நாணயம்
நான் ஒரு கதை சொல்லப் போறேன். திருநெல்வேலி மாவட்டத்தில, ஆலங்குளம் என்ற ஊர்ல விவசாயக் கூலி செய்யற ஏழைப் பெற்றோருக்கு மூனாவதா பிறந்தவரைப் பத்திதான் இந்தக் கதை. அவரு பேரு, தேவபாலன்.
அஞ்சாம் வகுப்போட அவன் படிப்பு முடிஞ்சு போச்சு. ஆனா, அவனோட பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியரு என்ன பண்ணினாருன்னா, சுற்றுலா போகும்போது பள்ளிக்கூடத்துக்கே வராத தேவபாலனையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அவங்க சுற்றுலா போன முதல் இடமான வேளாங்கன்னியிலேயே அவனுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைச்சிருச்சு. அந்த அனுபவம் அவனுடைய வாழ்க்கைப் பாதையையே நிர்ணயிக்கச் கூடியதா மாறிடுச்சு.
மாணவர்களோட மாணவனா தேவபாலனும் வேளாங்கன்னிய சுத்திப் பார்த்துட்டு இருந்தானா? உங்களுக்குத் தெரியும், வேளாங்கன்னிக்கு வெளிநாட்டுல இருந்தெல்லாம் வந்து போவாங்கன்னு. அப்படி ஒரு வெளிநாட்டுக்காரர் தேவபாலனுக்கு எதிர்ல நடந்து வந்துட்டு இருந்தார். அப்போ, அவரு தன் கால் சட்டைப் பையில இருந்து எதையோ எடுத்தாரு. பாக்கெட்டுல இருந்து எதுவோ அவருக்குத் தெரியாம கீழே விழுந்துடுச்சு. தேவபாலனுக்கு மனசெல்லாம் குறுகுறுன்னு ஆயிடுச்சு. அவன் என்ன பண்ணான் தெரியுமா? ஓ….டிப்போயி, கீழே விழுந்ததைக் கையில எடுத்துப் பார்த்தான். அது ஒரு நாணயம். பளப்பளப்பா இருந்துச்சு. வெளிநாட்டு நாணயம், அதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனா, ரொம்ப வித்தியாசமா இருக்குதுன்னு மட்டும் தெரியும்.
அவன் கண்ணு ரெண்டும் தெறிக்க விழுந்துடுற அளவுக்கு ஆச்சர்யத்தோட அதையே பார்த்தான். இதெல்லாம் கொஞ்ச நேரம்தான். உடனே, வேகமா ஓ….டிப்போய் அந்த வெளிநாட்டுக்காரர் முன்னால மூச்சு வாங்க நின்னு, நாணயம் இருந்த கைய அவரு முன்னால நீட்டினான். அவருக்கு, இது தன்னோடதுதான்னு முதல்ல தெரியல. இவனுக்கு வேற இங்கிலீஷ் வராதா, அந்த சூழ்நிலையில் அவரு தேவபாலனைப் பிச்சைக்காரர்னு நினைச்சு அலட்சியப்படுத் துனாரு. இவன் விடாப்பிடியா பேசத்தான் முடியாதுன்னு, முடிஞ்ச வரைக்கும் சைகையிலேயே விசயத்தைப் புரிய வைக்க முயற்சி பண்ணினான். அவரும் புரிஞ்சுக்கிட்டாரு. சைகைதான் மனுசனோட ஆதி மொழியாச்சே! அவரு என்ன பண்ணாரு தெரியுமா? இவனோட நேர்மையைப் பாராட்டும் விதமா, அவன் கையில் இருந்த நாணயத்தை எடுத்து அதை மறுபடியும் அவன் கையிலேயே வச்சு, நீயே வச்சுக்கன்னு சைகையிலேயே சொல்லிட்டாரு. அந்த சைகை மொழியும் இவனுக்குப் பளிச்சுன்னு புரிஞ்சு போச்சு. அப்பப்பா…. இவனுக்கு ஆனந்தம்னா ஆனந்தம் அப்படி ஒரு ஆனந்தம். அந்த ஆனந்தத்த யார்கிட்டயாவது சொல்லணும்னு நினைச்சு, நேரா அவன் தன்னை இந்த சுற்றுலாவுக்குக் கூட்டிட்டு வந்த தலைமை ஆசிரியர் செல்விகிட்ட போனான். அவங்களும், அதை வாங்கிப் பாத்துட்டு, ரொம்ப ஆச்சர்யப்பட்டு இது வெளிநாட்டுக்காரங்க நாணயம். மதிப்பு மிகுந்தது. இத செலவழிச்சிடக்கூடாது. பத்திரமா வச்சுக்க. இதுபோல வேற கிடைச்சாலும் சேர்த்து வைச்சுக்கனு சொல்லிட்டாங்க.
இந்த ஒரே ஒரு சம்பவம், தேவபாலனுக்கு அவன் மேலேயே ஒரு மதிப்ப உருவாக்கிடுச்சு. அப்ப அவனுக்கு வயசு பத்து. இந்தச் சம்பவம், அவனுக்குள்ள நிறைய்ய சிந்தனைகளை அந்தப் பிஞ்சு வயசுலேயே உண்டாக்கிடுச்சு. நமக்குத் தெரியாத விசயங்கள், பள்ளிக்கூடத்துல கிடைக்காத அனுபவங்கள் நிறைய்ய இருக்கும் போலிருக்கு. அத நம்ம பயன்படுத்திக்கணும். இப்போதைக்கு இதைப்போல வித்தியாசமான நாணயங்களைச் சேர்க்க வேண்டியதுதான்னு ஒரு முடிவுக்கு வந்துட்டான்.
