உலகு சூழ் ஆழி – 9
– மு.நீ.சிவராசன்
இந்தியப் பெருங்கடல் – 2
மாலத்தீவுகள் (Maldives):
இலங்கைக்குத் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு சிறிய குடியரசு ஆகும். இங்கு 1190 சிறிய பவளத்தீவுகள் உள்ளன. அவற்றில் 202இல் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் இங்கு 2300 ஆண்டுகளாக வாழ்கின்றனர். இங்கு முக்கியத் தொழில் மீன்பிடித்தலும், தென்னை வளர்த்தலும். பெரிய தீவுகளில் சுற்றுலாத்துறை மூலம் மிகுந்த வருமானம் வருகின்றது. இந்தியப் பெருங்கடலிலுள்ள பல பவளத்தீவுகள் கடல் மட்டத்திற்கு சராசரி 6 அடி உயரமே உள்ளன. பருவமழை காலங்களில் எழும் புயலால், அத்தீவுகளின் மீது அலைகள் பாய்ந்து சேதத்தை உண்டுபண்ணும். அதைத் தடுக்க, அத்தீவிலுள்ள மக்கள் தீவைச் சுற்றி, பாதுகாப்பிற்காக கனமான சுவர்களை எழுப்பியுள்ளனர்.
சுற்றுலா:
மாலத் தீவில் உள்ளோர் தங்கள் ஊரில் யாரையும் அனுமதிப்பதற்கு விரும்புவதில்லை. எனவே, பல பெரிய உணவு விடுதிகள், மக்கள் வாழாத தீவுகளில் சுற்றுலா வருவோருக்காகவே கட்டப்பட்டுள்ளன. இத்தீவுகளில் மக்கள் நீரில் பாய்ந்து பவளப்பாறைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
மாலத்தீவுகள் சில செய்திகள்:
தலைநகரம் : மாலே
பரப்பு : 300 ச.கி.மீ.
மக்கள் தொகை : 3 லட்சம்
மொழி : டிவ்ச்சி, சிங்களம், தமிழ்
மதம் : முஸ்லிம்
நாணயம் : ரூஃபியா
மொரீஷியஸ் தீவுகள்:
எரிமலை உச்சிகளைக் கொண்ட குன்றுகள் நிறைந்த தீவுகள் இவை. ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரையிலிருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தீவு நெருக்கமான மக்கள்தொகை கொண்டது. பகுதி மக்களுக்கு மேல் இந்து – இந்தியர். மற்றவர்கள் சீனர்களும், சிரியோலர்களும்.
தலைநகரம் : லூயிஸ் துறைமுகம்
பரப்பு : 1860 ச. கிலோமீட்டர்
மக்கள் தொகை : 12 இலட்சம்
மொழிகள் : ஆங்கிலம், பிரெஞ்சு, சிரியோல், இந்தி, போஜ்புரி, சீனம்
மதம் : இந்து, கிறித்துவம், முஸ்லிம்
நாணயம் : ரூபாய்
மொரீஷியசின் முக்கியத் தொழில் கரும்பு பயிரிடுதல், தேயிலை வளர்த்தல். இத்தீவுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் 30 விழுக்காடு தேயிலையும் சர்க்கரையும் ஆகும். ஆடைத் தயாரித்தல், சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருகின்றன.
கல்வி :
கற்றவர்கள் நிறைந்த இந்நாடு விரைவிலேயே தன்னிறைவு பெற்ற பொருளாதாரப் பகுதி ஆகும். 1965இல் மொரிஷியஸ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இங்கு 1800 மாணவர்கள் பயிலுகின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியும், கரும்பு உற்பத்தியில் தொழில்நுட்ப ஆராய்ச்சியும் நடைபெறுகின்றன.