ஊருக்குப் போய் வந்த கரடி – 4 : ”கடவுள் சாப்பிடல; நான் சாப்பிட்டுட்டேன்!”
கோயிலா… அப்படின்னா?’’
ஆச்சரியத்தோடு கேட்டது பறக்கும் அணில்.
“கோயிலைப் பத்தி நிறைய தகவல் இருக்கு. அங்க கடவுள்னு ஒருத்தர் இருக்காரு. அவரை சாமின்னும் சொல்றாங்க.’’
“நீ பார்த்தியா?’’
சட்டென்று கேட்டது முயல்.
“இல்லை. நான் மட்டும் இல்லே… மனிதர்களே இன்னும் அவரைப் பார்க்கலே.
ஒருவேளை அதுக்காகத்தான் மக்கள் அங்கே கூட்டம் கூட்டமா வராங்களோ என்னமோ?’’
“மக்கள் கூட்டம் கூட்டமா வருவாங்களா எதுக்கு?’’ குரங்கு குறுக்குக் கேள்வி கேட்டது.
“அதான் எனக்கும் புரியலே. ஆனா கடவுள், சாமின்னு ஒரு சிலையை வச்சி எல்லாருமே விழுந்து விழுந்து எதுக்குக் கும்பிடுறாங்கன்னு தெரியலே.
குரங்கண்ணே! உங்களுக்குக் கூட அங்க பெரிய சிலை வச்சிருக்காங்க.’’
“என்னது! எனக்குச் சிலையா? அப்ப நான் ஊருக்குள்ளே போனா பெரிய மரியாதை கிடைக்கும்னு சொல்லு.’’ என்று நெஞ்சை நிமிர்த்தி எழுந்து நின்றது குரங்கு.
“அதான் இல்லை.’’
“ஏன்?’’
“பெரிய சிலையாய் அழகா நிக்கிற உன்னை, கை எடுத்துக் கும்பிட்டாலும், நேர்லே பார்த்தா விரட்டி விரட்டி அடிக்கிறாங்களே அண்ணே.’’
“அய்யய்யோ! குரங்கு அண்ணாவுக்கு அவ்வளவுதான் மரியாதையா’’ என்றது யானைக் குட்டி.
“யானைக் குட்டி உன்னுடைய தலை மாதிரி செய்து, குண்டா இருக்கிற மனிதனோட உடம்புலே அதை ஒட்ட வச்சிட்டு, அதுக்கு முன்னாடி போய் நிறைய பேரு காதைப் பிடிச்சுக்கிட்டு உக்காந்து உக்காந்து எழுந்துருக்கிறாங்க.’’
“என்னா… கரடியாரே! ஊருக்கு போய் வந்ததாலே உன் விருப்பம் போல கதை உடுறியா?’’ என்று கோபப்பட்டது குட்டி யானை.
“நான் பாத்ததைச் சொன்னேன்.’’
“இதையெல்லாம் நாங்க நம்பணும்னு சொல்றியா?’’ – என்றது நரி.
“உங்க யாரையும் நான் நம்பச் சொல்லலே. மனிதர்கள் பல பேரு இதை எல்லாம் நம்புறாங்கன்னு தான் சொல்றேன்.’’
“அது சரி, மயக்கம் தெளிஞ்சு முழிச்ச பிறகு நீ கோயிலைப் பாத்தே… அதுக்குப் பிறகு?’’ என்று ஆவலோடு கேட்டது பறக்கும் அணில்.
“நல்ல வேளை… மனிதர்கள் யாரும் என்னைப் பார்க்கல! பல பேரு கண்ணை மூடிக்கிட்டு நின்னுட்டு இருந்தாங்க. ஆனா, பூஜை செய்யிறவர் மட்டும் முழிச்சுக்கிட்டே இருந்தாரு. நான் யாருக்கும் தெரியாம மெதுவா கோயில் கோபுரத்து மேல ஏறி ஒளிஞ்சிக்கிட்டேன்.’’
“அதெல்லாம் சரி… சாப்பாட்டுக்கு?’’ என்று பஞ்சவர்ணக் கிளி கேட்டது.
“பசி எடுத்துது. கோபுரத்தை விட்டுக் கீழே இறங்கினா மனிதர்கள் கிட்ட மாட்டிக்குவோம்னு பயந்து ஒரு மூலையிலே கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கிட்டேன்.’’
“சரியான தூங்கு மூஞ்சி. அடுத்து என்ன ஆச்சு? முழிச்சியா இல்லையா?’’ அணில் கேட்டது.
“கொஞ்ச நேரம் கழிச்சு முழிச்சுப் பார்த்தா இருட்டிப் போச்சு. கூட்டமே இல்ல! பூஜை செய்யிறவர் கோயிலை மூடிட்டுப் போறாரு.’’ “ஆமா… சாமி பத்திரமா இருக்கணுமில்லே! அப்பதானே அடுத்த நாளும் மனிதர்கள் வர முடியும்? அது என்ன நாம இருக்கிற காடா… ஆள் நடமாட்டம் இல்லாம இருக்க, அது ஊரு.’’ என்று ஏக்கப்பட்டுச் சொன்னது நரி.
“ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் மெதுவா கீழே இறங்கி வந்து பாத்தேன். சாமி பக்கத்துல நிறைய தேங்காய், வாழைப்பழம், பொங்கி வைச்ச இனிப்புச் சோறு இதெல்லாம் இருந்துது. எடுத்து வயிறு முட்டச் சாப்பிட்டேன்.’’
“சாமியா உனக்குச் சாப்பாடு கொடுத்தது?’’ முயல் கேட்டது.
“இல்லை… அதுக்கே மனிதர்கள் தான் சாப்பாடு தர்றாங்க. அதையும் சாமி சாப்பிடாததாலே எனக்குக் கிடைச்சுது. அவரு சாப்பிட்டு இருந்தா எனக்கு எப்படி கிடைச்சிருக்கும்?’’
“அதுவும் சரிதான். கடவுள் சாப்பிட மாட்டாருன்னு தெரிஞ்சுதான் இதையெல்லாம் வெச்சுட்டுப் போய் இருப்பாங்க. சரி… நீ அதுக்குப் பிறகு என்ன செய்தே?’’ என்று மான் கேட்டது.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல கரடி வாயைத் திறப்பதற்கு முன்…
“அது வயிறு நிறைஞ்ச பிறகு என்ன செய்ததுன்னு அப்புறம் சொல்லட்டும். காட்டுல வாழற நமக்கு அப்படி ஒரு கடவுளோ சாமியோ இல்லியே ஏன்? அதைப் பத்தி யாருக்காவது தெரியுமா?’’ என நரி கேட்டது.
“அதானே… மிருகங்களான நம்மளைவிட அதிக ஆற்றல்மிக்க மனிதர்களைக் காப்பாத்தவே ஒரு கடவுள் தேவைன்னா, அவங்களைவிட பலம் குறைச்சலா இருக்கிற மிருகங்கள் ஆன நமக்கு ஏன் கடவுள் இல்லை?’’ என குட்டி யானையும் குழப்பத்தோடு கேட்டது.
“நாம மகிழ்ச்சியா வாழவும், வயிறாரச் சாப்பிடவும், இத்தாப் பெரிய காடு இருக்கும்போது நமக்கு எதுக்கு கடவுள், சாமி எல்லாம். வாழற நாள் வரைக்கும் மகிழ்ச்சியா வாழ்ந்துட்டுப் போவோம்.’’ என்றது காட்டுப்பன்றி.
“அட… மனிதர்கள் பாம்பு, யானை, குரங்குன்னு நம்மளை மாதிரி மிருகங்களையும் கும்பிடுறாங்க.’’ என்றது கரடி.
முயல் தன் காதுகளைத் தூக்கியபடி முன்னால் வந்து… “நம்மளவிட பலமானவர்களை, அதுவும் நம்மளை விரட்டிப் புடிச்சு அடிச்சுக் கொன்னு தின்றவங்களைப் பாத்தா நாம பயந்து ஓடி ஒளியிறோம். அதே மாதிரி மனிதர்கள் நம்மளைப் பார்த்து பயந்துபோய் சிலையா வெச்சுக் கும்பிடறாங்களோ என்னமோ’’ என்றது.
“இருக்கலாம்… ஊருக்குள்ள ஒவ்வொரு இடத்திலே ஒவ்வொரு சாமி இருந்ததைப் பார்த்தேன். அது அதுக்கு வேற வேறமாதிரி இருப்பாங்க. இன்னொரு கோயிலுக்குப் போறவங்க… வேற மாதிரி இருப்பாங்க.’’ என்றது கரடி.
“நமக்கு எதுக்கு கடவுள் கவலை. அதை விட்டுத்தள்ளு. வயிறு முட்டச் சாப்பிட்டுட்டு அடுத்து நீ எங்கே போனே அதைச் சொல்லு.’’ என்றது அம்மா கரடி.
“கோயிலை விட்டு வெளியேவர ரொம்ப சிரமமாப் போச்சு.’’
“ஏன், என்ன ஆச்சு?’’ என்று பதற்றத்துடன் கேட்டது ஆந்தை.
“உன்னை மாதிரி இறக்கை இருந்திருந்தா சட்டுன்னு பறந்து வந்திருப்பேன். கோயிலைச் சுத்தி பெரிய மதில் சுவர். எப்படியோ ஏறி, தாண்டிக் குதிச்சு வெளியே வந்துப் பாத்தா… பெரிய மைதானம். பெரிய பெரிய கட்டடங்கள் எல்லாம் இருந்தன. ஒரே மாதிரி வரிசையா கட்டடங்கள் இருந்தன. அங்க பெரிய பெரிய மரங்களும் இருந்தன.
இருட்டு நேரம், மக்கள் நடமாட்டமே இல்லை., அதனாலே அந்த இடத்துக்குப் போய் பெரிய மரத்து மேல ஏறி அதோட உச்சிக் கிளையிலே போய் படுத்துட்டேன்.’’
(பயணம் தொடரும்)