர் வாழ்தலின் மாண்பு. அத்தகைய மாண்பற்றவர் எத்தகையோர் எனினும் அவர்கள் செத்தாருள் ஒருவராக மதிக்கப்படுவர் என்பது வள்ளுவர் காட்டிய நெறி. அந்த நெறியைக் கடைப்பிடித்து, தனக்கு வந்த தடைகளை எல்லாம் தகர்த்து சமுதாயப் பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அருள் நங்கை ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். இவரது தன்னலம் கடந்த தொண்டு உலகில் எல்லோராலும் வியந்து போற்றப்படுகிறது – பின்பற்றப்படுகிறது.
பிறப்பும் கல்வியும்:
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் இத்தாலி நாட்டில் ஃபிளாரன்ஸ் எனும் இடத்தில் 1820ஆம் ஆண்டு மே 12ஆம் நாள் ஆங்கில நாட்டுத் தம்பதியர்க்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் நைட்டிங்கேல் வசதிமிக்க நிலக்கிழார். அவர் தனது மகளை, மகனாக – நண்பனாக – தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். அத்துடன் நல்ல முறையில் கல்விகற்க வழி வகுத்தார். கிரேக்கம், இலத்தீன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய மொழிகளையும் வரலாறு, தத்துவம், கணிதம் ஆகிய துறைகளையும் முறையாக கற்றுக் கொடுத்தார். இக்கல்வி அறிவுதான் பிற்காலத்தில் உலகமே வியக்கும் ஆற்றலையும் – தகுதியையும் இவருக்கு அளித்தது எனலாம். இவரது தாயார் பேன்னி நைட்டிங்கேல் (Fanny Nightingale) மேல்தட்டு மக்களுக்கே உரிய சிந்தனை உடையவர். குறித்த காலத்தில் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.
ஆனால் நைட்டிங்கேல் பொதுநலத்தில் நாட்டமுடையவராய் விளங்கியதால் திருமணத்திற்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை. தன் வாழ்வு பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்று விரும்பியதால் மகளிர்க்கே உரிய செவிலியர் (Nurse) பணிக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள விரும்புவதாகப் பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுவயது முதலே செவிலியர் பணிக்கு உகந்த புத்தகங்களையே விரும்பிப் படித்தார். தனது முழு நேரத்தையும் இலண்டன் மாநகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று நோயுற்ற மக்களைக் கண்காணிப்பதில் செலவிட்டார்.
இறுதியில் தனது தந்தையின் துணையுடன் ஜெர்மன் நாட்டில் உள்ள கெய்சர்வெர்த் [Kaiserwerth] மருத்துவமனையில் செவிலியர்க்கான பட்டப்படிப்பைப் படித்து முடித்தார். மிகச் சிறந்த மாணவியாகத் தேர்ச்சி பெற்ற இவர் மீண்டும் இலண்டன் திரும்பினார். ஒரு மருத்துவமனையையே நடத்தும் அளவு தகுதி பெற்று, பின் தன் விருப்பமான செவிலியர் பணியில் அமர்ந்தார். ஒரு தாதியாக (Nurse) முறைப்படி இவர் பொறுப்பேற்ற ஆண்டு 1851; அப்போது இவருக்கு வயது 31.
கிரிமியாப் போரும் போர் முனையில் இவர் காட்டிய துணிவும்:
1853ஆம் ஆண்டில் அய்ரோப்பாக் கண்டத்தில் இரஷ்யா ஓர் ஆதிக்க சக்தியாக வலம்வரத் துவங்கியது. 1853இல் இரஷ்யா துருக்கியின் மீது போர் தொடுத்தது. இதை அறிந்த பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டினர் துருக்கிக்குத் துணை போயினர். இந்த முரண்பாடு கிரிமியாப் போராக மூண்டது. போர் மேகங்கள் நாடுகளைச் சூழ்ந்து கொள்ளும்போது போர்முனையில் போராடும் வீரர்களும் – அவர்களைச் சார்ந்து வாழும் பொதுமக்களும் எல்லையிலாத் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் அல்லலுற்று ஆற்றாது அழும் கண்ணீர் பதவி வெறிகொண்டோர் நெஞ்சங்களைத் தொடுவதில்லை.
