செயற்கை மூளை செய்தால் கணினி சிந்திக்குமா?
ஒரு மனிதன் சிந்திக்கவும் அவன் நுண்ணறிவுடன் இருப்பதற்கும் மிக முக்கிய காரணம் அவன் மூளையும் அதில் இருக்கும் நரம்பு அமைப்புகளும் மூளை எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டு அதை வைத்து கணினியில் ஓர் அமைப்பை உருவாக்கினால் ஒருவேளை கணினிகள் சிந்திக்கும் அல்லவா?
இந்த அணுகுமுறையின் படி முதலில் நரம்பியல் நிபுணர்களை வைத்து மூளை எப்படி இயங்குகிறது என்பதை கணினி அறிஞர்கள் கற்கத் தொடங்கினார்கள்.
நரம்பியல் வலை அமைப்பு:
நாம் வாழ்வது, சாப்பிடுவது, நடப்பது, சிந்திப்பது, காதலிப்பது, கணிதமிடுவது, விண்வெளியை நோக்கிப் பயணம் செய்வது என மனிதனின் செய்கைகள் அனைத்திற்கும் காரணம் மூளையில் இருக்கும் நியூரான்களின் வலை அமைப்புதான்.
மூளை, முழுக்க முழுக்க இந்த நரம்பு செல்களான நியூரான்களால் உருவானது. ஒரு நியூரானுக்கும் இன்னொரு நியூரானுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இப்படியாகப் பல லட்சம் நியூரான்கள் மூளைக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி வைத்துள்ளன. நம் செய்கை, சிந்தித்தல், தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வது என அனைத்தும் இந்த நியூரான்களின் வலைப்பின்னல்களால்தான்.
ஒரு சராசரி மனித மூளையில் மட்டும் பத்தாயிரம் கோடி நியூரான் செல்கள் இருக்கும். இந்த நியூரான்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகள் மட்டுமே சுமார் ஒரு கோடியே கோடி இருக்கும் (1,000,000,000,000,000). நியூரான்கள் தமக்குள் மின்சாரச் சிக்னல்கள் மூலமாகத்தான் தொடர்பு கொள்ளும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது அல்லது ஒரு செயலைச் செய்வது என்பது சில ஆயிரம் நியூரான்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் தமக்குள் மின் உயிரியல் சிக்னல்கள் மூலம் தொடர்பு கொள்வதால் நிகழ்கிறது. இதை ஆங்கிலத்தில் நியூரல் ஃபைரிங் (Neural firing) என அழைப்பார்கள்.
இந்த நரம்பு செல்களின் வலை அமைப்பை அடிப்படையாகக் கொண்டுதான் 1940களில் நரம்பியல் அறிஞர்களான பிட்ஸ் மற்றும் மெக்குலா ஆகியோர் செயற்கை நரம்பியல் வலை அமைப்பு ஒன்றைக் கணித ரீதியாக உருவாக்கி காட்டினார்கள்.
1950களில் இந்த செயற்கை நரம்பியல் வலைப் பின்னலையே கணினி நிரல்களாக ஏன் மாற்றக்கூடாது என யோசிக்கத் தொடங்கினார்கள். ஒருவேளை மூளையின் நரம்பியல் அமைப்பை அல்காரிதங்களாக மாற்றினால் கணினிகளுக்குச் சிந்திக்கும் திறமை வரலாம் என ஒரு கருத்தை முன் வைத்தார்கள்.
1956 இல் பிராங்க் ரோசன்ப்லாட் எனும் அறிஞர் பெர்சப்ட்ரான் (Perceptron) என்னும் கணினி நிரலை உருவாக்கினார். இது முழுக்க முழுக்க செயற்கை நரம்பியல் வலை பின்னும் அமைப்பை (Artificial Neural Network) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி நிரல்.
மென்பொருளைக் கொண்டு கணினிகள் கற்றுக்கொள்ள முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்த்தார்கள். அந்தக் காலத்து கணினித் திரையில் உள்ள பிக்சல்களை நரம்பியல் செல்களாக யூகித்துக் கொண்டு ஒவ்வொரு செல்லுக்கும் மற்றொரு செல்லுடனான வலை பின்னல் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் கணினிகளுக்கு வடிவங்களைக் கற்றுக் கொடுக்க முடியுமா எனப் பார்த்தார்கள். வடிவங்களை ஓரளவு கணினிகள் கற்றுக் கொண்டால் அங்கிருந்து ஆங்கில எழுத்துக்களையும் எண்களையும் கற்றுக் கொடுத்து விடலாம் என்பது அவர்களின் கணிப்பு.
ஆனால் உண்மையில் செயற்கை நரம்பியல் வலை அமைப்பு நிரல்கள் கணினிகளுக்கு பெரிதாக எதையும் கற்றுக் கொடுக்கவில்லை.
மார்வின் மின்ஸ்கி அவருடைய நண்பருடன் சேர்ந்து பெர்சப்ட்ரான் எனும் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் கருதுகோல் ஒருநாளும் செயற்கை நுண்ணறிவுக்கு உதவாது என்பதைப் பற்றி தன்னுடைய வாதங்களை முன் வைத்தார். இதனால் செயற்கை நரம்பியல் வலைப் பின்னல்களுக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுத் துறையின் சில அடிப்படைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தெரிந்து கொள்வதின் மூலம் தான் நமக்கு செயற்கை நுண்ணறிவின் பயன் என்ன என்பது புரியும்.
(Frank Rosenblatt)