தன் வீட்டுல, அக்கம் பக்கத்துல, பெட்டிக் கடைகள்ல, அப்படி இப்படின்னு தான் சந்திக்கிறவங்க கிட்டயெல்லாம் இது பத்தி சொல்லி ரொம்ப வினயமா, இந்த மாதிரி வித்தியாசமான நாணயம் உங்க கைக்கு வந்தா, தயவு செய்து எனக்காக எடுத்து வையிங்க. அதுக்கான மதிப்புக்குக் காசு குடுத்துட்டு வாங்கிக்கிறேன் அப்படின்னு சொல்லி வச்சான்.
தேவபாலனோட விடாமுயற்சிக்கு மெல்ல மெல்ல பலன் ஏற்பட்டுச்சு. இதுக்காக, ஆலங்குளத்திலேயே ஒரு லேத் பட்டறையில படிக்க வேண்டிய வயசுல வேலை செய்ய வேண்டியதாயிடுச்சு. நாணயங்களை வாங்கறதுக்குக் காசு வேணுமில்ல. குருவி நெல்லு சேர்க்கற மாதிரி மெல்ல மெல்ல சேர்த்ததுல, ஒரு கட்டத்துல நெல்லை மாவட்டத்திலேயே நாணயம் சேகரிக்கறதுல எட்டாவது இடத்துக்கு வந்துட்டாரு. இப்ப, அவருக்கு வயது 21 ஆயிடுச்சு. சுமார் பதினொரு வருசமா நாணயம் சேகரிச்சிருக்காரு. இன்னமும் சேகரிச்சிக்கிட்டுத்தான் இருக்காரு. இப்ப தேவபாலனுக்குப் பல பேரோட நல்ல தொடர்பு இருக்கு.
தேவபாலன் தன்னோட சொந்தக்காரங்க திருமணத்திற்காக சென்னை வந்திருந்தாரு. வந்த இடத்துல, நெல்லை மாவட்டத்துக்காரர் ஒருவரோட அறிமுகம் உண்டாகி, அவர் மூலமா சென்னையிலேயே வேலையும் கிடைச்சு, சென்னைக்காரரா மாறி, அப்பப்போ சொந்த ஊர் ஆலங்குளத்துக்கும் போய் வந்துட்டு இருக்காரு.
அப்படி இருக்கும்போது ஒரு நாள்… சென்ற ஆண்டுதான் அதாவது, 2011ஆம் ஆண்டு ஒரு நாள்… இரட்டைமலை சீனிவாசனோட பிறந்த நாள். அந்த நேரத்தில தேவபாலன் சென்னை ஓட்டேரி சுடுகாடு பக்கமா வேலைக்கு வந்துக்கிட்டிருந்தார். அப்ப வேளாங்கன்னியில ஒரு வெளிநாட்டுக்காரரால முதன்முதலா நாணயத்தப் பாத்தாரில்ல, அதே மாதிரி இங்கும் பார்க்க நேர்ந்துச்சு. இந்த முறை உள்நாட்டுக்காரர்தான். அவரு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த டேவிட்டுனு ஒருத்தரு. ஆனா, இந்தமுறை நாணயத்தைத் தவற விட்டவரே கவனிச்சு குனிந்து எடுத்துட்டுப் போயிட்டாரு. ஆனா, தூரத்தில இருந்து பார்த்த அந்த நாணயத்தைப் பக்கத்துல வச்சுப் பார்த்துடனும்னு தேவபாலன் முயற்சி செஞ்சாரு. சொன்னா உங்களால நம்ப முடியாது. இரண்டு மாதமா முயற்சி செஞ்சாரு. கடைசியா பார்த்துட்டாரு. இந்த நாணயம் சேகரிக்கறதுல அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. இப்ப தன்னோட வருமானத்தில ஆயிரம் ரூபாயை மட்டும் தனக்குன்னு சேமிச்சு வச்சுக்கிட்டு, மீதியைப் பெற்றவர்களுக்கு அனுப்பிச்சுட்டு இருக்கார். நாணயங்களைச் சேகரிக்கிறதுக்காக தனியா கூடுதலா வேலை (ஷீஸ்மீக்ஷீ வீனீமீ) செஞ்சு, அந்தத் தொகை மூலமா நாணயங்களை வாங்கி சேர்த்துட்டு வர்றாரு.
அது மட்டுமல்ல, வேலை நேரம் போக, சந்திக்கிறவர்களிடமெல்லாம் நாணய சேகரிப்பு பற்றிய தகவல்களைப் பரிமாறி, நம்ம தாத்தன் பூட்டன் காலத்துல இருந்த நாணயங்கள் எப்படி இருந்துச்சுன்னு இந்தத் தலைமுறைக்குத் தெரியணும். நாம நேத்து எப்படி இருந்தோங்கிறது நாளைக்கு நமது சந்ததிக்குத் தெரியணும். இல்லேன்னா அவங்க தடம் மாறிப் போயிடுவாங்க. ஆகவே, நீங்களும் சேகரிச்சு வையிங்க. இல்லேன்னா என்ன மாதிரி நபர்களுக்கு உதவுங்கள்னு பேச்சு மூச்சு எல்லாமே நாணயமாகவே மாறிப் போயிட்டார். அவ்வளவுதான் கதை. ஆனா, இது கதை இல்ல, நிஜம். இந்தக் கதையின் நாயகனை நீங்கள்கூட சந்திக்கலாம். எங்கே என்கிறீர்களா? சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரில் பேக்கிங் (packing) பிரிவில்தான் தேவபாலன் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
– உடுமலை வடிவேல்