இந்தக் கிரிமியாப் போரின்போது ஆங்கில நாட்டுப் படை வீரர்கள் 8,000 பேர் துருக்கியில், இன்று உக்ரேன் (Ukraine) என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஸ்கூடாரி (Scutari) இராணுவ மருத்துவமனையில் [Army Hospital} காலரா மற்றும் மலேரியா என்ற நோய்களால் தாக்கப்பட்டு எல்லையிலாத் துன்பங்களைத் தாங்கி நின்றனர். பெரும்பாலோர் இறக்கும் தருவாயில் இருந்தனர். அடிபட்ட வீரர்கள் சேர்க்கப்பட்ட இராணுவ மருத்துவமனையில் போதுமான வசதிகள் எதுவும் இல்லை. கெட்டுப்போன ரொட்டியும், தரமற்ற பாலும், சுகாதாரமற்ற சூழலும், கவனிப்பார் அற்ற நிலையும் நிலவியது. இந்த நிலையை நேரில் கண்ட ‘THE TIMES’ என்ற இதழின் நிருபர் இச்செய்தியைத் தமது இதழில் மிக உருக்கமாக எழுதி ஆங்கில நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இத்தகைய தருணத்தில் முழுமூச்சுடன் செயல்படத் துணிந்தார் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
அஞ்சாநெஞ்சம் கொண்ட இவர் போர்முனைக்குச் சென்றார். தம்முடன் 38 செவிலியர்களை உடன் அழைத்துச் சென்றார். உயிருக்குப் போராடும் வீரர்களில் 2000 பேரை நேரடியாகக் கண்டு மருத்துவ உதவிகளைச் செய்தார். அடிபட்ட வீரர்கள் அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த இறுக்கமான உடைகளைக் களைந்தார். மாற்று உடைகள் அணிவித்தார். தூய காற்றும், தூய உணவும் கிடைக்க வழிவகுத்தார். ஒவ்வொரு வீரனைப் பற்றிய விவரங்களையும் முறையாகக் குறிப்பெடுத்து அனைத்து விவரங்களையும் வரிசைப்படுத்தினார். தாம் குறித்து வைத்த மருத்துவச் செய்திகளை, போர் வீரர்களின் உடல்நலம் பற்றிய செய்திகளைக் கடிதங்கள் மூலம் அவ்வீரர்களின் குடும்பத்தார்க்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிவித்தார். ஏற்கெனவே போர்முனையில் செயல்படாமல் இருந்த அதிகாரிகளின் பெரும் எதிர்ப்புக்கு இடையில் 20 மணிநேரம் உழைத்தார். போரில் 42 சதவீதம் பேர் இறக்கும் இக்கட்டான சூழலிலிருந்து இறப்பு விகிதத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். இதனால் ஆங்கில நாட்டிற்கும் மக்களுக்கும் தக்க நேரத்தில் தனித்தன்மையுடனும், தன்னடக்கத்துடனும், தளரா முயற்சியுடனும் உழைத்து நீடித்த பயனைத் தேடித் தந்தார். இவர் போர் முனையிலிருந்து எழுதிய கடிதங்கள் 14,000. இவை அனைத்தும் இன்று வரலாற்றுச் சான்றுகளாக செவிலியர் பணியின் மேன்மையை உலகுக்குப் பறைசாற்றுகின்றன. புள்ளி விவரம் (Statistical data) சார்ந்த இவரது செயல்பாடுகள் விக்டோரியாப் பேரரசியாலேயே போற்றப்பட்டன. போரில் அடிபட்டவர்களைக் காண முதலில் இவர் குதிரைமீது சவாரி செய்தார். பின்னர் இவர் கோவேறுக் கழுதை பூட்டிய வண்டியில் பிரயாணம் செய்தார். அப்போது விபத்தில் சிக்கிய இவர் பல காயங்களுடன் தப்பினார்; எனினும் தம் பணியில் உறுதியுடன் நின்றார்.
தன்னலமற்ற சேவையும் அதனால் விளைந்த பயனும்:
1855ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் கிரிமியாப் போரில் இவர் ஆற்றிய பணி ஆங்கில நாட்டு மக்களாலும், பிரபுக்களாலும், அங்கீகரிக்கப்பட்டது. போரின் முடிவில் தாய்நாடு திரும்பிய இவர் தேசத்தின் வீரமங்கை எனப் புகழப்பட்டார். செவிலியர் பணியில் சேர்வோர்க்குப் பயிற்சியளிக்க நைட்டிங்கேல் பெயரில் நிதி திரட்டப்பட்டது. அத்தொகை 59,000 பவுண்டு வரை வளர்ந்தது. அத்தொகையைக் கொண்டு, 1860இல் நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளி துவக்கப்பட்டது. அப்பள்ளி செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் செயல்பட்டது. இங்கு பயிற்சி பெற்ற செவிலியர் முதன்முதல் லிவர்பூல் பணிமனையில் அமைந்த இலவச மருத்துவமனையில் பணியாற்றினர். ஃபிளாரன்ஸ் தனது சொந்த முயற்சியாலும் தொடர் பிரச்சாரங்களாலும் மேலும் நிதியைத் திரட்டி ராயல் பக்கிங்காம் ஷையர் மருத்துவமனையை வளப்படுத்தினார்.
1860ஆம் ஆண்டில் இவர் செவிலியர் பற்றிய குறிப்புகள் [Notes on Nursing] என்ற 136 பக்க அளவிலான குறுநூலை வெளியிட்டார். இந்நூல் அதிக அளவில் விற்கப்பட்டது. செவிலியர் பயிற்சி பெற்ற அனைவராலும் மிகச் சிறந்த நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நைட்டிங்கேல் தனது வாழ்நாளின் மீதி நாட்களை செவிலியர் பணியை மேலும் மேலும் முன்னேற்றவும் உயர்த்தவும் ஆன வழிவகைகளைக் காணவும் அதனை நடைமுறைப்படுத்தவும் செலவிட்டார். 1883ஆம் ஆண்டு விக்டோரியாப் பேரரசியால் அரசின் செஞ்சிலுவைப் பதக்கம் பெற்றார். எதிர்காலத்தில் ‘Red Cross’ மற்றும் ‘Red Cresent’ கழகங்கள் துவங்கப்படுவதற்கு இவரது சேவையே வித்திட்டது. இவரது மருத்துவ சேவைகள் உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நைட்டிங்கேல் இந்தியாவிற்கு வரும் வாய்ப்பைப் பெறவில்லை. எனினும் 1890ஆம் ஆண்டு இந்திய கிராமங்களின் சுகாதாரம் பற்றிய கட்டுரையை இவர் மனமுவந்து வெளியிட்டார். அக்கட்டுரை இந்திய நாட்டு நலனில் இவருக்கிருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.
இவரது குறிக்கோள் வாழ்வும் அது பதிவு செய்த நிகழ்வும்:
பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும், செயல்படவும் உரிமையும் திறமையும் பெற்றவர்கள். எனவே, பெண்களின் முன்னேற்றத்திற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்பதே தம் குறிக்கோள் என்பதை நிலைநாட்டினார்.
தம் வாழ்வு பயனுள்ளதாக விளங்க பல்லாற்றானும் முறைப்படித் திட்டமிட்டார். மனித நேயமே இவரது பண்பு. நீடிய பிணியால் வாடிய மக்களுக்கு உளமார உதவினார். தாம் விரும்பிய செவிலியர் பணிக்கு உரிய பட்டங்களை முறையான கல்வியால் பெற்றார்.
“It is not the hard work but the smart-work that will help us in achieving the goal”
என்பதே இவர் தம் வாழ்வில் நமக்குக் கற்றுத் தந்த பாடம். திட்டமிட்ட வாழ்வே திகட்டாத வாழ்வு என்பது இவரது தாரக மந்திரம்.
முன்னேறும் திறம் வேண்டும்;
மொய்ம் பேறும் தோள்கள் வேண்டும்;
தன்மானம் நாம் பெறவேண்டும்
வேறென்ன வேண்டும்? என்ற பெரியார் காட்டிய கொள்கைகள் இவ்வம்மையார் வாழ்க்கையின் மூலம் விளக்கம் பெறுகின்றன.
தம் உழைப்பிற்கான பாராட்டுதலையோ புகழ்ச்சியையோ இவர் விரும்பியதில்லை. அமைதியான வழியில், அறவழியில் ஆரவாரம் இன்றி கடமையே தம் மூச்சாகச் செயல்பட்டவர். அரசியல் சார்ந்தோ – அதிகாரம் சார்ந்தோ இவர் இயங்கவில்லை.
பொதுநலம் சார்ந்த – மாந்தநேயம் சார்ந்த இயல்பான இவரது சேவை இன்று உலகளவில் வேர் ஊன்றி ஆல்போல் தழைத்துள்ளது. மே 12ஆம் நாள், அதாவது இவர் பிறந்த நாள் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதுவே இவரது சேவைக்குக் கிடைத்த மாசற்ற பரிசு. இலண்டன் மாநகரில் இவரது பெயரில் அமைந்த மியூசியம் இன்றும் அவரது புகழை அமைதியாகப் பறைசாற்றி வருகிறது.
இவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்றைய சமுதாயத்திற்கு எழில் கூட்டினார். மக்களைத் துன்பத்திலிருந்து காக்கும் செவிலியர் பணி ஓர் ஒப்பற்ற கலை எனவும் – அக்கலை எல்லாவிதமான கவின் கலைகளிலெல்லாம் உயர்ந்தது,
சிறந்தது எனவும் ஃபிளாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இக்கவின் கலையை இவர் வழிநின்று வளர்ப்பதும் – மனித சமுதாயத்தை நோயின் பிடியிலிருந்து பாதுகாப்பதும் இன்றைய இளைய சமுதாயத்தின் பணியாகும்.